அகதி தமிழன் ஒருவன் தமிழர்களுக்கு எழுதும் ஆதங்க மடல்!!
அன்பான தமிழ் மக்களுக்கு!
அன்பான தமிழ் மக்களே உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் பாரதிராஜா அல்ல உங்களை கனவுலகத்துக்கு கிராமம் கிரமமாக அழைத்துச்செல்ல தமிழ் தேசிய கூத்தமைப்பும் அல்ல பொய்யான வாக்குறிதிகளை வழங்கி உங்களை ஆதாள பாதாளத்துக்கு கொண்டுபோய் விட. ... நான் ஒரு தமிழன்.
உங்களை நேசித்தவன் நேசித்த குற்றத்திற்காக அகதியாக்கப்பட்டவன். அகதி வாழ்க்கை, "அகதி" இந்த மூன்று எழுத்தில் புதைந்து கிடக்கும் ஆயிரம் ஆயிரம் கதைகள் அதை அனுபவித்தவனுக்குதான் தெரியும் அதன் கோரமுகம், சொல்லப்படாத கதைகளும். அடிக்காமல், கொல்லாமல் உயிரை பிரிக்கிற வலி அது. அனுபவித்தவனுக்கு மட்டும்தான் தெரியும் அதன் வேதனை. அது அந்த மூன்று லட்சம் மக்களின் முகங்கள் செல்லும் கதைகள்தான் எத்னை... எத்னை..?
அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தமிழ் தேசியம், குறிகிய தேசியவாதம் தந்த பரிசுதானே இது. அன்பான தமிழ் முகங்களை பார்த்து அகதியாக இருந்து கொண்டு நான் கேட்கும் கேள்வி இது, நீங்கள் இன்னும்மா திருந்தவில்லை? இருபத்தி இரண்டு பாராளுமன்ற உருப்பினர்களை புலிகள் வாக்குப் போட வைத்தார்கள் என்பதற்காக பாராளுமன்றம் அனுப்பினீர்கள் புலிகளின் நலனுக்காகவா அல்லது இவர்களின் சுக போக வாழ்க்கைக்காகவா அல்லது தமிழ் மக்களின் நீண்ட கால கனவுக்காகவா எது உண்மை.
இன்று என்ன நடந்தது? நடந்து முடிந்த இரண்டு நகரசபைத்தேர்தலிலும் நீங்கள் தமிழ் தேசிய கூத்தமைப்புக்கு கொடுத்த வாக்குகள் அனைத்தும் பொன்னான வாக்குகள் அல்லவா ஏன் அதை மண்ணாக்கினீர்கள்? *யானை தன்* தலையில் மண்ணை வாரி போட்ட கதைதானே இது. பல இலட்சம் அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளெனவும், புலிகளை நேசிப்பவர்களெனவும் சர்வதேசரீதியில் பொய்ப் பிரசாரம் செய்து சமுதாயத்தில் ஊனமுற்றவர்களாகவும், வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை அகதி முகாமில் முடக்குவதற்கும் காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மீண்டும் வவுனியா நகர மட்டத்தில் ஆட்சியதிகாரம் வழங்க மக்கள் முனைந்திருப்பது வெட்கப்பட, வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.
மீண்டும் இவர்களின் வெத்து பேச்சுக்கும், வெத்து தமிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை
எல்லாவற்றுக்கும் நீங்கள கொடுத்த ஆணையா? எது எப்படியோ தந்தை செல்வா கூறியது போல உங்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். மீண்டும் சாகவும் உங்கள் வருங்கால சந்ததியை சந்தி சிரிக்க வைக்கவும் யாழ் மேலாதிக்க வர்க்கம் முனைகின்றது மீண்டும் ஒரு தலைமுறையை மண்கவ்வ வைக்க முனைகின்றது
கிழக்கு மாகாணத்தில் மாவிலாற்றிலே தொடங்கிய யுத்தம் வட மாகாணத்தின் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் முடிவடைந்து விட்டதுடன் சமாதானக் காற்றும் வீசத் தொடங்கியுள்ள நிலையில் ஒரு மாணவி தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் விளையாட்டு விழாவில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய மாணவி அமிர்தலிங்கம் யசோதா கிழக்கு மாகாண மக்களுக்கும் ஏன் தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்து அதே வேளை இந்த யுத்தத்தை ஆதரித்து முப்பதாயரம் சிறார்களைக் கொலைக்களத்துக்கு அனுப்பியவர்களுக்கு அங்கிகாரம் பெற்றுக்கொடுத்த அனைவருக்கும் ஒரு உண்மையையும் மறை முகமாக கூறி இருக்கின்றாள்.
அதாவது எங்களை இனியாவது வாழவிடுங்கள் இரண்டு தங்கப்பதக்கம் அல்ல இரண்டாயிரம் தங்க பதக்கங்களை பெற்று எங்கள் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்போம் என்று பறைசாற்றியுள்ளாள்.
ஆனால் நீங்களோ உங்கள் பொன்னான வாக்குகளை மண்ணாக்கியுள்ளீர்கள். அதேவேளை மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து களம் இறங்கிய அனைவருக்கும் நீங்கள் கொடுத்த பொன்னான வாக்குகள் மண்ணாகாமல் இவர்கள் உங்கள் வருங்கால பணிகளை நிறைவேற்றுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதேபோன்று இன்றைய இனிப்பான செய்திகளும் எங்களுக்கு மனநின்மதி தருகின்றது சர்வதேச பயங்கரவாதம் கடத்தல் மன்னனும் உங்கள் வருங்கால தலைவரும் (தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்ட) சர்வ தேசத்தை தேட வைத்தவருமாகிய கே.பி .அண்ணா பிடிபட்டார் என்பதுதான் இது பாசிசத்தை வளர்க்க நினைத்து குளிர்காய நினைத்த அனைவருக்கும் ஒரு பெரிய பேரிடியாகும்.
புலிகளின் செய்தியில் திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் நயவஞ்சகமான முறையில் கடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டிருப்பதும் எம்மையும் எமது மக்களையும் ஆழ்ந்த துயரத்திற்குள் உள்ளாகியுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழு தெரிவித்துள்ளது. எம்மை என்று புலிகள் தங்களை( புலிப்பினாமிகளை) மட்டும்தான் குறிபிட்டு எழுதவேண்டுமெ தவிர எமது மக்களையும் சேர்த்து இவர்கள் குறிப்பிடுவது வம்பில் மாட்டிவிடும் செயலாகும்.
மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் என்று இத்த மக்களை வம்பில் மாட்டிவிட்டது போதாதா? இந்த திட்டம் இட்ட சதிகள் இனியும் வேண்டாம் அகதியாய் அல்லல் படும் மக்களை முள்ளுக்கம்பி வேலிக்குள் இருந்து காப்பாற்றுவதை விடுத்து இன்னும் நமது தமிழ் மக்களை ஏமாளிகளாக நினைக்கும் வழமையான போக்கே இப்படி மக்களின் "தலையில் மிளகாய் அரைப்பது* போன்றதாகும். இன்னும் தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது சரியா? இவர்கள் தொடர்பில் *மக்கள் விளிப்பாக இருக்கவேண்டும்*
உங்களால் உங்கள் சூரியத் தேவனைத்தான் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது ஆகக்குறைந்தது இந்த தூள் கடத்தல் மன்னனை காப்பாத்த எங்கே உங்கள் உண்ணாவிரதம் போராட்டம்? எங்கே உங்கள் பொங்கு தமிழ் போராட்டம்? ஏன் ஐ.நா.சபைக்கு முன்னால் போய் நின்று கே.பியை விடுதலை செய்ய சொல்லி போராட்டம் செய்யவில்லை.
கே .பி .அண்ணாவின் கைதை அரசபயங்கர வாதம் என்று வர்ணிக்கும் புலம் பெயர் புலிப்பினாமிகள் , புலிகள் நடத்திய பயங்கர வாதத்தை விடவா பெரியது அரச நடத்தும் பயங்கரவாதம்?
இங்கு இது பொருத்தும்.... மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை 'உடலுக்காக நீ அழுகிறாயா? உயிருக்காக நீ அழுகிறாயா?' என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. 'நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால்? நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு' என்று அறிவுறுத்துவாள்.
நானும் அதையேதான் சொல்கிறேன் நீங்கள கே பி அண்ணாவுக்காக அழும் நேரம் எங்கள் அகதிகளுக்காகவும் அழுங்கள் கே .பி .அண்ணா எங்கும் போய் விடவில்லை குளிர் ஊட்டப்பட்ட அறையில் இரண்டு குத்து வாங்கிக்கொண்டு நலமாக உள்ளார். (தவறாக நினைக்காதீர்கள் அவருக்கு சக்கரை வியாதி உண்டு இரண்டு தடவைகள் *இன்சுலின்* குத்துகின்றனர்.)
கொஞ்சம் சிந்தியுங்கள் மூடர்களே புலிகளுக்கு அடுத்தவன் உயிரை எடுக்கவும் அடுத்தவன் உரிமையில் தலையிடவும் எப்படி உரிமையை தாங்களாகவோ எடுத்துக் கொண்டார்களோ அதைவிட ஒரு அரசாங்கத்துக்கு இனும் அதிகம் உள்ளது இப்போது புரிந்தாலும் too late the heros புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும் செய்திகள் வருகின்றது காத்து இருங்கள் கதவைத் தட்டும் மிக விரைவில்.
*எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு! எங்கள் சங்கை அறுத்த புலிப்பகைவர் எங்கோ மறைந்தார் என்று சங்கே முழங்கு ஈழத்தமிழர்களே!
நான் ஜனநாயகவாதியோ அரசியல்வாதியோ அல்ல ஒரு அகதி
அன்புடன்
அ.ஜெயக்குமார் (சோதி)
0 விமர்சனங்கள்:
Post a Comment