கே.பி.யை கைது செய்ய ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட மொஸாட் அதிரடி நடவடிக்கை.
சர்வதேசப் பிரசித்தி பெற்ற புலனாய்வு அமைப்புகளான ஐக்கிய அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பிரிட்டனின் எம்.ஐ.6, இந்தியாவின் றோ போன்ற பிரபல உளவு அமைப்புகள் உட்பட நோர்வே, கனடா போன்ற நாடுகளில் செயற்படும் புலனாய்வு சேவை அமைப்புகள் கூட முற்றிலும் எதிர்பார்த்திருக்காத வகையில் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினர் புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தலைவர் கே.பி. அல்லது குமரன் பத்மநாதனை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அவ்வாறே பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், நோர்வே, ஜேர்மனி, அவுஸ்திரேலியா,சுவீடன் போன்ற சுமார் 12 நாடுகளில் இயங்கிவரும் புலிகள் இயக்கத் தலைவர்கள், பிரதிநிதிகள், முகவர்கள், ஆதரவாளர்கள், புலிகளுக்கு ஆதரவளிக்கும் மேற்படி நாடுகளிலுள்ள அரசியல் பிரமுகர்கள் உட்பட எந்தத் தரப்பினருமே இவ்வாறு கே.பி. அதிரடியாக ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்படுவார் என்று நினைத்திருக்கமாட்டார்கள். இந்த வகையில் புலனாய்வுத் திறமையும் தந்திரமும் நுட்பமும் கொண்டதாக ஸ்ரீலங்கா புலனாய்வுச் சேவை செயற்பட்டுள்ளது.
கே.பி.யைக் கைது செய்யும் இந்த இரகசியத் திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப இந்த அதி இரகசியத் திட்டம் பற்றி பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ உட்பட ஒரு சில உயர்மட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், புலனாய்வு உத்தியோகத்தர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள் எனவும் இவர்களின் திட்டமிடலின் படி மிகவும் நம்பிக்கையும் புலனாய்வுத் திறமையும் வாய்ந்த விசேட புலனாய்வுக்குழு ஒன்றே இவ்வாறு கே.பி.யை அதிரடியாகக் கைது செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் கைது நடவடிக்கை இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பாகிய மொஸாட் அமைப்பின் இரகசிய செயற்பாட்டு முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு கே.பி. தப்பிச்செல்ல முடியாத வகையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கே.பி.யைக் கைது செய்வதற்காக ஸ்ரீலங்கா பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு முன்கூட்டியே தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கிவிட்டது. அடிப்படையான தகவல்கள் கடந்த மே மாதம் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் ஏனைய தலைவர்களும் கூட்டாகக் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் இரகசிய நிலையங்களிலிருந்தும் மற்றும் தேடுதல்களின் போதும் கண்டுபிடிக்கப்பட்ட இரகசியக் கடிதங்களிலிருந்து பெறப்பட்டன. குறித்த இரகசியக் கடிதங்களிலிருந்து கே.பி.யின் சர்வசேத நடமாட்டங்கள் தங்கியிருக்கும் நிலையங்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்புப் புலனாய்வுத்துறை சேகரித்துக் கொண்டது.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் மேற்படி பாதுகாப்பு உயர்மட்டத் தலைவர்களால் கே.பி.யைக் கைது செய்ய இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக பூர்வாங்க நடவடிக்கைகளை பாதுகாப்பு உயர்மட்டம் மேற்கொண்டிருந்தது. இந்த வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவும் உதவிகளும் நட்புறவான சில நாடுகளின் பாதுகாப்புத் துறைகளிடமிருந்து பெறப்பட்டன. அத்துடன், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பாதுகாப்புத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தின் முக்கிய நபர்களும் கே.பி. பற்றிய தகவல்களைத் தெரிவித்திருந்தனர். மொத்தத்தில் மிக நுட்பமான முறையில் இந்த கே.பி. கைதுத் திட்டம் மேற்படி பாதுகாப்பு உயர்மட்ட உத்தியோகத்தர்களால் தயாரிக்கப்பட்டு அதை நிறைவேற்றத் தகுதியான அதிகாரிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த கே.பி.கைது அதிரடி நடவடிக்கை பற்றி மேலும் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப துருக்கி நாட்டின் பயங்கரவாத அமைப்பாகிய பி.கே.கே. குர்டிஷ் அமைப்பின் அப்துல்லா ஒசலான் எனப்படும் தலைவரைப் பிடிக்க துருக்கி அரசின் விசேட படையணி எவ்வாறு அதிரடி நடவடிக்கையாக அவரைக் கைது செய்ததோ அதேவிதமாகவே கே.பி. யையும் ஸ்ரீலங்கா விசேட புலனாய்வு அணியினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கினியாவிலிருந்து இவ்வாறு அப்துல்லா ஒசலான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவருடைய செய்மதித் தொலைபேசியில் மேற்படி துருக்கி பாதுகாப்பு விசேட படையணியினர் தொடர்புகொண்டு ஒசலான் தங்கியிருந்த நிலையத்தை உறுதி செய்து கொண்டதாகவும் அவரைக் கைது செய்யும் வரையில் ஒசலானின் செய்மதித் தொலைபேசிக்கு அழைப்புகளை விடுத்து அவருடைய நிலையத்துக்குச் சென்று அவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேமாதிரியே கே.பி. யின் அனைத்துத் தொலைபேசித் தொடர்புகளையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிய இரகசியக் கடிதங்களிலிருந்து பாதுகாப்புத் துறையினர் அறிந்து கொண்டு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை விடுத்து கே.பி. தங்கியிருந்த நாடு மற்றும் குறித்த நிலையம் பற்றிய தகவல்களை உறுதிசெய்து கொண்டனர்.
மலேசியாவிலுள்ள கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களைச் சேர்ந்த சில தொலைபேசித்துறை வல்லுநர்களின் உதவியையும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவினர் முன்னரே பெற்றிருந்தனர். இதன் மூலம் பிரபாகரனுக்கும் கே.பி.க்கும் இடையில் நடந்த செய்மதித் தொலைபேசித் தொடர்புகளும் கிடைத்துள்ளன. இவ்வாறு பல வகையிலும் கே.பி. அந்தச் சந்தர்ப்பத்தில் கோலாலம்பூரில் பர்ஸட்டிரியூன் ஹோட்டலில் தங்கியிருப்பதை ஸ்ரீலங்கா விசேட புலனாய்வு அணியினர் உறுதி செய்து கொண்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலையில் குறித்த ஹோட்டலுக்குச் சென்று கே.பி.யை அவருடைய அறையில் வைத்துக் கைது செய்தனர்.
உடனேயே அவரை மலேசியாவிலிருந்து கொழும்புக்கு குறித்த பாதுகாப்புப் புலனாய்வு அணியினர் கூட்டி வந்துள்ளனர். ஆனால், மறுநாள் இரவு புலிகளின் சர்வதேச இணையத்தளங்கள் கே.பி. 6 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக அறிவித்தன. இதைக் கேட்டவுடன் கே.பி.யுடன் பெருந்தொகையிலான நிதித் தொடர்புகள் மற்றும் ஆயுதக் கொள்வனவுத் தொடர்புகளை வைத்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பிரமுகர்களும் மற்றும் அரசசார்பற்ற அமைப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கே.பி.எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பதையிட்டுத் திகிலடைந்த அமெரிக்காவிலுள்ள புலிகளின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் கே.பி. எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய தகவலை வெளியிடும்படி ஸ்ரீலங்கா அரசிடமும் சம்பந்தப்பட்ட நாடுகளிடமும் கோரியுள்ளார். அதுபற்றி விபரம் தெரியாத பட்சத்தில் உடனே விசாரணைகளை மேற்கொள்ளும்படி மலேசிய அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு மேற்படி தரப்பினர் கே.பி. கைது செய்யப்பட்டதையிட்டுத் திகில் அடைந்திருப்பதற்குக் காரணம் புலிகளுடன் அவர்களுக்கிருந்த நிதித் தொடர்புகள் மற்றும் ஆயுத உபகரணங்கள் கொள்வனவுத் தொடர்புகள் கே.பி. மூலமாக வெளியாகிவிடும் என்ற அச்சமே ஆகும்.
எவ்வாறாயினும் அந்தத் தகவல்கள் கே.பி. மூலமாக விரைவில் வெளிவரவே போகிறது. இந்த நிலையில், கே.பி. வழங்கும் தகவல்கள் மேற்படி உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் தரப்பினர்கள் அத்துடன், வெளிநாட்டு அரசாங்கங்கள் பற்றிய சட்டபூர்வமான நிரூபணங்களாகவே கருதப்படலாம். அதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசு மேற்படி தரப்பினர்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமே பயங்கரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை ஊக்குவித்த வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள், அரசாங்கங்கள் பற்றிய தகவலை சர்வதேசம் பகிரங்கமாக அறிந்து கொள்ள முடியும்.
(திவயின)
0 விமர்சனங்கள்:
Post a Comment