காட்டுக்குள் ஓடி தப்பிக்க முயற்சி செய்தார் பிரபாகரன்: கூட்டாளி தகவல்
ராணுவம் நடத்திய இறுதிக் கட்டத் தாக்குதலின்போது காட்டுக்குள் ஓடி தப்பிக்க விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முயற்சி செய்தார், ஆனால் முடியாமல் போனது என்று அவரது கூட்டாளி தெரிவித்துள்ளார்.
ராணுவம் தனது தாக்குதலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தவே பிரபாகரன் அச்சமடைந்தார். ராணுவம் தோற்கடித்தால் தனி ஈழக் கனவு ஈடேறாது என்று அஞ்சிய பிரபாகரன் எப்படியாவது தப்பிக்கவேண்டும் என்று தன்னால் முடிந்த மட்டும் போராடிப் பார்த்தார். அப்போது வடக்குப்பகுதியில் ராணுவம் பாதுகாப்பு அரணை வலுப்படுத்தியிருந்தது. அதை உடைத்து காட்டுக்குள் புகுந்து தப்பிக்க முயற்சித்தார் பிரபாகரன்.
இந்த தகவலை அவரது நெருங்கிய கூட்டாளியும் இலங்கை அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளவருமான கோகுலம் மாஸ்டர் விசாரணையில் தெரிவித்துள்ளார். ராணுவம் நடத்திய இறுதி கட்டத் தாக்குதலின்போது பிரபாகரனுடன் இருந்தவர் மாஸ்டர்.
பிரபாகரன் தப்பிக்க முயற்சி செய்த தகவலை தன்னிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 3 மாதங்களுக்கு முன் மாஸ்டர் தெரிவித்தார்.
மே 18-ம் தேதி பிரபாகரன் வன்னி பகுதியில் கொல்லப்பட்டார். அதற்கு ஒரு நாள் முன்னர்தான் ராணுவ அரணை முறியடித்து புதுக்குடியிருப்பு வனப்பகுதிக்குள் தப்பியோடப் பார்த்தார் பிரபாகரன்.
தப்பும் முயற்சி நிறைவேறாவிட்டால் நம்மை ராணுவம் கூண்டோடு அழிக்கும்.
அப்படிப்பட்ட சூழ்நிலை உருவானால் இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைப்பது என்ற கனவு ஈடேறாது என்று பிரபாகரன் அப்போது கூறியதாக கோகுலம் மாஸ்டர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
மே 18-ம் தேதி காலையில் எங்களது தனி ஈழக்கனவு கலைந்து போனது என விசாரணை அதிகாரிகளிடம் மாஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள விஸ்வமடு பகுதியை ராணுவம் கைப்பற்றியதும் அருகேயுள்ள புதுக்குடியிருப்புப் பகுதிக்கு தனது முகாமை பிரபாகரன் மாற்றிக்கொண்டார். அங்குள்ள பகுங்கு குழிகளில் பதுங்கியவாறு சண்டையை வழி நடத்தினார்.
இலங்கைத் தாக்குதலை முறியடிக்க தமது படைக்கு 12 வயது சிறுவர்களையும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும் கூட பிரபாகரன் சேர்த்துக் கொண்டார். அவர்களுக்கு குறுகிய கால பயிற்சி கொடுத்து மக்கள் படை என்ற பெயரில் போரில் ஈடுபடுத்தினார் என்று மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment