ஒற்றுமை ஏன் எதற்காக? அழகி
எமது தமிழ் தொலைக்காட்சிகளைத் திறந்தாலே அங்கே பேசப்படுவது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் எமது போராட்டம் இவ்வளவு அழிவுகளையும் சந்தித்து தோற்றுக் கொண்டு இருக்கிறது என்பதேயாகும். பல நேரடி நிகழ்சிகளிலும் கூட பல தமிழர்கள் தொலைபேசியூடாக வந்து ஒற்றுமையில்லை - தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் - ஒட்டுக்குழுக்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் - எமது ஊர்வலங்களிலும் பார்த்த முகங்களையே காணக்கூடியதாக இருந்தது - எமது தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவார் என இப்படியே மாரடிக்கும், அரசியல் அறிவைப் பெறாமல் இவ்வளவு காலமும் இந்த தொலைக்காட்சிகள் ஊடாக பிதற்றி வந்திருக்கிறார்கள்.
1986 ம் ஆண்டே ரெலோ போராளிகளை ரயர் போட்டு கொளுத்தி எந்த தார்மீகங்களுக்கும் மதிப்பழிக்காது கொன்று குவித்த அன்றே தமிழர் போராட்டம் பகிரங்கமாக இந்த உலகிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை ஒற்றுமை இல்லை எனப் புலம்பும் இந்த பிரகிருதிகளுக்கு ஒரு போதும் உறைக்கவில்லை.
இதைவிட மேலும் நகைப்பிற்குரிய விடயம் இவர்கள் எல்லாம் உலக அரசியல் பேசுவதுதான். அமெரிக்க அரசியல், இங்கிலாந்து அரசியல் இந்திய அரசியல், உலக ராணுவ அரசியல் எல்லாவற்றையும் தண்ணீர்பட்ட பாடாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பேசிய தமிழ் ஈழ அரசியல் புலி அரசியல் தலைவர் அரசியல் - எங்கட தலைவர் அரசியல் எல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டு புதை குழி தோண்டிப் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக கரைத்து இவர்களுடைய சாம்பலையும் கடலிலே வீசி விட்டார்கள். இவர்களுக்கு நடந்தது முன்னமே பல தடவைகள் வரலாற்றில் நிகழ்ந்தவைதான். ஆனால் எல்லா அரசியலும் பேசிய இவர்களுக்கும் அதே வரலாறு ஏன் நிகழ்ந்தது?
ஏன் இவர்களுடைய அரசியல் இப்படி பரிதாபமாகரமான நிலைக்கு சென்றது? எதற்காக? எமது அப்பாவி தமிழினத்தின் உயிர்களோடும் உடமைகளோடும் பெண்களோடும் குழந்தைகளோடும் விளையாடினார்கள்? இவர்கள் விடை சொல்லியே ஆக வேண்டும். எமது மக்களை இந்த இழிநிலைக்கு கூண்டோடு கொண்டு சென்றது ஏன்? தமிழினம் தமது வரலாற்றில் ஒரு நேர உணவுக்கும், குடி நீருக்கும், உடுபுடவைக்கும் ஏங்கும் நிலைக்கு ஏன் கொண்டு வந்து விட்டார்கள்?
தியாகம் என்பது என்ன? மற்றவர்கள் துன்பப்படும் போது அந்த துன்பத்தை போக்கி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களுடைய முகங்களிலே மகிழ்ச்சியை உருவாக்கி தானும் மகிழ்ச்சியடைபவனே தியாகி. ஆனால் எமது போராட்டத்திற்குள் வந்தவர்கள் (ஒரு சிலரை தவிர) இப்படி நடந்தார்களா? ஈழ மக்களின் குருதியை குடித்தார்கள். அவர்களின் உழைப்பையெல்லாம் தட்டிப் பறித்தார்கள். ரௌடித்தனத்தாலும், கொலைகளாலும், பாலியல் வன்புணர்வுகளாலும் வாழ்க்கையின் சுக போகங்களை அடைவதற்கெனவே இயக்கங்களுக்கு சேர்ந்தவர்கள் பலர். இவர்களால் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தி விட முடியுமா?
புலம்பெயர் தமிழர்களை நோக்கினாலோ அவர்கள் பல வகையினர். 1986 ம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். போராட்டத்தை மாற்று இயக்கங்கள் மீது புலிகள் படுகொலைகளைப் புரிந்து காட்டிக் கொடுத்தபோது இதில் இருந்து தப்பி வந்தவர்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) உண்மையான போராளிகள்.
2) இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்து வெளிநாடு வந்தவர்கள்.
3) இவர்கள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள்.
இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும் சுயநலம் மிக்கவர்களும் இங்கு ஒன்று சேர்ந்தார்கள். எந்த அரசியல் நோக்கும் இல்லாமல் தங்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டும் கொலைகள் செய்தும் கப்பம் வாங்கியும் எமது போராட்டததை வலுவிழக்கச் செய்து விட்டார்கள். மக்கள் எல்லோரையும் புலிகள் ஈழத்திலே கொன்றொழிக்க உறுதுணையாக இணையம் மூலமும், வானொலி, தொலைக்காட்சி, ஊர்வலங்கள், பொதுக் கூட்டஙகள், கொண்டாட்டங்கள், கோயில்கள், தமிழ் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், நிதி சேகரிப்பு, வியாபார நிறுவனங்கள் என சமூகத்தின மூலை முடுக்கெல்லாம் நுழைந்து செயற்பட்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் புலம்பெயர் மக்கள் சிந்திக்க தவறி விட்டார்கள்.
ஆனால் இன்று ஒற்றுமை இல்லை, தோற்று விட்டோம் என நேரலைகளில் வந்து கூப்பாடு போடுகிறார்கள்!
இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் விடப்பட்ட தவறுகள் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறு விட்டவர்கள் தமது தவறுகளை மனந்துணிந்து அதே தொலைக்காட்சிகள் ஊடாக மன்னிப்பு கோர வேண்டும். புலம்பெயர் தமிழர்களை மிகவும் தவறாக வழிநடத்திய தீபம், தினேஸ், அனாஸ், டாக்டர் மூர்த்தி, இராஜமனோகரன், குமார் போன்ற முன்னணியில் நின்றவர்களும் இவர்களுக்கு பின்னணியில் நின்றவர்களும் அரசியலைக் கரைத்துக் குடித்த இவர்களைப் போன்றவர்கள் முரண்டு பிடிக்காமல் அரசியலில் இருந்து பேசாமல் ஒதுங்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் முழுவதும் அந்தந்த நாட்டு முகவர்கள் ஊடாக திருப்பி வழங்கப்பட வேண்டும். இவர்கள் விட்ட தவறுகளுக்கு மனம் வருந்த வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வீதி வீதியாக கத்திக் குழறி, உண்ணாவிரதம் இருந்து மிரட்டி, பாதைகளை மறித்து ஆட்டம் போட்டும் முள்ளிவாய்க்காலில் தலைவரோடு, ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்து பலியிட்டதற்கு, ஏன் அப்படி நடந்தது என்பதற்கு, இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி ஆய்வுகளும் காரணங்களும் தேடிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.
இதை விடுத்து ஒற்றுமை இல்லை, ஒற்றுமை இல்லை என திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. தமிழ் மக்களின் ஐக்கியத்தை தாங்களே ஒட்டுக்குழு துரோகிகள் என பிரித்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை என்றால் என்ன? தம் தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்டு மனிதர்களாக செயற்பட வேண்டும். நல்ல காரியங்கள் நல்ல மனிதர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மக்களால் அவர்களின் விருப்புக்களோடு 100 வீதம் செயற்பட வேண்டும். எமது சமூகம் நற்சிந்தனைகளால் வளர்க்கப்பட வேண்டும். ஒருவன் இன்னொருவனை ஏமாற்றினால் ஒவ்வொருவனும் தலைகுனிய வேண்டும். ஏமாற்றுபவனைத் திருத்த முற்பட வேண்டும். ஏமாற்ற நினைப்பவனுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் நலன்களை வளர்த்துக் கொண்டதால் ஒரு இனமே இன்று கண்முன் அழிந்து கொண்டிருக்கிறது.
நாம் ஓரளவிற்கேனும் ஜனநாயகம் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறோம். இந்த நாடுகளில் இருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். பொது விடயங்களில் எப்படி நடக்க வேண்டும், பொதுப் பணத்தை எப்படி கையாள வேண்டும் (கையாட அல்ல) என்பவற்றைக் கற்றுக் கொண்டாலே எமது மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.
விடுதலை என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்றொழித்த பிரபாகரனுக்கு பின்னால் அணிதிரளுங்கள் என்று சொன்னதும் - சொல்வதும் மிகவும் வேதனையான விடயமே. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு தற்கொலைக் குண்டுகளைக் கட்டி விட்டு; தமது பிள்ளைகளை அரச பரம்பரை மாதிரி வளர்த்ததற்கு பெயர் போராட்டமா?
இறுதியாக ஒற்றுமை ஒற்றுமை என போலியாக கூக்குரல் இடுபவர்கள் தமது உள்ளங்கiளில் கை வைத்து சொல்லட்டும் - என்னத்திற்கு ஒற்றுமை வேண்டும்? இப்பொழுதாவது தமிழ் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தை சுயநலமற்ற தமது வாழ்க்கைக்கு பொதுப் பணத்தை கையாடாத நல்லவர்களை முன்னிறித்தி சரியான சிந்தனைகளோடு எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்லலாம். இப்பொழுதும் நாம் சிந்திக்கவில்லையென்றால் இப்போதிருந்து எமது ஈழத்தில் எமக்கான நிலம் இல்லாமலே போய்விடும். தயை செய்து புலம் பெயர் தமிழர்கள் விழித்து செயற்படுங்கள்.
அழகி
0 விமர்சனங்கள்:
Post a Comment