ஈ.பி.டி.பி.யின் அடிச்சுவட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…
தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன் வைத்து அவை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கொழும்பிலுள்ள இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வொன்றையே தாம் எதிர்பார்ப்பதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தொடர்ச்சியாக 13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பாற் சென்று தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதாகத் தெரிவித்து வரும் நிலையில் சுரேஸ் பிரேமச்சந்திரனோ 13வது திருத்தச் சட்டம் இறந்து உக்கிப்போனதொன்று என்றும் அதனால் தமிழ் மக்களுக்கு எத்தகைய பயனும் கிடையாதெனவும் கண்மூடித்தனமாக உளறிக்கொண்டிருந்ததுமல்லாமல் அச்சட்டத்தை கேலியும் கிண்டலும் செய்தமையை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது.
யாழ் மாநகர சபைத் தேர்தல் காலத்திலும் சரி 13வது திருத்தம் குறித்து தெரிவித்த கருத்துக்களை தானே மறுத்து எந்தச் சட்டம் உக்கி இறந்து போனதென்று வாய்கிழியக் கத்தினாரோ அதே சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு அப்பாலும் செல்ல வேண்டுமென இன்று கூற முற்பட்டுள்ளது. அவரது அரசியல் சந்தர்ப்பவாதத்தையே மீண்டும் அம்பலப்படுத்துகின்றது.
சுரேஷ் பிரேமச்சந்திரனின் அரசியல் வாழ்க்கையையும் அவரது கடந்த கால வரலாற்றையும் அதாவது இந்திய இலங்கை ஒப்பந்த காலத்திலும் அதற்கு முந்திய ஈ.பி.ஆர்.எல்.எவ் காலத்திலும் சரி வட கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்த போதும் சரி காலத்திற்குக் காலம் தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக எவரோடும் எந்தச் சமயத்திலும் கூட்டுச் சேர்ந்து தன்னை வளப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளமையை அவதானிக்க முடியும்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னரும் சரி பின்னரும் சரி தீவிர புலி எதிர்ப்பு அரசியல் வாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சுயலாப அரசியலுக்காகத் தான் சார்ந்த கட்சியைப் பிளவுபடுத்தி புலித்தலைமையுடன் ஐக்கியப்பட்டு அவர்களது கொள்கைகளை முன்னெடுப்பதில் முதன்மையானவராக நிலைநிறுத்திக் கொள்ள முயன்றதையும் தமிழ் பேசும் மக்கள் நன்கு அறிவார்கள்.
புலித்தலைமையின் அழிவைத் தொடர்ந்து குமரன் பத்மநாதனும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று நிபந்தனைகள் என்னும் சாட்டில் அரசுடன் ஒத்துழைப்பதற்குத் தான் தயார் என்னும் செய்தியை அரச தரப்பிற்கு நாசூக்காகத் தெரிவித்துள்ளார்.
நலன்புரி முகாம்களிலுள்ள மக்கள் மழையால் பெரிதும் கஷ்டப்படுவதாக கண்ணீர் வடிப்பதுடன் யாழ் மாவட்டத்திலுள்ள சகல இராணுவ முகாம்களையும் அகற்றவேண்டும் என்னும் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்னி மக்கள் நிவாரண முகாம்களுக்கு வருவதற்கு முன்னர் புலித்தலைமையால் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் போன்ற பிரதேசங்களில் மக்கள் பலவந்தமாக துப்பாக்கி முனைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலங்களிலும் சரி, அவர்களது பிள்ளைகளை பலவந்தமாக பிடித்து யுத்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய காலங்களிலும் சரி அந்த மக்களுக்காக அனுதாபம் காட்டாத சுரேஸ் பிரேமச்சந்திரன் தற்போது அந்த மக்களுக்காக தான் அரசுடன் பேரம் பேச முற்படுவதாகக் காட்டிக்கொள்வது வழமைபோன்று அவரது அரசியல் வங்குரோட்டுத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது.
நடந்து முடிந்த மாநகர சபைத் தேர்தலில் அரசுடனான இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியலை முன்வைத்து அத்தேர்தலில் கூட்டமைப்பை அதுவும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு ஈ.பி.டி.பி. தோற்கடித்தது மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்காக தீர்விற்கு 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதற்கு அப்பாலும் சென்று தீர்வு காணவேண்டுமென்றும் கொள்கையை முன்வைத்துள்ள நிலையில் தற்போது கூட்டமைப்பினரும் ஈ.பி.டி.பி.யால் முன்வைக்கப்பட்டுள்ள நடைமுறைச் சாத்தியமான வழிமுறைதான் சரியானதென்பதை உணர முற்பட்டுள்ளது ஒரு நல்ல அறிகுறியாகும்.
வன்னி மக்கள் தங்கள் உயிரைப்பாதுகாத்துக் கொள்ளும் உரிமையை இழந்து திறந்த வெளிகளில் போதிய உணவோ உறக்கமோ இல்லாது தமது சொத்துக்களை இழந்து பணயக் கைதிகளாக புலித்தலைமையால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் அத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகவும், ஒத்தாசையாகவும் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனும் கூட்டமைப்பும் இன்று அதே மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதின் மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்.
தமிழ் பேசும் மக்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடக்கம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் வரை கடந்த காலத்தில் மக்கள் சொல்லொனா துன்ப துயரங்களை அனுபவித்தபோது வாய் மூடி மௌனிகளாகவிருந்து தம்மையும் தமது குடும்பங்களையும் பாதுகாத்தமையை மக்கள் ஒருபோதும் மறந்து விடமாட்டாகள் என்பதால் எதிர்காலத்தில் கூட்டமைப்பை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டாகள் என்பது நிதர்சனமான உன்மையாகும்.
சிவப்பிரியன்
யாழ்ப்பாணத்திலிருந்து
0 விமர்சனங்கள்:
Post a Comment