ரஜினி படத்துக்கு புலிகள் பணம்- இலங்கை அமைச்சர்
கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களுக்கு விடுதலைப் புலிகள் நிதியுதவி செய்துள்ளனர். அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோருக்கும் விடுதலைப் புலிகள் பெரும் பணத்தைக் கொடுத்துள்ளனர் என்று இலங்கை மறு சீரமைப்பு மற்றும் இயற்கைப் பேரிடர் நிவாரணத் துறை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சில தமிழ்ப் படங்களை விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு தமிழகத்தில் தயாரித்துள்ளனர். இந்தப் படங்களுக்கான நிதியை, தமிழ் மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை எடுத்து புலிகள் கொடுத்துள்ளனர்.
இந்தப் பணத்தை அவர்கள் நேரடியாக அனுப்பவில்லை. மாறாக, லட்சக்கணக்கான பணத்தை லண்டனைச் சேர்ந்த ஒரு இலங்கைத் தமிழருக்கு அனுப்பி வைத்து அவரை தமிழகத்தில் திரைப்படங்களைத் தயாரிக்குமாறு கட்டளையிட்டனர்.
அவரும் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களை வைத்து பல்வேறு படங்களை தமிழகத்தில் தயாரித்துள்ளார். இதில் ரஜினிகாந்த்துக்கு மிகப் பெரிய அளவில் பணம் தரப்பட்டுள்ளது. அது எவ்வளவு என்பதை இப்போது கூறுவதற்கில்லை. அந்தப் பணம் எங்கள் தமிழ் மக்களின் ரத்தம் தோய்ந்த பணம்.
அதேபோல, வைகோ, டாக்டர் ராமதாஸ், பழ. நெடுமாறன் உள்ளிட்டோருக்கும் தமிழ் மக்களின் பணம் போயுள்ளது.
இந்தப் பணத்தை வைத்து அவர்கள் டிவி, ரேடியோ நிலையங்களைத் தொடங்கியுள்ளனர். மேலும், பல்வேறு இணையதளங்களையும் தொடங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார் பதியுதீன்.
வைகோ திட்டவட்டமாக நிராகரிப்பு..
பதியுதீனின் புகாரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது முட்டாள்தனமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட வெற்றுப் புகார் என்றார் வைகோ.
ஐங்கரன் கருணாமூர்த்தியை கூறுகிறாரா பதியுதீன்...?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினி நடித்த எந்திரன் படத்தை முதலில் தயாரித்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அதிபர் கருணா மூர்த்தி. இவர் லண்டனைச் சேர்ந்தவர்.
இவர் நடிகர் அருண் பாண்டியனுடன் இணைந்து எந்திரன் படத்தைத் தயாரித்து வந்தார். இடையில் இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தயாரிப்பிலிருந்து அவர்கள் விலகிக் கொண்டனர். இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
ரஜினியைப் பொறுத்தவரை அவர் கடந்த சில ஆண்டுகளாகவே சம்பளம் என்று எதையும் வாங்குவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. படத்தின் லாபத்தில் இத்தனை சதவீதம் என்றுதான் அவர் சம்பளமாக பெற்று வருகிறார்.
எனவே பெரும் பணத்தை கருணாமூர்த்தி, ரஜினிக்கு கொடுத்ததாக பதியுதீன் கூறுவது நம்பும்படியாக இல்லை. மேலும் கருணாமூர்த்தியின் தயாரிப்பில் ரஜினி நடித்த ஒரே படம் எந்திரன்தான். அதுவும் கூட பாதியிலேயே சன் பிக்சர்ஸ் வசம் கை மாறி விட்டது.
ஒரு படத்தை முடிக்காமலேயே பெரும் பணத்தை சம்பளமாக ரஜினி வாங்கியிருப்பார் என்பதும் நம்பும்படியாக இல்லை.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment