முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்
வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு.
இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது. 15000 பேருக்குமேல் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும் அவர்கள் பற்றிய விபரம் தெரியவரவில்லை எனவும் மனிதஉரிமை அமைப்புகள் கூறுகின்றன. புலிகளின் உறுப்பினர்களிலிருந்து புலிக்கு சாப்பாடு கொடுத்தவர்வரை சுழியோடி தேடிப்பிடித்து அழிப்பதுதான் புலியழிப்பு என சொல்வதை நாம் கேட்டாகவேண்டியிருக்கிறது. இது இந்த இடைத்தங்கல் முகாமின் வாழ்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்குமெனின், இந்த மக்களின் துயரம் நீளவேசெய்யும்.
இப்போ வெள்ளம் இந்த முகாமை சிப்பிலியாட்டுகிறது. கடும் மழையில் கூடாரங்கள் குறுகிப்போயிருக்கின்றன. சுமார் 3 இலட்சம் மக்களின் கதி இன்னும் பரிதாபத்துக்கு உரியதாக மாறியிருக்கிறது. வெள்ளம் வடிந்துபோய்விடும்போதுகூட நோய்களை விட்டுச் செல்லும் அபாயம் எதிர்காலத்துக்கு உரிய அவலமாகியிருக்கிறது. அவர்கள் ஆற்றாமையில் சுற்றிக் காவல் நின்ற இராணுவத்தினருக்கு கற்களால் எறிந்துமிருக்கிறார்கள். இவர்களின் சுதந்திரமான வெளியேறலுக்கு இந்த நிலையிலும்கூட தடைவிதிக்கும் அரசபயங்கரவாதிகளுக்கும் இவர்களை கேடயமாப் பாவித்து வெறியாட்டமாடிய புலிகளுக்கும் -மக்கள்மீதான கரிசனையில் அவர்கள் அபிலாசைகளில்- வித்தியாசம்தான் என்ன?
இந்த வெள்ள அனர்த்தங்களுக்கு இலங்கை அரசு ஐநாவை குற்றஞ்சாட்டுகிறது. ஐநா மறுக்கிறது. ஓடிப்பித்து விளையாடுகிறார்கள். வெள்ளவடிகால் அமைப்புமுறைகளுக்குள்ளும் சுடாரத்தின் வலுவற்ற தன்மைகளுக்குள்ளாலும் அவர்கள் இந்த கண்ணாமுச்சி விளையாட்டை ஆடுகிறார்கள். உயிர்களோடு விளையாடுவதில் இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை வன்னியுத்தத்தின்போது நிருபித்தவர்கள்- இந்த முகாமிலுள்ள மக்களின் வசதிகள் பற்றிய ஐநாவின் செல்லமான முறையீடுகளைக்கூட இலங்கை அரசு நிவர்த்திக்கவேயில்லை. உலகில் எரிந்துகொண்டிருக்கும் தற்போதைய பிரச்சினைகள் எதிலும் உருப்படியாய் அசைவியக்கம் செய்யாத மனிதர் பான்கீமூன். இவரின் இந்த ஸ்லோமோஷன் பற்றி நோர்வேயின் ஐநா தூதுவர் ஜுல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாக நோர்வேயின் தினசரிப் பத்திரிகையான ஆவ்தென்போஸ்டன் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வந்தன. இந்த இலட்சணத்தில் இந்த மக்களின் சுதந்திரமான வெளியேறலுக்கு ஐநா இலங்கை அரசை பணியவைக்கலாம் என எண்ணவா முடியும்.
தேர்தலுக்கு ஒருசில நாட்களின் முன் 3000 பேரை முகாமிலிருந்து மீட்டு எடுத்தார் டக்ளஸ். கூட்டமைப்புக்கான வாக்குச் சேகரிப்பில் இவ்வாறான நம்பிக்கைகளைக் கொடுத்து எதிர்கால முன்னறிவிப்பைச் செய்யும் ஒரு தேர்தல் நாடகமாக இது அரங்கேறியிருக்கிறது. தேசியக் கட்சியில் கரைந்து போனவர்களும் வெற்றிலைச் சின்னத்தில் அடகுபோனவர்களும் பெற்ற வாக்குளைவிட தமிழ்மக்களின் தனித்தன்மைகளுள் தாம் நிற்பதாகக் காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புளொட் என்பன எதிர்பாராதளவு வாக்குகளைப் பெற்றுள்ளது. இவர்களெல்லாம் தமக்கு தோல்வியைத் தந்திருக்கக்கூடிய வெற்றிலை நிழலுக்குள் இளைப்பாறாததுக்கு சந்தோசப்பட்டார்களே யொழிய தனியடையாளங்களைப் பேணும் ஒரு கோட்பாட்டுக்காகவல்ல. எதிர்காலத்தில் எந்த அடிபணிவுகளையும் இவர்கள் நிகழ்த்தலாம். ஆனால் மக்கள் இனரீதியிலான ஒடுக்குமுறைகள் நிகழும்வரை தங்கள் தனியடையாளங்களை ஒவ்வொருவடிவிலும் தேடுவார்கள். இது இந்தத் தேர்தலிலும் அவர்கள் பூசிய புள்ளடியிலும் ஒட்டியிருக்கிறது.
வேடிக்கை என்னவென்றால் யாழ் மாநகரசபைத் தேர்தலில் 18 வீதமான மக்கள் வாக்களித்து அதில் அரைவாசிக்கும் குறைவான வீதத்தில் பெற்ற வாக்குகளில் வெற்றியை அறிவிக்கும் வெட்கக்கேடுதான். இந்த வெற்றியில் டக்ளஸ் ஏமாற்றமடைந்ததாக வந்த செய்திகள் ஒரு ஜனநாயகக் கண்ணோட்டத்திலா அல்லது தம்மை தமது சின்னத்தில் போட்டியிட விட்டிருந்தால் அதிக வாக்குகளைப் பெற்றிருக்க முடியும் என ராஜபக்சவுக்கு சுட்டவா என நாம் சந்தேகப்பட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நேரத்திலேயே யாழில் நடந்த தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டார்கள். இப்போ 18 வீதம். தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என ராஜபக்ச சொல்லிச் சில காலமாகிறது. இதை தேர்தலால் தேர்தல் சலுகைகளால் செய்யமுடியாது என்பதை மக்கள் இப்போ சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக 60 இலிருந்து 70 வீதம்வரை வாக்குகள் தேர்தல்களில் அளிக்கப்படுவது பொதுவாக இருக்கும். 18 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளும் ஒரு தேர்தலை மக்கள் ஆணையின் முடிவாக எடுப்பது கேலிக்கூத்தானது. இந்த வாக்களிப்பு வீழ்ச்சிக்கு காரணமானது எது என தேடும் அளவில் ஜனநாயகப் பண்பு இவர்களிடம் இருக்கவா போகிறது. அரசியல் நீரோட்டத்தின் இலட்சணம் மக்களின் தேர்தல் மீதான அக்கறையின்மையின் மூலம் அம்மணமாயிருக்கிறது. தேர்தல் பற்றிய ஊடகங்களின் சுதந்திரமான செய்தியிடலை அரசு தடைசெய்திருந்தமையையும் இதற்குள் பொருத்திக்கொள்ளலாம்.
வவுனியா முகாம்களின் தவிர்க்கமுடியாமை புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளிலோ புலிப்போராளிகளை கண்டறிவதிலோ மட்டும் தங்கியில்லை. சுமார் 3 இலட்சம் மக்களின் சமூக அசைவியக்கம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. குழந்தையின் பிறப்பிலிருந்து முதுமையின் மரணம்வரை அது தன் சமூக பண்பாட்டுத் தளங்களில் சமூகச் சிதைவை ஏற்படுத்துகிறது. உடல் உள ரீதியில் தனிமனிதர்களை அது சிதைக்கிறது. பாடசாலைக்கு பிரவேசிக்க வேண்டிய வயதெல்லையில் சுமார் 8000 சிறிசுகள் இந்த முகாமுக்குள் முகிழ்த்திருக்கிறார்கள் என தகவல் வருகிறது. இனவழிப்பின் நிகழ்வுப்போக்கில் வைத்து இது மதிப்பிடப்பட வேண்டியது.
அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் தொகை வன்னிக்குள் அடைபட்டிருக்கின்ற மக்களின் தொகையைவிட கூடுதலானது... அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் இதனால் அங்கு நடைபெறுவது ஒரு இனவழிப்பு அல்ல என்றும் தடாலடியாய் கவனயீர்ப்புகளை நடத்தும் (சுசீந்திரன் போன்ற) புலம்பெயர் புத்திசீவிகள் சிலர்க்கு வகைதொகையின்றி ஒரு இனம் முழுமையையும் அழிப்பதுதான் இனவழிப்பு என்ற புரிதல் இருக்கிறதா என குழம்பவேண்டியிருக்கிறது. கொலம்பஸ்ஸினால் 5 நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழித்தொழிக்கப்பட்டு எஞ்சிப்போன செவ்விந்தியர்கள் இப்போதும் வாழ்கிறார்கள் என்பதால் அந்த வரலாற்றுக்கொடுமைமிகு செயல்களை இனவழிப்பு இல்லை என வாதிட முடியுமா என்ன?
இனவழிப்பு என்பது ஒரு நிகழ்வுப் போக்கு. காலம்காலமாக இனவழிப்பு பற்றிய வரைவிலக்கணப்படுத்தல்களை தத்துவவியலாளர்கள் மாற்றத்திற்கு உட்படுத்தி வருகின்றனர். இவர்களுள் போலந்து நாட்டவரான ராபேல் லெம்கின் என்பரால் இரண்டாம் உலகப்போரின் பின்னர் வரைவுசெய்யப்பட்ட இனப்படுகொலை பற்றிய கருத்தாக்கம் 1951 இல் சர்வதேச சட்டவிதிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது..
இனப்படுகொலை என்பது ஒரு இனத்தின் உடனடி அழிவை மட்டும் குறிப்பதில்லை. அது வௌ;வேறு நடவடிக்கைகளின் மூலம் ஒரு கூட்டுத் திட்டத்தின்கீழ் நடத்தப்படக்கூடியது. ஒரு இனக் குழுமங்களின் வாழ்வாதாரங்களின்மீது தாக்குதல் தொடுப்பதன்மூலம் அக் குழுமங்களின் இருப்பை இல்லாமல் செய்யும் நோக்கம் கொண்டது. இனவழிப்புக்கான திட்டங்களின் இலக்கு அரசியல் பொருளாதார நிறுவனங்களை சிதைப்பதன்மூலம் கலாச்சாரம், மொழி, தேசிய உணர்வு, மதம் என்பவற்றில் தாக்குதல் தொடுப்பதாகும். அத்தோடு இனக் குழுமங்களின் பொருளாராத வெளிப்பாடுகளின்மீதும் தனிமனித பாதுகாப்பு, சுதந்திரம், கௌரவம் என்பனமீதும் பேரழிவை ஏற்படுத்துவது மட்டுமன்றி இனக்குழும தனிமனிதர்களின் உயிர்வாழும் உரிமைக்கு நாசம் விளைவிப்பதுமாகும் என்கிறார் லெம்கின். இது சர்வதேச சட்டவிதிகளாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு இனம் மொழியின் பெயரால் மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டால் அந்த அடையாளங்களின் மீதுவைத்து அது எதிர்வினையாற்றுவது வரலாற்று நியதி. இது ஒடுக்கப்படும் இனத்துக்கு ஒரு கருவியாகிறது. இதைப் புரிந்துகொள்ள மறுத்து தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றக் கேட்பது, சிங்களமொழிப் பாடசாலைகளை திறக்க வேண்டும் என கோருவது என்பதெல்லாம் புதிய சிந்தனையாக புலுடாவாகிறது. இப்படிச் சொல்வது என்பது தனிமனிதர்கள் சிங்கள மொழியைப் படிப்பது அல்லது திருமணம் உள்ளிட்ட உறவுகளை வைத்துக்கொள்வதையோ தமிழ்ப் பகுதயிலுள்ள சிங்கள மக்களிற்கு இந்த அடிப்படை உரிமைகளை வழங்குவதையோ மறுப்பதாக மொழியாக்கம் செய்யத் தேவையில்லை. அதாவது பகைப்புலத்தில் சிங்கள மக்களின் பண்பாடு மொழி எதையுமே வைத்து நோக்கும் தவறை இழைத்துவிடக்கூடாது. இனவெறியாளர்களை எதிர்கொள்வது சிங்கள மக்களை எதிர்கொள்வது என்றவாறாக அரசு இன்றைய வெற்றிகளை திசைதிருப்பியிருக்கிறது. இதை முறியடிக்கும் அரசியல் புலிகளிடம் இருந்ததில்லை என்பதால் அரசுக்கு இது இலகுவில் சாத்தியமாகிறது.
அகதிகளைக் காட்டி இந்தியா உட்பட உலக நாடுகளிலெல்லாம் மடிப்பிச்சை கேட்டு அரசு நிதியுதவிகளைப் பெறுகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய முன்னாள் புலிப்பிரதேசங்களில் பாரிய இராணுவத்தளங்களை நிறுவும் வேலைகள் அரசுக்கு முதன்மையானதாக இருக்கிறது. அகதிகளை மீளக் குடியேற்று என்ற விடயத்துக்கு முன் அவர்களின் சுதந்திரமான வெளியேறலை அனுமதிக்கும் அடிப்படை மனித உரிமைகள் பற்றி பேசியாகவேண்டும். அடுத்துவரப்போகும் மழைக்கால அவலத்தை கணக்கிலெடுத்து மீள்குடியேற்றத்தைக் கோருகிறார் டக்ளஸ். நல்ல விசயம். அதற்குமுன் அவர்களின் சுதந்திரமான வெளியேறலை அனுமதி என இவர்கள் போன்றவர்களால் கேட்கமுடியாமலிருப்பது ஏன்?. அகதிகளை இப்படி முடக்கிவைத்து வதைப்பது இனவழிப்பின் ஒரு செயல்முறை எனப் புரிந்துகொண்டால் அவர்களின் சுதந்திரமான வெளியேற்றத்தை அனுமதிக்கப் போராடுவது அதற்கான நிர்ப்பந்தங்களை சகலமட்டத்திலும் உருவாக்குவது ஒரு அரசியல் பணியாகும்.
இன்று சிங்கள மக்கள் மத்தியில் இந்தப் பேரவலத்தை எடுத்துக்கூறும் குரல் வெளிக்கிளம்பத் தொடங்கியுள்ளன. அது பாராளுமன்றம்வரை ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. “இங்குள்ள அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒரு நாளாவது இந்த முகாமில் வாழமுடியுமா? அல்லது உங்கள் பிள்ளைகளைத் தன்னும் அங்குள்ள சேற்று நீரில் இறங்க விடுவீர்களா? நீங்கள் இங்கு உங்கள் மனைவிமாருடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் அங்கு மனைவி ஒரு முகாமில், கணவன் ஒரு முகாமில், பிள்ளை ஒரு முகாமில் என அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்குச் சென்ற உங்கள் குழந்தை வீடுவருவதற்கு ஒரு மணிநேரம் தாமதித்தால்கூட தவிக்கிறீர்கள். ஆனால் அங்கே தமது பிள்ளை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பதுகூடத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்...” என்று பேசியிருக்கிறார் அனுரகுமார. ஐதே கட்சியைச் சேர்ந்த கரு ஜெயசூரிய, தாம் இந்த முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்படுவதை கேள்விகேட்டு குரலெழுப்புகிறார். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்கிறார். இதேவகைப்பட்ட குரல்களை எழுப்பும் மங்கள சமரவீர, “நாம் சர்வதேச சமூகத்தின் அங்கம் என்ற வகையில் சர்வதேச சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. நாகரீகமடைந்த சமூகம் என்ற வகையில் அதனைப் பின்பற்ற வேண்டியவர்களாக நாம் உள்ளோம் எனவே இதுகுறித்து கேள்விகேட்கும் உரிமை சர்வதேச சமூகத்துக்கு உண்டு” என்று குரலெழுப்பியிருக்கிறார் மங்கள. இவற்றை காதால் கேட்பவர்களாக இருக்கும் நிலையில்தான் டக்ளஸ் கருணா போன்றவர்கள் இருக்கிறார்கள்.
“யுத்தவெற்றி எனக் காட்டப்பட்டு எந்த தென்னிலங்கை மக்களுக்கு பால்சோறு கொடுக்கப்பட்டதோ அதே தென்னிலங்கை மக்கள் வன்னி மக்கள் படும் அவலத்தைக் கண்டு இந்த அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு தமது போராட்டம் முன்னெடுக்கப்படும்” என புதிய இடதுசாரி முன்னணி அறிவித்துள்ளது. இதைவிட பிரபல மனிதஉரிமைவாதியான நிமல்கா பெர்ணான்டோ வன்னி மக்களின் அவலம் குறித்து அவர்கள் போர்க்குற்றவாளிகள்போல் நடத்தப்படுகிறார்கள் என்று குரல் எழுப்பியுள்ளார். இவ்வாறான சுதந்திரமான கருத்துகளை தெரிவிப்பதில் அரச பயங்கரவாதத்தினால் ஆபத்துகளை எதிர்கொண்ட சிங்கள ஊடகவியலாளர்கள் மனித உரிமைவாதிகள் என சுமார் 70 பேர்வரை வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அரசுசார்ந்துதான் இவற்றையெல்லாம் வெல்ல முடியும் என்று செயற்படுகிறார்கள் சிலர். காலங்காலமாக அரசைச் சார்ந்து தமிழரசியல்வாதிகளும் மலையக அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஏன் இடதுசாரிகளும்கூட செயற்பட்டுத்தான் பார்த்தார்கள். அவர்கள் மக்களின் கோவணங்களை உருவி தாம் மட்டும் அதில் உயரப் பறந்த நவீன ஹரிப்போர்ட்டர்களாக மாறியதைத்தான் வரலாறு பதிந்துவைத்திருக்கிறது. அகதிகளை மீளக்குடியமர்த்துவது அரசுக்கு உலக நாடுகளின்மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து சாதிக்கப்படலாம் என்பவர் இன்னொரு வகையினர். தேசியவிடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் உதவிவழங்கிய சோசலிச சுவறுகள் கொண்ட நாடுகள் தொடக்கம் விடுதலைப் போராட்டங்களை பயங்கரவாதமாகச் சித்தரித்து ஒடுக்கிய நாடுகள்வரை இலங்கை அரசின் பக்கமே இருந்தன. போர்ப்பொறியுள் அகப்பட்ட மக்கள்மீது மனிதாபிமானத்தைக்கூட காட்டவில்லை. போர்நிறுத்தத்தை ஒரு பேச்சுக்காக உச்சரித்தன. பயங்கரவாத ஒழிப்பில் தோள்கொடுத்தார்கள் என்ற அவர்களின் நியாயப்பூழலை ஏற்றுக்கொண்டாலும், தற்போதைய இந்த வன்னிமக்களின் கைதிநிலையை பாராமுகமாக இருப்பது ஏன்?
இன்று பாராளுமன்றத்துள் ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வரும் வன்னி மக்களின் அவலம் குறித்த குரல்கள் அவர்களின் வாக்குமூலமல்ல. தமது பிழைப்புவாதத்துக்கு அவர்கள் மக்களிடம் மேலிடுகின்ற கருத்துநிலைகளிலிருந்துதான் விடயங்களை எடுத்துக்கொள்வார்கள், அல்லது அதை உருவாக்க முற்படுவார்கள். இதை மறுதலையாகச் சொன்னால் சிங்கள மக்களிடம் வன்னி மக்கள் சம்பந்தமான ஒரு நெகிழ்ச்சி மனோபாவம் வளர்வதாக அல்லது வளர்க்கப்படுவதாக நாம் இதை எடுத்துக்கொள்ளலாம். எனவே கட்சி நலன்களுக்கு அப்பால் செயற்படக்கூடிய, இந்த அவலத்தை நேர்மையாக எடுத்துச் செல்லக்கூடிய சக்திகள் சிங்கள சமூகத்திலிருந்து முன்வரவும், அதுசார்ந்து நாம் செயற்பட வேண்டிய தேவையும் எம்முன் உள்ளது. அந்தக் குரல் பலப்படுத்தப்படுவதும் அதற்கான வேலைமுறைகளையும் நாம் கண்டடைய வேண்டும். (புகலிடத்திலுள்ள சிங்கள முற்போக்குச் சக்திகளுடனான உறவை ஏற்படுத்துவதன் மூலம்) புகலிட நாடுகளிலும்கூட இதற்கான சாத்தியம் உள்ளது. இதற்கு நாடுகடந்த தமிழீழப் பூச்சாண்டிகளும் தேசியத்தலைவரின் வெற்றிடத்தை நிரப்ப ஆள்தேடுவதும் உதவாது. சிங்கள மக்கள்மீது, முஸ்லிம் மக்கள்மீது ஏன் தமிழ்மக்கள்மீதுகூட நம்பிக்கை வைக்காத புலிகளின் அரசியலை நாம் இல்லாமல்செய்யவேண்டியுள்ளது. அதிலிருந்து விடுபடவேண்டியுள்ளது.
இன்று வன்னிமுகாம் 3 மாதங்களாக இயங்கித்தியங்குகிறது. வெள்ளத்தில் மிதக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சர்பட்டாளத்தைக் கொண்ட அமைச்சரவையின் ஊதாரித்தனமும் ஊளையிடல்களும் ஒருபுறமும், ராஜபக்சவிலிருந்து சரத்பொன்சேகாவரை ஆளாளுக்கு அரசியல்தீர்வு பற்றிய கருத்துகளை உதிர்ப்பதுமாக அவர்களின் வெற்றிக் களிப்பு இன்னும் முடிந்தபாடில்லை. தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது தர்க்கரீதியல் தேவையேயில்லை எனவும் நாமென்ன போரின்போது அணுகுண்டையா போட்டோம் எனவும் அமைச்சர் பாலித கோகண போகிற போக்கில் சொல்வதையும் பார்த்தால் வன்னி மக்களென்ன நாமும்தான் “தண்ணியில்” மிதக்கிறோம் என்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. போரில் வெற்றிபெற்ற நவமன்னனாக இனவாதத்தால் சித்தரிக்கப்படும் ராஜபக்சவின் எதிர்காலம் யுத்தசுமையில் அழுந்தப்போகின்ற... அந்நியசக்திகளின் தலையீட்டை பரிசாகப் பெற்றுக்கொண்டிருக்கின்ற... இலங்கை மக்களிடம்தான் உள்ளதேயொழிய புனைவுகளிடமல்ல.
- ரவி (23.08.2009)
0 விமர்சனங்கள்:
Post a Comment