கட்சிகளுக்கு பாடம் கற்பித்த யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல் முடிவுகள்.
யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்தலின் முடிவு அரசாங்கம் திருப்தி கொள்ளும் அளவுக்கு அமையவில்லை. அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏமாற்றத்தைக் கொடுத்த தேர்தலாகவே இந்த அமைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கம் தனது அதிகாரத்தையும், வளங்களையும் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தது. வேலைவாய்ப்பு, மீன்பிடித்தடை நீக்கம், ஏ9 ஊடான போக்குவரத்து என்பன போன்ற சலுகைகளின் ஊடாக வாக்குகளைக் கவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சலுகை அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
கடைசி நேரம் வரைக்கும் இழுபறிகளுடன் தேர்தல் பயணத்தை ஆரம்பித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்பார்ப்புக்கு மீறிய வாக்குகள் கிடைத்திருக்கின்றன. வடபுல நிலைமைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமானதாக இருந்திராத போதும் இந்தத் தேர்தலில் ஏமாற்றத்தைச் சந்திக்காத தரப்பு இது ஒன்று தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் வெளிநாடுகளிலும், கொழும்பிலுமே தங்கி யிருப்பதான குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்தபோதும் வாக்காளர்கள் இது பற்றி கவனத்தில் எடுக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்காகக் குரல் கொடுக்கின்ற ஒரே தரப்பாக இருந்தது. இதற்கு மக்கள் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, அரசியல் தீர்வை விரைவுபடுத்த ஆளும்கூட்டணியை வெற்றிபெற வைக்குமாறு செய்யப்பட்ட பிரசாரம் சரி, ஆளும்கட்சி தோல்வியுற்றால் பொதுமக்கள் சிரமங்களை அனுபவிக்க நேரிடலாம் என்ற எச்சரிக்கைகளும் சரி வாக்காளர்கள் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை. யாழ்.மாநகரசபைத் தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் கிட்டத்தட்ட 21 சதவீதமானோரே வாக்களிப்பில் பங்குபற்றியிருந்தனர்.
1998 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் கிட்டத்தட்ட இதேயளவு வாக்குகளே பதிவாகின. புலிகள் பலமாக இருந்த காலத்தில் தேர்தல்களின் மீது மக்கள் எப்படி நம்பிக்கை கொள்ளர்திருந்தனரோ அந்த நிலையில் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்பதையே ஆகக்குறைந்த வாக்களிப்பில் இருந்து உணரடிகிறது. இந்தத் தேர்தலை கிட்டத்தட்ட 80 சதவீதமான வாக்காளர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இவர்களில் பாதியளவானோர் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் வாக்களிப்பு மிகமிக மந்தமானதாக இருந்தமை ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கை பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்தத் தேர்தலில் 10,602 வாக்குகள் ஆளும்கூட்டணிக்குக் கிடைத்தன. இது 50சதவீதத் துக்கும் சற்று அதிகம். அதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 8,008 வாக்குகள் கிடைத்தன. இது 38.28 சதவீதமாகும்.
ஆளும்கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு உதவியது இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் வாக்குகளே. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனு நிராகக்கப்பட்டமை ஆளும் கூட்டணிக்கு இன்னும் சாதகமானதாக அமைந்து விட்டது. இதனால், புத்தளத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள், வெற்றிலைச் சின்னத்தில் ரிசாட் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்தியிருந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர்.
புத்தளத்தில் 4,388 இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுள் 2,325 பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் 1350 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், 936வாக்குகள் சுபியான் தலைமையிலான சுயேச்சைக்குழு-1 இற்கும் கிடைத்தன.
முஸ்லிம்களின் வாக்குகள் தான் ஆளும் கூட்டணிக்கு அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தன. 23 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.மாநகரசபைக்கு 5 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஈ.பி.டி.பி.யோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ நிறுத்திய முஸ்லிம் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறவில்லை. அதேவேளை, யாழ்.மாநகரசபையின் தமிழ் வாக்காளர்களை வசப்படுத்துவதில் ஆளும் கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை.
ஈ.பி.டி.பி.யை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பது- ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கையில் யாழ்.மாநகரசபை என்று இருந்தால் போதும் என்பதே அரசாங்கத்தின் கனவாக இருந்தது. ஈ.பி.டி.பி.க்கு இந்தத் தேர்தலில் 9 ஆசனங் கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால் குறைந் தது 17 ஆசனங்களை எதிர்பார்த்ததாகக் கூறி யுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இதை ஒரு பெரிய வெற்றியாகக் கருத முடியவில்லை என்றும் அவர் கூறியிருப்பது அவர் அடைந்துள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகளவு நெருக்கடிகளைச் சந்தித்தது உண்மை. பிரசாரங்களின் போது அச்சுறுத்தல்களைச் சந்தித்தமை, பிரசாரம் செய்வதற்கு யாழ். செல்ல பாதுகாப்பு அனுமதிக்கு நீதிமன்றப் படிக்கட்டு வரைக்கும் ஏறவேண்டியிருந்தமை என்று பலவழிகளிலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.
ஆனாலும் கடைசிநேரத்தில் மக்கள் மத்தியில் இறங்கிச் செய்த பிரசாரங்கள் கைகொடுத்திருக்கின்றன. எட்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக ஆசனங்கள் என்றே சொல்லலாம். ஆளும்கட்சி, அரச செல்வாக்கை அதிகளவில் பயன்படுத்தியமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் பாதகமாக அமையலாம் என்ற கருத்து இருந்தது.
வாக்குப்பதிவு குறைவாக இருந்தாலும் கணி சமான வாக்குகளையும், குறிப்பிடத்தக் சமான வாக்குகளையும், குறிப்பிடத்தக் களவு ஆசனங்களையும் பெற்றுள்ளது. வேட்பாளர்கள் இன்னும் பலம் வாய்ந்தவர்களாக அமைந்திருந்தால் முன்கூட்டியே பிரசாரங்களில் இறங்கியிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கலாம்.
உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி ஆகியன பலமான வேட்பாளர்களை நிறுத்திய போதும் ஒரே ஒரு ஆசனம் தான் கிடைத்திருக்கிறது. அதேவேளை, யாழ்ப்பாணத்தில் ஆளும்கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஈரோஸும், ரெலோ சிறி அணியும் தோல்வியடைந்துள்ளன.
இந்தத் தேர்தலில் முக்கியமாக வெளிப்பட்டிருக்கும் ஓர் உண்மை தென்னிலங்கைக் கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதே. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய வெற்றியல்ல. அது ஈ.பி.டி.பி.க்கும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுக்கும் உரியதே.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் உயிர் கொடுக்க முயன்ற வேட்பாளர் இரட்ணேஸ்வரனால் தேர்தலில் வெற்றிபெற டியவில்லை.
அதுபோன்றே ஐ.தே.க.வுக்கும் கசப்பான பாடமே கிடைத்திருக்கிறது. யாழ்.மாநகரசபைத் தேர்தலில் 83வாக்குகளே ஐ.தே.க.வுக்குக் கிடைத்தன. தெளிவான அரசியல் கொள்கையை முன்வைக்காத மாணிக்கசோதி தலைமையிலான சுயேச்சைக்குழுவும் நிராகக்கப்பட்டு விட்டது. இதற்குக் கிடைத்தது 47 வாக்குகளே.
அதேவேளை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுபியான் தலைமையிலான சுயேட்சைக் குழு 1175 வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அதிகளவில் ஆளும்கட்சிக்கு வாக்களித்ததில் ஆச்சரயம் ஏதுமில்லை. யாழ்.முகாம்களில் இருந்து வாக்களிக்க விண்ணப்பித்த 70 பேல் 43 பேர் ஆளும் கூட்டணிக்கும், 10 பேர் தமிழரசுக் கட்சிக்கும், ஒருவர் சுயேச்சைக்குழு2 இற்கும் வாக்களித்தனர்.
தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தால் தடுப்பு முகாம்களில் உள்ள தாம் இலகுவாக அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படலாம் என்ற அச்சம், ஆளும்கட்சிக்கு வாக்களித்தால் விரைவில் விடுதலை கிடைக்கலாம் என்ற ஒருவித நம்பிக்கை என்பன ஆளும்கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கலாம்.
அதேவேளை, தபால் மூல வாக்களிப்பு யாழ். மற்றும் வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமாகவே இருந்தது. யாழ்.மாநகரசபைத் தேர்தலில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றவர் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் முடியப்பு றெமீடியஸ் தான்.
தபால் வாக்களிப்பில் வெற்றி, விருப்பு வாக்குகளில் முன்னணி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமான சில விடயங்கள் இருந்தாலும் மாநகரசபை வாக்காளரில் பத்தில் ஒரு பங்கினரான முஸ்லிம்களைக் கவர முடியாது போனமை இவர்களின் முக்கிய பலவீனமாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றால் பிரதி மேயராக முஸ்லிம் ஒருவரை நியமிப்போம் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி எடுபடவில்லை.
அதேவேளை, யாழ்.மாநகரசபைத் தேர்தலில் ஆளும்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி. முதன்மை வேட்பாளரான கைலாயபிள்ளை தெய்வேந்திரன் தோல்வியடைந்துள்ளார். இதுவே யாழ்.மேயர் நியமனம் தொடர்பான பிரச்சினை ஒன்றை ஆளும் கூட்டணிக்குள் உருவாக்கியிருக்கிறது.
றீகன் என அழைக்கப்படும் துரைராசா இளங்கோ 3,887 வாக்குகளைப் பெற்று ஆளும் கூட்டணியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார். விருப்பு வாக்குகள் அடிப்படையில் ஐந்தாவது இடத்தைப் பெற்ற பற்குணராஜா யோகேஸ்வரி மேயராகவும் துரைராசா இளங்கோ பிரதி மேயராகவும் அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் பற்குணராஜா யோகேஸ்வரியை விட அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்கள் சிலர் இதற்கு உடன்பாடு தெரவிக்காததால் இழுபறி நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை வவுனியா நகரசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. 11உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா நகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
அடுத்த இடத்தைப் புளொட் கைப்பற்றியிருக்கிறது இதற்கு 3 ஆசனங்கள் கிடைத்தன. பெரும் எதிர்பார்ப்புகளோடு களமிறங்கிய ஈ.பி.டி.பி. மற்றும் ஆளும்கட்சிக்கு இங்கு இரண்டு ஆசனங்கள் தான் கிடைத்தன. இதில் ஒன்று ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மூலமும், மற்றொன்று சிங்கள வாக்காளர்களின் வாக்குகள் மூலமும் கிடைத்திருந்தன.
தமிழ்மக்களின் வாக்குகள் ஆளும்கூட்டணிக்கு கிடைக்காது போனது முக்கிய விடயமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது. இதன் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கவுள்ளது.
ஈ.பி.டி.பி. ஆளும்கட்சி கூட்டணிக்கு வவுனியா நகரசபைத் தேர்தலில் கிடைத்திருக்கும் தோல்வி, ரெலோவில் இருந்து புதிதாக உருவான அணிக்குக் கிடைத்த தோல்வி, புளொட் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டமை என்பன இந்தத் தேர்தலில் முக்கியமான விடயங்கள். 11 வருடங்களுக்குப் பின்னர் நடை பெற்ற இந்தத் தேர்தல் பல்வேறு செய்திகளையும் எடுத்துக் கூறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அதன் கொள்கைக்கும் மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஐ.தே.க.வோ வடக்கில் நிறுத்தும் வேட்பாளர்களால் வெற்றி பெற முடியாது என்பது தெளிவாகியிருக்கிறது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட எடுத்த முடிவு சரியானதா என்று ஈ.பி.டி.பி.யை சிந்திக்க வைத்திருக்கிறது. இவ்வாறு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பாடத்தைக் கொடுத்திருக்கிறது இந்தக் குட்டித் தேர்தல்.
அத்துடன், போரின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னம் விடுபடவில்லை என்பதை தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் படிப்பினைகள் அடுத்து நடக்கப் போகும் வடக்கு உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் கட்சிகள் புதிய வியூகங்களை அமைப்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்கச் செய்துள்ளன.
- சத்திரியன்
0 விமர்சனங்கள்:
Post a Comment