சபாஷ் தேரரின் கருத்தை மீள்பரிசீலிக்கலாம்
புலிகளினால் நாட்டிற்கு செய்யப்பட்ட அழிவுகளை கே.பி. யின் ஊடாக விசாரணை செய்து புலிகளின் நிதியினைக் கொண்டே வடக்கையும் ஏனைய பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.
கே.பி. யின் கைது அநுராதபுர யுகத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகும். இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக கே.பி. விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் உள்நாட்டுக் கைதியை இந்தியாவிற்கோ ஏனைய சர்வதேச நாடுகளிற்கோ காட்டிக் கொடுக்கக் கூடாது. புலிகளின் நிதியினை கே.பி. ஊடாகப் பெற்றுக்கொண்டு அவற்றை இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொண்ட கடனே இலங்கை சர்வதேசத்திடமிருந்து பெறும் இறுதிக்க கடனாக அமைய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கே.பி. யின் கைது தொடர்பாக நேற்று புதன்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே எல்லாவல மேதானந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரும் சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்ட குற்றவாளியுமான கே.பி. யை இலங்கை பாதுகாப்பு பிரிவினால் கைது செய்ய முடிந்தமை நாட்டிற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும். புலிகளினால் நாட்டிற்கு செய்யப்பட்ட அழிவுகளை கே.பி. யின் ஊடாக விசாரணை செய்து புலிகளின் நிதியினைக் கொண்டே வடக்கையும் ஏனைய பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
தொடர்ந்தும் உலக நாடுகளின் கடனுதவிகளில் இலங்கை அரசாங்கம் தங்கியிருக்காது சொந்த முயற்சிகளைக் கையாள பழகிக் கொள்ளவேண்டும். இலங்கை போன்ற நாடொன்றிற்கு கடன் அல்லது வரி அதிகரிப்பே உள்நாட்டு அபிவிருத்திக்கான ஒரே வழி. ஆனால் தற்போது உள்நாட்டுப் போர் முழுமையாக முடிவடைந்துள்ளது. இதனால் பாரிய செலவும் குறைந்துள்ளது. எனவே நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை முறையாக நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.
அத்தோடு பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகளை எக்காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது.
0 விமர்சனங்கள்:
Post a Comment