திடீரெனப் பணக்காரர்களான பாதுகாப்பு அதிகாரிகள்: விசாரணைகள் ஆரம்பம்
இரவுடன் இரவாக இலட்சாதிபதிகளாகிய சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கும், இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசாரணை நடைபெறுவதாகவும் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளின் உளவாளிகளாகப் பல சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும், பொலிஸாரும் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இதனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்கான முயற்சி போன்றவற்றிற்கான திட்டங்களை வகுப்பதில் இந்த சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்புபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பொலிஸ் அத்தியட்சகர், இராணுவ லெப்டினட் கேணல் மற்றும் இராணுவ மேஜர்கள் சிலர்; இந்தச் சதித்திட்டங்களில் தொடர்புபட்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
இதனைவிட இன்ஸ்பெக்டர் தரத்திலுள்ள பல்வேறு பொலிஸாரும், மேஜர் தரத்திற்குக் கீழுள்ள இராணுவத்தினர் பலரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி, அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அமைச்சர்களைப் படுகொலை செய்யும் திட்டங்களுக்கு உதவியதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய இராணுவ மேஜர் ஜென்ரல் அதிகாரி ஒருவரும், கேணல் ஒருவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருந்ததாக இவர்கள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரி ஒருவர் கூறிள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்த பலருக்கு வெளிநாடுகளில் வீடுகளும், சொகுசு வாகனங்களும் வழங்கப்பட்டிருந்ததாகவும், அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மற்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு உதவிபுரிந்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரேக்கு இங்கிலாந்தில் வீடொன்றும் 6-7 சொகுசு வாகனங்களும் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment