கொராசொன் அக்கியூனோ Corazon Cory Aquino (1933 - 2009)

கடந்த சனிக்கிழமை மணிலா நகரில் காலமான பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கொராசொன் அக்கியூனோ சர்வாதிகாரி பேர்டினண்ட் மார் கோஸின் ஆட்சிக்கு முடிவுகட்டிய 1980 களின் "மக்கள் சக்தி' கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியதன் மூலமாக ஜனநாயகத்துக்கும் சமாதானத்துக்குமான போராளி என்று உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற துணிச்சலான ஒரு அரசியல் தலைவியாவார். குடல் புற்றுநோயினால் அண்மைக் காலமாகப் பீடிக்கப்பட்டிருந்த திருமதி அக்கியூனோவுக்கு வயது 76 ஆகும். ஆசியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமைக்குரிய அவரின் மறைவை முன்னிட்டு பிலிப்பைன்ஸில் 10 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படவிருக்கிறது. மார்கோஸ் ஆட்சிக்கு எதிரான திருமதி அக்கியூனோவின் துணிச்சலான போராட்டத்தின் சின்னமாக விளங்கிய மஞ்சள் நிறப்பட்டியை அணிந்தவண்ணம் மக்கள் பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டங்கள் எங்கும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இறுதிச் சடங்குகளை அரச மரியாதையுடன் செய்வதற்கு தற்போதைய ஜனாதிபதி குளோறியா மகாபெல் அரோயோவின் அரசாங்கம் முன்வந்த போதிலும், குடும்பத்தவர்கள் அதை நிராகரித்துவிட்டனர். நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதியின் பூதவுடல் மணிலா நினைவுப் பூங்காவில் அவரது கணவரின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கணவர் பெனிக்னோ அக்கியூனோ 1983 ஆகஸ்டில் மணிலா விமான நிலையத்தில் வைத்து மார்கோஸின் இராணுவச் சட்ட ஆட்சியின் பாதுகாப்புப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டதன் பின்னரே கொராசொன் அக்கியூனோ முதற்தடவையாக சர்வதேச பிரசித்தத்தைப் பெற்றார். முன்னாள் பத்திரிகையாளரான பெனிக்னோ அக்கியூனோவை 1954 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கொராசொன் அடுத்து வந்த 20 ஆண்டுகளில் கணவரின் அரசியல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக பின்னணியில் இருந்து உதவும் ஒரு அமைதியான குடும்பப் பெண்ணாகக் காணப்பட்டார். இத்தம்பதியரின் வாழ்க்கை பற்றி ஒருதடவை வர்ணித்த நண்பர் ஒருவர் பெனிக்னோவை ஒரு போர் வீரர் என்றும் கொராசொனை அந்தப் போர் வீரரின் வாளைத் துப்புரவு செய்து கூர்மைப்படுத்துவதுடன் குதிரையையும் பராமரிக்கும் ஒருவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். பிலிப்பைன்ஸின் வரலாற்றிலேயே வயதில் குறைந்த இளம் நகரபிதாவாக, ஆளுநராக இறுதியில் இளம் செனட்டராக தெரிவு செய்யப்பட்டவரென்ற பெருமைக்குரியவர் பெனிக்னோ. ஜனாதிபதி மார்கோஸ் இராணுவச் சட்ட ஆட்சியைப் பிரகடனப்படுத்தியதையடுத்து 1973 ஆம் ஆண்டு பெனிக்னோ சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே கொராசொனுக்கு அரசியலில் ஞானஸ்நானம் கிடைத்தது.
அடுத்து வந்த 7 வருடங்கள் வெளியுலகத்துடனான கணவரின் ஒரேயொரு தொடர்பாக கொராசொனே விளங்கினார். ஜிம்மி கார்ட்டர் நிருவாகத்தின் நெருக்குதல்களையடுத்து பெனிக்னோவை மார்கோஸ் 1980 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்க வேண்டியேற்பட்டது. குடும்பத்துடன் பொஸ்டனில் அஞ்ஞாதவாசம் செய்த பெனிக்னோ பிலிப்பைன்ஸில் நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் செயற்பாடுகளில் இறங்குவதற்காக 1983 ஆகஸ்டில் நாடு திரும்பிய போது மணிலா விமான நிலையத்தில் விமானத்தின் படிக்கட்டுகளில் வைத்தே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மார்கோஸே திட்டமிட்டு இக்கொலையைச் செய்வித்ததாக பிலிப்பைன்ஸ் எதிரணி குற்றம் சாட்டியது. நாடெங்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட கணவரின் இறுதி ஊர்வலத்துக்கு தலைமைதாங்கிச் சென்ற விதவை கொராசொன் புதை குழி அருகே நின்று கணவர் விட்டுச் சென்ற பணியைத் தொடரப் போவதாகச் சூளுரைத்தார்.
சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களின் சின்னமாக விரைவாகவே மாறிய கொராசொன் 1986 பெப்ரவரியில் நடத்தப்பட்ட திடீர் ஜனாதிபதித் தேர்தலில் மார்கோஸை எதிர்த்துப் போட்டியிட்டார். நீண்ட காலமாக மார்கோஸின் கையிலிருந்த அரசு இயந்திரம் தேர்தல் முடிவுகளில் குளறுபடிகளைச் செய்து மக்கள் விருப்புக்கு மாறாக மார்கோஸ் வெற்றி பெற்றதாக அறிவித்தது. ஆனால், எதிரணி அரசியல் சக்திகளும் மணிலா கார்டினல் ஜெய்மி சின் தலைமையில் கத்தோலிக்க நிறுவனமும் இராணுவத் தளபதி பிடல் ராமோஸ் தலைமையிலான இராணுவ கிளர்ச்சியாளர்களும் போராட்டங்களில் இறங்கி கொராசொனையே ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியாளராக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். மார்க்கோஸுக்கு எதிராகக் கிளம்பிய இராணுவத்தினரை அவருக்கு விசுவாசமான படைகள் ஒடுக்குவதைத் தடுக்க மக்கள் மனிதச் சுவர்களாக அணிதிரண்டனர். மார்கோஸின் மாளிகை மக்களினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் அவர் இறுதியில் குடும்பத்தினருடன் அமெரிக்க ஹெலிகொப்டர்கள் மூலமாக மாளிகையிலிருந்து மீட்கப்பட்டு ஹாவாய்க்குக் கொண்டு செல்லப்பட்டார். அஞ்ஞாதவாசத்தின் போது மார்கோஸ் நோய்வாயுற்று மாண்டுபோனார்.
"மக்கள் சக்தி' கிளர்ச்சியின் அலைமீது ஏறிநின்று ஆட்சியதிகாரத்துக்கு வந்த கொராசொன் 1986 தொடக்கம் 1992 வரை ஒரு பதவிக்காலத்துக்கு பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியதன் மூலமாக கொராசொன் பெற்றிருந்த தார்மீக பலம் அவரது பதவிக் காலத்தில் அரசியல் பலவீனமாகவும் உறுதியான தீர்மானங்களை எடுப்பதில் இயலாமையாகவும் பெயர்த்துரைக்கப்பட்டதாக சில அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டியிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. மக்கள் போராட்டத்தின் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் ஒருவர் நீண்ட காலம் அதிகாரத்திலிருந்த சர்வாதிகாரியின் அரசு இயந்திரத்தின் எச்சசொச்சங்களைப் பயன்படுத்தி நிருவாகம் செய்வதில் இருக்கக் கூடிய நெருக்கடிகளை கொராசொனின் பதவிக்காலத்தில் வெளிப்படையாகக் காணக் கூடியதாக இருந்தது.
குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், இராணுவத்திற்குள் இருந்த மார்கோஸ் ஆதரவுச் சக்திகள் அடுத்தடுத்து மேற்கொண்ட சதி முயற்சிகள் என்று பல நெருக்கடிகளை எதிர்நோக்கிய கொராசொன் தனது முதல் பதவிக் காலத்தின் முடிவில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னரும் கூட பிலிப்பைன்ஸில் அதிகாரத்தில் இருப்பவர்களினால் மேற்கொள்ளப்படக் கூடிய எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்ட இயக்கங்களுக்கு கொராசொனின் "மக்கள் சக்தி' போராட்டம் எப்போதுமே ஊந்து சக்தியாக இருந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஏதேச்சாதிகார ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கிற்கு எதிரான உணர்வுகள், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சமாதானம் ஆகியவற்றின் பெயரில் என்றுமே நினைவு கூரத் தக்க ஆரோக்கியமான பங்களிப்பை உலகுக்கு வழங்கிய ஒரு தலைவி கொராசொன் அக்கியூனோ!






0 விமர்சனங்கள்:
Post a Comment