ஷியாம்லால் ராஜபக்ஷ கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உண்மையல்ல
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உறவினரும் அம்பாந்தோட்டை மாவட்ட ஆளும் கட்சி எம்.பி.நிருபமா ராஜபக்ஷவின் சகோதரருமான ஷியாம்லால் ராஜபக்ஷவின் மரணம் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்டது என்பதை தான்சானியப் பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
அதேசமயம், மரணத்திற்கான உண்மையான காரணத்தை தீர்மானிப்பதற்காக பிரேத பரிசோதனை நடத்துவதற்காக டார் எஸ்சலாமிலிருந்து ஆருஷாவுக்கு டாக்டர்களை வரவழைப்பதற்கு தாங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக தான்சானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்கறிஞராக ஷியாம்லால் பணியாற்றி வந்தார். ஆருஷாவில் மர்மமான சூழ்நிலையில் இறந்த நிலையில் அவர் கண்டு பிடிக்கப்பட்டிருந்தார். அவருடைய வீட்டிலேயே அவர் இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். வீட்டில் திருட வந்த குழுவால் அவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக அவருடைய குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
திருடர்களுடன் போராடியபோதே அவர் இறந்திருக்கலாமென அந்த வட்டாரங்கள் கூறியிருந்தன.
ஆனால், ஆருஷாவிலுள்ள பொலிஸார் இதனை நிராகரித்துள்ளனர். கடந்த புதன் கிழமை ஷியாம்லால் தனது வீட்டிற்கு நண்பர்களை அழைத்திருந்ததாகவும் இரவு 11 மணிவரை அவர்களுடன் மதுபானம் அருந்தியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அவருடைய விருந்தினர்கள் சமுகமளித்திருந்த வேளையில் ராஜபக்ஷ நல்ல நிலையில் இருந்ததாக ஆருஷா பிராந்திய பொலிஸ் தளபதி பசிலியோ மாத்தேய் "திஸ்டே'க்கு கூறியுள்ளார்.கொள்ளையர்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உண்மையல்ல என்றும் விருந்தினர்கள் உள்ளே வருவதற்காக வாசல் கேற்றை அவர் திறந்துவிட்டதாகவும் அதிக நேரம் வரை அவர்கள் மகிழ்ச்சியாக கதைத்தவாறும் பியர் அருந்தியவாறும் இருந்ததாக அவருடைய பாதுகாவலர் கூறியதாக மாத்தேய் தெரிவித்திருக்கிறார்.
மறுநாள் காலை தரையில் ஷியாம்லால் வீழ்ந்து கிடந்தபோது வீட்டில் பணிப்பெண் கண்டதாகவும் மூக்கிலிருந்து இரத்தம் ஓடியிருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
?ஆருஷாவுக்கு வருமாறு டார் எஸ்சலாமிலுள்ள டாக்டர்களுக்கு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். மரணத்திற்கான உண்மையான காரணத்தைத் தீர்மானிக்க பிரேத பரிசோதனை நடத்துமாறு நாம் கேட்டுள்ளோம் என்று பசிலியோ மாத்தேய் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த தினம் இரவில் ஷியாம்லாலின் வீட்டிற்கு வருகைதந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டுகொள்வதற்கு பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆருஷாவை தலைமையாகக் கொண்ட ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஷியாம்லாலும் அவரின் மனைவி பிரசாந்தியும் சட்டத்தரணிகளாகப் பணிபுரிந்தனர்.
1994 ருவாண்டா இனப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களென சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நீதிமன்றத்திலேயே இவர்கள் வழக்கறிஞர்களாக பணிபுரிகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment