உலகை பரபரப்பில் ஆழ்த்திய அபல்லோ-13 பயணம்

அன்று 1969 ஜுலை மாதம் 20ம் திகதி. முழு உலகையும் காந்தம் போல கவர்ந்திழுத்த தினம். மனிதன் தனது சொந்த முயற்சியால் முதல் தடவையாக புவி ஈர்ப்புச் சக்தியின் பிடியில் இருந்து விடுபட்டு பூமியின் துணைக் கிரகமான நிலவில் காலடி பதிக்கப் போகும் தினம். பாட்டிக் கதைகளுக்கும், குழந்தைக்கு சோறு ஊட்டுவதற்கும், மூட நம்பிக்கைகளுக்கும், சமய நம்பிக்கைகளுக்கும் மட்டுமே பயன்பட்டு வந்த நிலவு, மனிதன் கால் பதிப்பதற்கும், அப்பூமியை நேரடியாக ஆராய்வதற்கும் பயன்படப் போகும் தினம். மிக மிகச் சிறியதாக உலகில் தோற்றம் பெற்ற உயிரினம் மனிதனாக வளர்ச்சிபெற்று, அதன் அறிவு விருத்தியால், எட்டாக் கனியாக இருந்த நிலவில் கால் பதிக்கப் போகிறது என்றால், அது லேசுப்பட்ட காரியமா, என்ன?
1969ம் ஆண்டு இலங்கையில் பெட்டறி ரேடியோ தான் பாவனையில் இருந்தது! புளொக் கல் என்று சொல்வோமே அந்த சீமெந்து கல் அளவுக்கு அளவிலும் நிறையிலும் உள்ள பெட்டறிகளைப் பாவித்தே வானொலியைக் கேட்டு வந்தார்கள். பெட்டறி சக்தி இழந்து விருமானால் அதை உயிரூட்ட பல உத்திகளை கைக்கொள்ள வேண்டியிருந்தது. அது இலங்கையில் டிரான்சிஸ்டர் வானொலிகள், அதாவது டோர்ச் பட்டறிகளினால் வேலை செய்யும் ஜப்பான் வானொலிகள் மெதுவாக இலங்கையில் கால் பதித்துக்கொண்டிருந்த காலம். ரேடியோ இல்லையேல் கிராமபோன். அல்லது தியட்டருக்கு சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் பொழுது போக்குவதற்கு. பழைய வாகனங்கள் குறுகிய தார் வீதிகளில் ஓடிக்கொண்டிருந்த காலம் அது.
அப்போது சிலிங்கோ ஹவுஸ் தான் இலங்கையிலேயே உயர்ந்த கட்டடம். கொழும்பெங்கும் ‘டபள் டெக்கர்’ பஸ்கள் தான் ஓடிக்கொண்டிருந்தன. இறப்பர் செருப்புகள், டெரிலின் ஷர்ட்டுகள் இரண்டு ரூபாவுக்கு ஒரு போத்தல் சாராயம் என மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த போதுதான் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் நிலவில் கால் பதித்தார். அடுத்ததாக பஸ் அல்ட்ரின் இறங்கினார். இந்த நிகழ்வுகளை ஐரோப்பிய டி.வீக்களில் நேரடியாக ஒளிபரப்பினார்கள். நாம் கடாபுடாவென ஓசை எழுப்பிச் செல்லும் ஓட்டை இ. போ. ச. பஸ்களில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது அமெரிக்கா விண்ணியல் விஞ்ஞானத்தில் அத்தகைய அசுர வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை இப்போது நினைக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது. ஏனெனில் கொழும்பு நகருக்கு மேம்பாலம் வந்ததே சில வருடங்களுக்கு முன்னரேயே. கடந்த நான்கு வருடங்களாக ஒருகொடவத்தையில் ஒரு மேம்பாலத்தை
முக்கிமுணங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் நாம், அறுபதுகளில் விண்வெளித்துறையில் எத்தகைய அறிவு மட்டத்தைக் கொண்டிருந்தோமோ அதே மட்டத்தில்தான் நமது அறிவு இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது என்பதையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனினும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதெல்லாம் 1972ம் ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது. சந்திரனை நோக்கி மொத்தம் ஒன்பது அபல்லோ விண் கலங்கள் ஏவப்பட்டன. அவற்றில் ஆறு அபல்லோ கலங்கள் சந்திரனில் மனிதர்களை இறக்கி வெற்றிகரமாக அவர்களை பூமிக்கு கொண்டு வந்து சேர்த்தன. இந்த சந்திர பயணங்களில் மொத்தம் 24 அமெரிக்க விண் வீரர்கள் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். மனிதன் சந்திரனில் இறங்கி நாற்பது ஆண்டுகளின் பின்னர் இவர்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால் அவர்களில் அறுவர் காலமாகிவிட்ட செய்தி தெரிய வருகிறது.
அபல்லோ 11 தான் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்கை அழைத்துச் சென்று சந்திரனில் காலடி வைக்கச் செய்து, சரித்திரத்தின் மங்காப் புகழ்பூத்த விண்கலம் என்றால் அதற்கு சமமாகப் பேசப்பட்ட விண்கலம் அபல்லோ 13 ஆகும். பொதுவாகவே 13ம் இலக்கத்தை ஐரோப்பியர் மற்றும் அமெரிக்கர்கள் துர் எண்ணாகவே கருதுவது வழக்கம். எனினும் மூட நம்பிக்கைக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று 12ம் அபல்லோ பயணத்தின் பின்னர் அடுத்த பயணத்துக்கு அபல்லோ - 13 என்று பெயரிட்டது நாஸா. 13 என்ற இலக்கம் சனியன் பிடித்தது என்ற நம்பிக்கை மூட நம்பிக்கை தான் என்றாலும் அந்த பயணத்துக்கு சனியன் பிடித்தது உண்மை.
அபல்லோ 13 இல் ஜேம்ஸ் லொவல், ஜெக் ஸ்விஜெர்ட், ப்ரெட் ஹேய்ஸ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இவர்களில் இருவர் சந்திரனில் இறங்கி நடமாடித் திரும்ப வேண்டும். 1970ம் ஆண்டு ஏப்ரல் 11ம் திகதி கேப் கெனவரல் முனையில் இருந்து அபல்லோ - 13 புறப்பட்டது. பூமியை விட்டு விலகி சந்திரனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது அதன் 55 வது மணித்தியாலத்தில் அபல்லோ தாய் கலத்தில் ஒரு விபத்து நிகழ்ந்தது. அச்சமயத்தில் அபல்லோ கலம் சந்திரனை உயரத்தில் வலம் வந்துகொண்டிருந்தது.
அப்போது அபல்லோ பயணம் எப்படி நிகழ்ந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பூமியின் ஈர்ப்பு விசையை மீறி உயரத்துக்கு இட்டுச் செல்லும் சக்தி வாய்ந்த பூஸ்டர் ரொக்கட்டின் உச்சியிலேயே அபல்லோ கலம் அமைந்திருக்கும். ஈர்ப்பு விசையற்ற விண்வெளிக்கு அபல்லோ கலத்தை உந்தித் தள்ளியதோடு இந்த ரொக்கட்டின் பணி முடிந்துவிடும். பின்னர் அபல்லோ கலம் மட்டும் விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிப் பயணமாகும்.
இதை ‘சேர்விஸ் மொட்யூல்’ என அழைத்தார்கள். இதனுடன் மற்றொரு சிறிய கலம் இருக்கும். அபல்லோ சந்திரனைச் சுற்றி வரும் போது இரு விண்வெளி வீரர்கள் ‘லூனர் மொட்யூல்’ என அழைக்கப்படும் இச் சிறிய கலத்தில் ஏறி அமர்ந்துகொள்வார்கள். பிரதான கலத்தின் பின்பகுதியில் இக்கலம் பொருத்தப்பட்டிருக்கும். பொருத்தமான நேரம் வந்ததும், சேர்விஸ் கலத்தில் இருந்து சந்திரனுக்கான கலம் கழற்றிவிடப்பட அது சந்திரனை நோக்கி பயணிக்கும். குறிப்பிட்ட இடத்தில் இறங்கும். சந்திரனில் வீரர்கள் நடமாடி முடிந்து திரும்ப வேண்டிய சமயத்தில் இதில் ஏறி அமர்ந்து கொண்டு இதை இயக்குவார்கள். இக்கலம் புறப்பட்டு மேலெழும்பி பறக்கும். பொருத்தமான சமயத்தில் தன் தாய்க் கலத்துடன் இணைந்து கொள்ளும். பின்னர் இதில் உள்ள இரண்டு வீரர்களும் தவழ்ந்து தாய்க் கலத்தினுள் புகுந்துகொள்வார்கள். இதன்பின், தாய்க் கலம் பூமிக்குத் திரும்பிவிடும். இதுதான் அபல்லோ சந்திர யாத்திரை.
அபல்லோ - 13 இன் தாய்க்கலம் நிலவை சுற்றி வரும் போது தாய்க் கலத்தின் உள்ளே ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் அக் கலம் செயலிழந்து போனது. அதன் பிராணவாயு விநியோகம் தடைப்பட்டது. இந்நிலையில் வீரர்கள் என்ன முடியும்? இருப்பதோ பூமியிலிருந்து மூன்று இலட்சத்து 85 ஆயிரம் கி. மீ. தொலைவில். அந்தக் கலத்தில் தொடர்ந்து மனிதர்கள் சீவிக்க முடியாது. அவர்களை அப்படியே விட்டுவிடுவதா? திரும்ப அழைத்து வருவதென்றால் அதை எப்படிச் செய்வது? என்ற கேள்விகள் நாஸாவைத் துளைக்க ஆரம்பித்தன. உடனடியாக மூவரையும் பிரதான கலத்தைக் கைவிட்டு ‘லூனர் மொட்யூல்’ என அழைக்கப்படும் சந்திரனில் இறங்குவதற்காகப் பயன்படுத்தப்படவிருந்த சிறிய கலத்தினுள் புகுந்துகொள்ளும்படி அவர்களுக்க பூமியில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இந்த அளவில் அவர்களின் உயிர் தற்காலிகமாகக் காப்பாற்றப்பட்டது. அடுத்ததாக, ஹுஸ்டன் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவு தாய்க்கலத்தைத் தமது முழுமையான கடடுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது.
விஞ்ஞானிகள் கூடி அடுத்ததாக என்ன செய்வது என்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தனர். விஞ்ஞானிகளுக்கு இது பிரச்சினை என்றால் அரசியல் ரீதியாக அமெரிக்க அரசுக்கு இது ஒரு பிரச்சினையாக முளைத்திருந்தது. ஏனெனில் அப்போது ரிச்சர்ட் நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக வீற்றிருந்தார். அவருக்கு வியட்நாம் யுத்தம் ஒரு தலைவலியாக இருந்தது. அவரது விசேட ஆலோசகராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த ஹென்றி கிசிஞ்சர் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த நேரம் அது. இத்தருணத்தில் அமெரிக்காவுக்கு புகழை அள்ளித் தந்ததோடு சோவியத் ரஷ்யாவை மட்டம் தட்டவும் உதவிய அபல்லோ திட்டத்தில் இத்தகைய கடுமையான பின்னடைவு நிக்சனுக்கு தலைவலியாக மாறியதில் ஆச்சரியம் இருக்க முடியாதுதான். விண் வெளியின் தொலை தூரத்தில் கடுங்குளிரும் அந்தகாரமுமாக காணப்படும் இடத்தில் மூன்று அமெரிக்கப் பிரஜைகளை கைவிட்டு பட்டினியாலும் பயத்தாலும் சாகவிடுவதா? இது அமெரிக்க பெருமைக்கும் கர்வத்துக்கும் பெரிய இழுக்காக அமைந்துவிடுமே! - அமெரிக்க அரசியல் நிர்வாகம் இவ்வாறு கவலைப்பட்டுக் கொண்டிருக்க,
அன்றைய பாப்பரசர் ஆறாம் அருளப்பர், உலக மக்களை கடவுளிடம் மன்றாடும்படி கேட்டுக்கொண்டார். அந்த மூவரையும் உலகுக்கு மீட்டுத்தரும்படி உலக மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நிகழ்த்தினர். மூவரின் உயிருக்காக அச்சமயத்தில் உலக மக்கள் ஒன்றுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆபத்து என்ற நிலைமாறி உலகத்துக்கே ஆபத்து வந்த மாதிரி மக்கள் உணர்ந்தனர். அடுத்ததாக என்ன செய்ய முடியும்? என்பதே அச்சமயத்தில் மிகப் பெரும் கேள்வியாக இருந்தது.
இது இப்படி இருக்க, சந்திரனை அதன் ஈர்ப்பு விசைக்குள் இருந்தபடி சுற்றி வந்து கொண்டிருக்கும் தாய்க் கலத்தை சந்திர பாதையை விட்டு அகற்றி பூமியை நோக்கிய பாதைக்குள் திருப்ப வேண்டும் என விஞ்ஞானிகள் முடிவெடுத்தனர். இத்திசைத் திருப்பலுக்கு ஓரிரு ராக்கெட்டுகளை வெடிக்கச் செய்ய வேண்டும். கலத்தின் வெளிப் புறத்தில் இவை அமைந்திருந்தன. அவை இயங்க மறுத்தால் மூன்று வீரர்களும் சந்திர வெளியில் சமாதியாக வேண்டியதுதான்.
அந்த ராக்கெட்டுகளை இயக்குவதற்கான கட்டளை பூமியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம்! அவை சரியாக இயங்கின. கலம் சந்திர விசையில் இருந்து மீண்டு பூமிக்கான நெடிய பாதைக்குள் வந்தது. பூமியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
அடுத்த பாரிய பிரச்சினை பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைவதாகும். வளிமண்டலத்தினுள் பிரவேசித்ததும் ஏற்படும் உராய்வினால் மிகக் கடுமையான வெப்பம் ஏற்படும். முழுக் கலமும் பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல தகதகக்கும். இச் சந்தர்ப்பத்தில் வெப்பம் பழுதான தாய்க் கலத்தை பஸ்பமாக்கிவிட்டால்....? சந்திர கலத்தில் அடைக்கலம் புகுந்திருக்கும் மூவரையும் வெப்பத்தில் இருந்து தாங்கும் சக்தி சந்திர கலத்துக்கு உண்டா?
உலக மக்கள் மீண்டும் அல்லோலகல்லோலப்பட்டனர். ஆலயங்களில் விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றன. பூமிவாசிகள் பூமியில் இருந்து சில மைல் உயரத்தில் பஸ்மமாவதை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா? என்ற வேதனை உலகைக் கெளவியது. உலக மக்கள் அனைவரும் மூச்சு பேச்சின்றி அவதானித்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் அக்கலம் பூமியின் வளி மண்டலத்தில் பிரவேசித்தது. எப்போதுமே ஒரு கலம் வளிமண்டலத்தில் பிரவேசித்ததும் பூமியுடனான அதன் தொடர்பு சில நிமிடங்களுக்கு அற்றுப்போய்விடும். பின்னர் தொடர்பு கிடைக்கும். அதேபோல அபல்லோ 13 இன் தொடர்பும் அற்றுப் போனது. மீண்டும் தொடர்பு கிடைக்குமா, இல்லையா? ஹுஸ்டன் கட்டுப்பாட்டாளர்கள் உறைந்து போயிருந்த கணங்கள் அவை.
சில நிமிடங்கள் கழிந்து, தொடர்பு கிடைத்தது. விண்வெளி வீரர்கள் நாங்கள் நலமாக இருக்கிறோம் என மகிழ்ச்சியுடன் அறிவித்ததை ஹுஸ்டன் பெரு மகிழ்ச்சியுடன் ஊடகங்களுக்குத் தெரிவிக்க, உலகெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது. கடவுளுக்கு நன்றி சொல்லும்படி பாப்பரசர் மீண்டும் அறிவிக்க, ஆலய மணிகள் மீண்டும் ஒலித்தன. இந்த மகிழ்ச்சிச் செய்தியை இலங்கை வானொலியும் விசேட செய்தியாக அறிவிக்க அதை செங்கல் பெட்டரி ரேடியோவோடும் கராமுறா ஓசைகளுக்கு நடுவே நாங்களும் கேடடு அகமகிழ்ந்தோம்.
கடவுளாவது கத்தரிக்கையாவது! மனிதர்கள் சொந்த அறிவையும் விவேகத்தையும் பயன்படுத்தியதால்தான் இம் மூவரையும் மீட்டுக் கொண்டுவர முடிந்ததே தவிர கடவுள் அருளாலோ பிரார்த்தனை சக்தியாலோ அல்ல என நாத்திகர்கள் நமுட்டுச் சிரிப்புடன் சொல்லத் தவறவில்லை. இலங்கை பகுத்தறிவாளரான ஆபிரகாம் கோவூர் இது தொடர்பாக டெய்லி நியுஸ் பத்திரிகை ‘ஆசிரியர் கடிதம்’ பகுதிக்கு எழுதி இருந்தார். எமது பிரார்த்தனை பலத்தால் தான் அபல்லோ வீரர்கள் திரும்பிவர முடிந்தது என்பது உண்மையானால், கேப் கனவரல் விண் தளத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விண் கலத்தை பிரார்த்தனை பலத்தால் ஒரே ஒரு அங்குலத்துக்கு உயர்த்தச் செய்யுங்களேன் பார்க்கலாம் என்று கோவூர் அக் கடிதத்தில் பாப்பரசருக்கு சவால் விட்டிருந்தார்.
இப் பயணத்தை மேற்கொண்டிருந்தவர்களில் ஒருவரான ஜெக் ஸ்வி ஜெர்ட் காலமாகிவிட்டார். பிரட் ஹெயிசும் ஜேம்ஸ் லொவலும் உயிருடன் உள்ளனர். சந்திரனுக்கு அருகே இருந்தபோது விபத்து நிகழ்ந்தது. அப்போது அந்த முதல் மூன்று மணித்தியாலங்களை நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? பூமியை நோக்கி திரும்பும் போது உங்களிடம் மரண அச்சம் ஏற்பட்டிருந்ததா? என்ற கேள்விக்கு இம் மூவரும் பதிலே சொல்லவில்லை. சமீபத்தில் மீண்டும் இக் கேள்வியை லொவலிடம் கேட்ட போது அவர் பதில் சொன்னார்:
“நாங்கள் திரும்பி வரும்போது விண்கலத்தினுள் என்ன நடந்தது? எங்களுள் என்ன நடந்தது என்பதை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்வதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம். அதைக் காப்பாற்றி வருகிறோம்” என்பதே அவரது பதிலாக இருந்தது.
அருள் சத்தியநாதன்






0 விமர்சனங்கள்:
Post a Comment