கனேடிய தமிழ் மாணவர் சங்கத்தின் தலைவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்
கனடாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை சேகரித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவரின் பல புகைப்படங்களை எவ்.பி.ஐ.புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது.
அவர் இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் இருந்த காட்சி கொண்ட படத்தையும், இயந்திர துப்பாக்கி ஒன்றை இயக்கும் படத்தையும் எவ்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
29 வயதான சதா சரத் சந்திரன் என்ற இவர், புலிகளுக்கு, வானை நோக்கி ஏவக்கூடிய ஏவுகணை கொள்வனவிற்கு துணை புரிந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் அக்டோபர் ஆறாம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படும் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் ஆயுள் தண்டனைக்குட்படுத்தப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மற்றொரு கனேடியரான நடராசா யோகராசாவும் அதே தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இவர்களைத் தவிர சகிலால் சபாரட்ணம் என்ற கனேடிய தமிழ் காங்கிரஸின் தகவல் தொடர்பு கணிப்பாளர் நவம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
அத்துடன், மேலும் மூன்று கனேடியர்கள் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
2006 ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி நியுயோர்க் லோங் ஐலண்ட் பகுதியில் ஆயுத ஒப்பந்தகாரர் ஒருவருடன் பேச்சு நடத்திய சரத் சந்திரன் நிதி ஒரு பிரச்சினை அல்ல என குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் கனடாவில் நிதி சேகரிப்பு குறித்து கலந்துரையாடல்களை நடத்தி அதனடிப்படையில் நிதிகளை சேகரித்தார்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கனடாவின் இரகசிய புலனாய்வு அறிக்கையின் படி, விடுதலைப் புலிகளுக்கு வருடமொன்றுக்கு 12 மில்லியன் டொலர்கள் நிதி சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment