"உருத்திரகுமார் உள்ளிட்ட மூவரை நாடு கடத்துமாறு கோரவுள்ளோம்"
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட மூன்று முக்கிய நபர்களை நாடு கடத்தக் கோரப் போவதாக பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்~ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிங்க நாளிதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக ஜெயந்த ஞானக்கோன் செயல்பட்டு வந்துள்ளார். இவரது சகோதரரான சார்ள்ஸ் ஞானகோன் என்பவர் சிங்கப்பூரில் இருந்தவாறு புலிகளுக்காக செயல்பட்டு வந்துள்ளார். இந்தத் தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள கே.பி. விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர விஸ்வநாதன் உருத்திரகுமாரன்.
இவர்கள் மூவரையும் நாடு கடத்துமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கோருவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஞானகோன் சகோதரர்களில் மூத்தவர் சார்ள்ஸ். இவரைத்தான் சில காலத்திற்கு முன்பு ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் இரகசியமாக சந்தித்து புலிகளுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முயன்றதாக ராஜபக்ச கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது.
ஜெயந்தா ஞானகோன் ஏர் சிலோனில் விமானியாக பணியாற்றியவர். மறைந்த ஜெயவர்த்தனவின் நண்பர் ஆவார். 1983ம் ஆண்டு இனக் கலவரம் வெடித்த பின்னர் இவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஜெயந்தா.
சார்ள்ஸ் ஞானகோன் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டை வைத்திருப்பவர். கடந்த 2005ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர். பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். விடுதலைப் புலிகளுக்காக பெருமளவில் ஆயுதங்களையும் விநியோகம் செய்து வந்தவர். இவர்கள் தவிர உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். சிறந்த சட்ட நிபுணர்.
இவர்கள் மூன்று பேரையும் இலங்கைக்கு நாடு கடத்தி, விசாரிக்க இலங்கை அரசு தற்போது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆனால் அது எளிதாக இருக்குமா என்பது சந்தேகம் என்ற பேச்சு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment