தமிழ் மக்களின் பிரதிநிதிகளென கூட்டமைப்பு இனிமேல் உரிமை கோர முடியாது
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் பற்றிப் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்குத் தமிழ் மக்கள் அங்கீகாரம் அளித்திருக்கின்றார்கள் என்பது பொதுவான அபிப்பிராயமாக உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்த் தேசியப் கூட்டமைப்பு தொடர்பாகத் தமிழ் மக்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி இத் தேர்தலில் பிரதானமானது.
2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியது. புலிகள் எதிரணியினரை அச்சுறுத்தி மிரட்டியதும் அவர்களின் முறைகேடுகளுமே கூட்டமைப்பின் வெற்றிக்குக் காரணம் என்று பரவலான குற்றச்சாட்டு அந்த நேரத்தில் முன்வைக்கப்பட்ட போது கூட்டமைப்பினர் அதை வலுவாக மறுத்தனர். மக்களின் ஆதரவு தங்களுக்கு அபரிமிதமாக இருக்கின்றது என்றும் எவ்விதமான நிர்ப்பந்தமும் இல்லாமல் மக்கள் சுயமாகவே தங்களுக்கு வாக்களித்தார்கள் என்றும் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறினார்கள். அவர்களின் அக் கூற்றை உரைத்துப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமாகவே இவ்விரு தேர்தல்களும் அமைந்தன.
பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நாளிலிருந்து கூட்டமைப்புத் தலைவர்கள் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுப் புலிகளின் பதிலிகளாகச் செயற்பட்டார்கள். தனிநாட்டு இலக்குடன் செயற்பட்ட காரணத்தால் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு இவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. தனிநாடு நடைமுறைச் சாத்தியமற்றது என்பதையும் அதற்கான ஆயுதப் போராட்டம் அழிவையே தரும் என்பதையும் பல தரப்புகளிலிருந்து எடுத்துக் கூறியும் அதற்கு இவர்கள் செவிசாய்க்காமல் புலிகளின் ஆயுதப் போராட்டத்துக்குப் பக்கத்துணையாகச் செயற்பட்டார்கள். இவர்களின் இந்தச் செயற்பாடு ஏராளம் தமிழ் மக்கள் உயிரிழப்பதற்கும் பெருந்தொகையானோர் அகதி வாழ்க்கைக்குத் தள்ளப்படுவதற்கும் அரசியல் தீர்வுக்கான முயற்சி பல தசாப்தங்கள் பின்தள்ளப்படுவதற்குமே வழி வகுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அழிவுகரமான அரசியல் பயணத்தையிட்டு மக்களின் இன்றைய நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்கான சந்தர்ப்பமாகவும் இத் தேர்தல்களைப் பார்க்கலாம்.
தாங்கள் மாத்திரமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக உரிமை கோரி வருகின்றனர். இந்த உரிமைக் கோஷம் வலிந்து உருவாக்கப்பட்ட மாயை என்பதை யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலும் வவுனியா நகர சபைத் தேர்தலும் நிரூபித்துவிட்டன.
யாழ்ப்பாணம் மாநகரசபைத் தேர்தலில் மொத்தம் 22280 வாக்குகள் அளிக்கப்பட்டன. அளிக்கப்பட்ட வாக்குகளில் அரைவாசி இலக்கைக் கூடத் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு அண்மிக்கவில்லை. கூட்டமைப்புக்கு 8008 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. வவுனியாவிலும் இதே கதைதான். அங்கு அளிக்கப்பட்ட 12850 வாக்குகளில் 4279 வாக்குகளை மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றது.
அறுபது வருடங்களாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை தாங்கிய கட்சிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சிகளாக உள்ளன. மேலும் தங்களையே தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் இன்று வரை கூறுகின்றார்கள். இந்த நிலையில், அளிக்கப்பட்ட வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறைந்தபட்சம் ஐம்பது வீதத்துக்கு மேலாகவாவது பெற்றிருக்க வேண்டும். அந்தக் குறைந்தபட்ச இலக்கைக் கூட அவர்களால் அடைய முடியவில்லை. இவர்களின் அண்மைக்கால செயற்பாட்டினால் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ் மக்கள் இத் தேர்தல்களில் இவர்களை நிராகரித்துவிட்டார்கள் என்ற முடிவுக்கே இதிலிருந்து வர வேண்டியுள்ளது.
வவுனியா நகர சபையைக் கைப்பற்றிவிட்டோம் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. இரண்டாவதாக வந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியிலும் பார்க்க 143 வாக்குகள் மாத்திரமே கூட்டமைப்பு கூடுதலாகப் பெற்றது. போனஸ் ஆசன நடைமுறை இருப்பதால் சபையின் அதிகாரம் கூட்டமைப்புக்குக் கிடைத்தது. இதை ஒரு பெரிய வெற்றி என்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூற முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருக்கும் முன்னாள் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வன்முறையைக் கட்டவிழத்து விட்டதால் தனது கட்சி ஆதரவாளர்கள் பலர் வாக்களிக்கச் செல்ல முடியவில்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் சித்தார்த்தன் கூறியிருப்பதையும் இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4279 வாக்குகளை மாத்திரம் பெற்றிருக்க இக் கூட்டமைப்புக்கு எதிராகப் பிரசாரம் செய்த ஜனநாயக மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் மொத்தம் 7181 வாக்குகளைப் பெற்றன என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துமென எதிர்பார்த்தவர்களுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப் போல, தன்னை நம்பிய மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய இன்னொரு அரசியல் கட்சியை வரலாற்றில் காண முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் விமோசனத்துக்கு வழிகாட்டவில்லை. தமிழ் மக்கள் அகால மரணம் அடைவதற்கும் அங்கவீனர் ஆகுவதற்கும் அகதி வாழ்க்கை வாழ்வதற்குமே வழிகாட்டியது. இந்த நிலையில், பிழையான அரசியல் பாதையில் சென்று பேரழிவை ஏற்படுத்தியதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு புதிய நிலைப்பாட்டை ஏற்படுத்துவார்கள் என்று பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் கூட்டமைப்புத் தலைவர்கள் பழைய பல்லவியையே இப்போதும் பாடுகிறார்கள்.
தமிழ்த் தேசியம் என்றும் சுயநிர்ணய உரிமை என்றும் வாய்ப்பாடு ஒப்புவித்ததைத் தவிர உருப்படியாக எதையும் தேர்தல் மேடைகளில் கூட்டமைப்புத் தலைவர்கள் பேசவில்லை. தேசியம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் அரசறிவியல் பதங்கள். விரிவான அர்த்தம் உடையவை. மக்களுக்கு அவற்றை விளக்கிக் கூறுவதற்கு இவர்கள் தயாராக இல்லை. இப் பதங்களால் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பதே இவர்களின் நோக்கம்.
சுயநிர்ணய உரிமை தனிநாட்டை மாத்திரம் குறிக்கவில்லை. ஒரே நாட்டில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி அமைப்புகளை உருவாக்கவும் முடியும். அதாவது சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஒரு இனம் கட்டாயமாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற நியதி இல்லை.
சுயநிர்ணய உரிமை என்றால் தனிநாடுதான் என்ற கருத்து நீண்ட காலமாகத் தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இந்தத் திணிப்பில் முக்கிய பாத்திரம் வகித்தன.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகத் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புத் தலைவர்கள் இப்போது கூறுகின்றார்கள். தனிநாடு என்ற இலக்குடன் செயற்பட்டுத் தமிழ் மக்களுக்குப் பேரழிவு ஏற்படுத்தியதற்கான பொறுப்பைப் பகிரங்கமாக ஏற்காமல் மறைமுகமாக ஏற்கும் செயற்பாடு என்று இவர்கள் அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிப்பதைக் கூறலாம்.
இவர்கள் தயாரிக்கும் அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு உண்மையாகவே விசுவாசமாக இருப்பார்களென்றால் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வை அடைவதற்கான முயற்சியை முன்னெடுப்போம் என்று தெளிவாகக் கூற வேண்டியதுதானே. அதைவிட்டு, சுயநிர்ணய உரிமை என்று பொதுப்படையாகக் கூறி மக்களைக் குழப்ப முயற்சிக்கக் கூடாது.
இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தனிநாட்டு இயக்கத்தைக் கட்டி வளர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கூட்டமைப்புத் தலைவர்கள் சுயநிர்ணய உரிமை பற்றித் தொடர்ந்து பேசுவதாக இருக்கலாம். இந்த எதிர்ப்பார்ப்புக்குக் கே. பி என்ற பத்மநாதனின் கைது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கடைசி நேரத்தில் தான் தெரிவித்த ஆலோசனையைப் பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக விசாரணை யாளர்களிடம் கே. பி கூறியதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பிடிபட்டவுடன் இப்படிச் சொல்வதில் அதிசயம் எதுவுமில்லை. பிரபாகரனின் மரணத்துக்குப் பின் தானே இயக்கத்துக்கு தலைவர் என்று கே.பி பிரகடனப்படுத்தியதும் உருத்திரகுமாரனு டன் சேர்ந்து இலங்கைக்கு வெளியே புலிகள் இயக்கத்தைக் கட்டிவளர்க்க முயற்சித்ததும் உலகறிந்த கதை.
கே. பியின் கைது இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றது. இலங்கையில் தனிநாடு அமைப்பதற்காக இலங்கைக்கு வெளியே மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் பலனளிக்கப் போவதில்லை என்பது ஒரு விடயம். இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு எந்த நேரமும் தயாராக இருக்கின்றன என்பது மற்றைய விடயம். மேற்கத்திய நாடுகளுக்கு இது ஒரு வலுவான சமிக்ஞை.
கே. பியைக் கைது செய்த செய்தி வெளியாகியதும் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை வேடிக்கையானது. கே. பியைக் கைது செய்ததோடு நிற்காமல் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அந்த அறிக்கை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கூறுவதில் வேடிக்கை எதுவுமில்லை. அது சரியான கூற்று. அதை ஐக்கிய தேசியக் கட்சி கூறியதுதான் வேடிக்கையானது.
வெளிப்படையான எதிரிகளையிட்டு அதிகம் அஞ்ச வேண்டியதில்லை. அவர்களின் செயற்பாடுகள் பகிரங்கமானவை என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். ஆனால் நண்பர்கள் போல உறவாடி முதுகில் குத்துபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
பேரினவாதிகளாகத் தங்களை இனங்காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வெளிப்படையாகவே எதிர்க்கின்றன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் மக்கள் மீது கரிசனை இருப்பது போலக் காட்டிக் கொண்டு கடைசி நேரத்தில் தீர்வுக்கு எதிராகச் செயற்படுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றது. பண்டா- செல்வா ஒப்பந்தத்திலிருந்து இன்று வரை இதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி எல்லாக் காலமும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. உண்மை நிலையை மக்கள் இப்போது உணரத் தொடங்கிவிட்டனர். யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தல்களில் இதை அவதானிக்க முடிகின்றது. இரண்டு தேர்தல்களிலும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை அடியோடு நிராகரித்துவிட்டார்கள்.
இத்தனைக்கும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. வடக்கில் மாத்திரம் இந்த நிலை என்றில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வலுவான வாக்கு வங்கி என்று ஐக்கிய தேசியக் கட்சி பெருமை பேசியது. அந்தப் பெருமையும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் புஷ்வானம் ஆகிவிட்டது. மாகாணசபைத் தேர்தலில் பெருந் தொகையான தோட்டத் தொழிலாளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களித்தார்கள். தமிழ் மக்களின் ஆதரவை வென்றெடுக்க வேண்டுமானால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான செயற்பாட்டுடன் ஐக்கிய தேசியக் கட்சி தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். தீர்வுக்கான கட்சியின் திட்டம் என்ன என்பதைப் பகிரங்கமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அரசியல் தீர்வுக்காக எதுவும் செய்யாமல் வெறும் வார்த்தைகளால் மாத்திரம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.
தினகரன் -
0 விமர்சனங்கள்:
Post a Comment