பன்றிக் காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள் உலகுக்குப் புதியவையல்ல!
தற்போது உலகளாவிய ரீதியில் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் புதிய பன்றிக் காய்ச்சல் பன்றிகளில் ஏற்படும் சுவாசத் தொகுதியுடன் சம்பந்தப்பட்ட ஒரு வகை நோயாகும். இக் காய்ச்சல் ஏ(எச் 1 என் 1) (தி(சி 1. னி 1) எனப்படும் ஒரு புதுவகை வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. சாதாரண வைரஸ் காய்ச்சல் போல் இக் காய்ச்சல் மனிதரின் சுவாசத் தொகுதியில் தொற்றை ஏற்படுத்தி நியூமோனியாவைத் தோற்றுவித்து மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது.
சாதாரண காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகளால் இந்த வைரஸ் கிருமியை அழிக்க முடியாது. இவ் வைரஸ் கிருமிகள் அதன் உடலமைப்பை அடிக்கடி மாற்றுவதால் அடிக்கடி மருந்துகளையும் மாற்ற வேண்டியுள்ளது. குறித்த தடை மருந்தொன்றை அறிமுகப்படுத்துவதில் சிரமமிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கையை விரித்துவிட்டது. இதனால் இப்புதிய பன்றிக் காய்ச்சல் உலகளாவிய ரீதியில் மிகத் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இதுவரை 62 பன்றிக் காய்ச்சல் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்று தொற்றுநோய் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு சிறுவனிடம் காணப்பட்ட இக்காய்ச்சலை உடைய நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மாத காலத்தில் 50 இற்கு மேலாக அதிகரித்துள்ளது. சமீப காலத்தில் இந்தியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகள் சிலர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டமை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் அறிய வந்துள்ளது.
இந்நோய் முதலில் பன்றியில் காணப்பட்டதால் பன்றிக் காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. இது போன்ற ஸ்பானிய எச் 1 என் 1 வைரஸ் காய்ச்சல் 1918 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் பரவி 50 முதல் 100 மில்லியன் பேர் மரணமடைந்தனர். 1957 ல் ஏற்பட்ட ஆசியன் புளுக் காய்ச்சலால் 45 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு 70,000 பேர் மரணமடைந்தனர். உலகளாவிய ரீதியில் 2 மில்லியன் பேர் மரணமடைந்தனர். 1968 – 1969ல் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட ஹொங்கொங் புளு காய்ச்சலால் 50 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு 33,000 பேர் மரணமடைந்தனர். உலகளாவிய ரீதியில் 01 மில்லியன் பேர் மரணமடைந்தனர். ஏ (எச் 1 என் 1) வைரஸ் காய்ச்சல் முதன் முதல் 1976 ஆம் ஆண்டு ஏற்பட்டது.
மெக்சிகோ நகரில் இந்த ஆண்டு வைகாசி மாதம் இனம் காணப்பட்ட இக்காய்ச்சல் ஆசிய நாடுகளிலிருந்து சென்ற பயணிகள் மூலம் தொற்றியுள்ளது. இப்புதிய பன்றிக் காய்ச்சல் காற்று மூலம் பரவுவதால் மிக இலகுவில் தொற்றிக்கொள்கிறது. ஒருவருக்குத் தொற்று ஏற்பட்ட 24 மணித்தியாலங்களில் நோயின் அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் தொடர்ச்சியாக 7 நாட்கள் நீடிக்கும்.
இந்நோயை உலகளாவிய ரீதியில் பரவும் தொற்று நோயாக உலக சுகாதார ஸ்தாபனம் யூன் 11 அன்று பிரகடனப்படுத்தியுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களான 5 வயதுக்குட்பட்ட சிறார்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா, நீரிழிவு, உடற் பருமன், இருதய , நுரையீரல் போன்ற நோய்களுக்குச் சிகிச்சை பெறுவோர், எய்ட்ஸ் நோயாளர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள், போசாக்குக் குறைபாடு உடையோர், நீண்ட காலமாக அஸ்பிரின் மருந்து பாவிக்கும் 18 வயதிற்குட்பட்ட சிறார்கள், நோயால் பாதிக்கப்பட்டுச் சிக்ச்சை பெறுவோர் போன்றோரிடமே இந்நோய் இலகுவில் தொற்றிக் கொள்கிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டோரில் 70 சதவீதமானோர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாவர். இது புது வைரஸ் கிருமியானபடியால் அதிகமானோரிடம் இதற்கு எதிராகப் போராடும் நோய் எதிப்புச் சக்தி உடலில் இல்லை.
காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கிலிருந்து தொடர்ச்சியாக சளி வழிதல், தலைவலி, நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் கஷ்டம், வாந்தி, தொண்டை அழற்சி, தொண்டை வலி, வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகளாகும். இதற்கு உடனடியாகச் சிகிச்சை பெறத் தேவையில்லை. இவை தானாகவே சில நாட்களுள் அகன்றுவிடும். மாறாக இந்த அறிகுறிகள் நீடித்தால் உதடுகள் மற்றும் தோல் நீல நிறமாக மாறுதல், நீரிழப்பு, விரைவான மூச்சு, அதிக நித்திரை, குமட்டல், வாந்தி, வயிற்றோட்டம், கண் வீக்கம் போன்ற அறிகுறிகள் சிறார்களிடம் தென்படும்.
வயது வந்தோரிடம் மூச்சு விடக் கஷ்டம், நெஞ்சு வலி, வயிற்று வலி, மூட்டு வலி, உடல் வலி, திடீர் தலை சுற்றல், களைப்பு, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். வயோதிபரிடம் காய்ச்சல், கடும் குளிர், குழப்பம் போன்ற அறிகுறிகள் தென்படும். மேற் குறிப்பிட்ட நோய்களையுடையோரும் மேற் குறிப்பிட்ட அறிகுறிகளையுடையோரும் உடனடியாக மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும். அசட்டையாக இருந்தால் முற்றிய நிலையில் சுவாசத் தொகுதியில் நோய் மற்றும் நியுமோனியா ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் அபாயம் உண்டு.
சாதாரண புளுக் காய்ச்சல், தும்மல், இருமல் மூலம் பரவும். ஆனால் இவ்வைரஸ் கிருமி இருமும் போதும் தும்மும் போதும் சிறு துளிகளில் கலந்துவெளிவந்து 6 அடி தூரம் வரை பயணம் செய்து கீழே விழும். இவை விழுந்த இடங்கள் மற்றும் பொருட்களைத் தொட்டுவிட்டு வாய், மூக்கு, கண் போன்றவற்றைத் தொட்டால் நோய் தொற்றிக் கொள்ளும். இவை 48 மணித்தியாலத்தில் தொற்றை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தவை. மலம் மூலமும் தொற்று ஏற்படும்.
நோயாளியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி தனி அறையில் வைக்க வேண்டும். அந்த அறைக்குள் போவோர் முக கவசம் அணிந்து கொண்டு போக வேண்டும். நோயாளிகள் அடிக்கடி சவர்க்காரம் கொண்டு சுடுநீரில் கைகளை நன்கு கழுவ வேணடும். துவாயினால் கைகளைத் துடைக்கக் கூடாது. இருமும் போதும் தும்மும் போதும் காகிதக் கைக்குட்டைகளை ஒருமுறை மட்டும் பாவித்து விட்டு உடனே அவற்றை அழித்துவிட வேண்டும். நோயாளியின் பக்கத்தில் இருப்போரும் மேற்கூறியவாறு அடிக்கடி கைகழுவ வேண்டும். கழுவாத கையால் வாய், கண், மூக்கைத் தொடக்கூடாது. நோயாளியின் பக்கத்தில் மிக நெருக்கமாகப் போகக் கூடாது. அவர்களைத் தொடக்கூடாது. தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இந்நோய் ஏற்பட்டுள்ளது எனச் சந்தேகப்பட்டதும் வேலைத்தளங்களுக்குப் போகக் கூடாது. மாணமானவர்களைப் பாடசாலைக்கு அனுப்பக்கூடாது. சனநெரிசல் அதிகமான இடங்களுக்குப் போகக் கூடாது. அடிக்கடி காகித கைக்குட்டைகளைப் பாவித்துவிட்டு உடனே அழித்துவிடவேண்டும். அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அதிக நீராகாரம் பருக வேண்டும். நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். அடிக்கடி சூப் அருந்த வேண்டும். வலி நிவாரணிகளை எடுக்கவேண்டும். இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தப்படும் போலி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது.
18 வயதிற்குட்பட்ட சிறாருக்கு அஸ்பிரின் கொடுக்கக் கூடாது. ஏனைய காய்ச்சல் மருந்துகளைக் கொடுக்கலாம். 42 வயதிற்குட்பட்டோருக்கு தடிமல் மருந்து கொடுக்கக்கூடாது.
பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனச் சந்தேகம் ஏற்பட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியோரும் நோய்களையுடையோரும், பன்றிக் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உடையோரும் சிகிச்சை பெற வேண்டும்.
ஆண்டு தோறும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியோர், பல்வேறு நோயாளிகள், இளம் சிறார்கள், கர்ப்பிணிகள், இருதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோயாளிகளுடன் இருப்போரும் மருத்துவமனை ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது யோக சித்தர்கள் பல்வேறு தொற்று நோய்களை இலகுவில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு மிகத் துல்லியமாக குணப்படுத்தியுள்ளனர். இக்காய்ச்சலுக்கு மருந்து இல்லையாதலால் மூலிகை மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம். இதனால் பல மரணங்களைத் தவிர்க்க முடியும்.
துளசி மரங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்தால் நுளம்பு விரட்டி போல் செயல்படும். இம் மரத்திலிருந்து வெளிவரும் நறுமணம் நுளம்புகளை விரட்டி வீட்டிற்குள் புகாதவாறு தடுக்கும் வலிமை கொண்டது. மேலும், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படாது தடுக்கும்.
செல்லையா துரையப்பா
(யோகா சிகிச்சை நிபுணர்)
மட்டக்களப்பு.
0 விமர்சனங்கள்:
Post a Comment