"நாங்கள் கைவிடப்பட்டவர்கள் அல்லர்"

செட்டிக்குளம் நிவாரண கிராம பாடசாலையில் ஓர் அநுபவம்
ஒரு கரு உயிராகி உருவாகி வளர்கின்ற கருவறையும் வகுப்பறையும் ஒன்று என்பார்கள். குழந்தைகள் எங்கு பிறந்தாலும், அவர்கள் வகுப்பறைகளில்தான் வளர்கிறார்கள்! இடம்பெயர்ந்திருந்தாலும் செட்டிக்குளத்தில் அந்த இதம் கிடைத்திருக்கிறது வன்னிக் குழந்தைகளுக்கு.
கிடுகுகளால் வேயப்பட்ட கொட்டில்கள், பள்ளிக்கூட கட்டமைப்புகளாக இருந்தாலும், குண்டுகள், ஷெல்லுகள் என்ற பயப்பீதியற்ற சூழலில் கற்றல் இருக்கிறது. திண்ணைப் பள்ளிக் கூடங்களிலும், கட்டாந்தரைகளிலும் கற்றுத் தேர்ந்த மேதைகள் உள்ளதைப் போல், வடக்கில் கிடுகுப் பள்ளிக் கூடங்களில் அறிவைப் பெற்றுப் புத்திஜீவிகளான பலர் இருக்கிறார்கள்.
இந்த நினைவுகளெல்லாம் வன்னி மாணவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தாலும், அவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காகக் கிடைக்கும் உதவிகள் ஒத்துழைப்புகளால் பூரித்துப் போகிறார்கள். அவர்களின் மகிழ்வினால் ஏற்படும் நெகிழ்வு விபரிக்க முடியாதது! இப்படி லேக்ஹவுஸ் இந்துமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஒரு நேரடி அநுபவம் ஏற்பட்டிருக்கின்றது.
வுனியா - செட்டிக்குளம், மனிக்ஃபாமில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 5193 மாணவர்களுக்காக இயங்குகிறது கதிர்காமர் வித்தியாலயம். ஓர் அரசாங்கப் பாடசாலைக்குரிய சகல கட்டமைப்புக்களுடன் இது விளங்குகிறது. நிவாரண இடைநிலை கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறது. என்றாலும் மாணவர்களின் தேவைகள் பல இன்னமும் பூர்த்திசெய்யப்படவேண்டியுள்ளன. குறிப்பாக அவர்களை உளவியல் ரீதியாக உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம் என்பது, கதிர்காமர் வித்தியாலய அதிபர் எஸ். இராஜாவின் பேச்சில் புரிகிறது.
‘பிள்ளையள் கவனியுங்கோ! லேக்ஹவுஸ் நிறுவனத்திலை இயங்குகிற இந்து மன்றத்தினர் உங்களுக்கு உதவுவதற்காக வந்திருக்கினம். முதலிலை அவையள நாங்க வரவேற்போம். உங்களுக்குத் தேவையான சில கற்றல் உபகரணங்களை கொண்டு வந்திருக்கினம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் கைவிடப்படவில்லையென்றதை ஞாபகத்திலை வைச்சுக்கொள்ளுங்கோ! இப்படியானவர்கள் எங்களுக்கு உதவ காத்திருக்கினம். நீங்கள் தைரியமாகப் படிக்கவேணும். அவர்கள் இங்கு வந்ததன் மூலம் உங்களை கடவுள் ஆசீர்வதிச்சிட்டார் என்று நினைச்சுக்கொள்ளுங்கோ’
அதிபர் இராஜாவின் வார்த்தைகளில் நெகிழ்ந்துபோன மாணவ மாணவிகள் கரகோஷம் செய்கிறார்கள். இரு மாணவிகளின் கண்களில் பெருகிய கண்ணீர் கன்னம் வரை வழிகிறது. அதனைப் பார்த்த இந்து மன்ற உறுப்பினர்களின் கண்களும் குளமாகின்றன.
எமக்கு ஒத்துழைப்புக்காக வந்திருந்த உதவி அரசாங்க அதிபர் வசந்தகுமார் அதிபரை அடுத்து, இந்து மன்றத்தினரின் முயற்சி பற்றி விளக்கினார். ‘கதிர்காமர் கிராமத்திற்கு வருவதற்கு முன்பு 2, 3 கிராமங்களுக்குப் போனனாங்கள், என்றாலும் இங்கு உள்ள பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டியிருந்த உதவிகள் கிடைச்சிருக்குது. அரசாங்க அதிபர் சார்ள்ஸின் பணிப்பின்பேரில், இவர்களைக் கூட்டிவந்தனான்’. சுருக்கமாகத் தமது விளக்கத்தை முடித்தார்.
உண்மையில், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் எப்படித்தான் இத்துணை பணிகளையும் சலிப்பில்லாமல் எந்நேரமும் சுறுசுறுப்பாய், புன்முறுவலுடன் ஆற்றுகிறாரோ தெரியவில்லை. சாதாரண கடமைகளுக்கு மேலதிகமாக எத்தனையோ பொறுப்புகளை அவர் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இந்த வேலைப் பளுவுக்கு மத்தியிலும், பலதரப்பட்டோரையும் சந்திக்க வேண்டும்.
இதற்கிடையில் எமக்காகவும் நேரம் ஒதுக்கி, நாம் கொண்டு சென்ற நிவாரணப் பொருள்களை சம்பிரதாயபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டு அவற்றை நாமே நிவாரண கிராமங்களுக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்கிறார். உதவி அரசாங்க அதிபர் கடமை முடிந்து வீடு செல்ல ஆயத்தமாகி இருக்க வேண்டும். என்றாலும் அரச அதிபரின் கட்டளையை ஏற்று சிரித்த முகத்துடன் எமக்கு வழித்துணையாக, ஒத்துழைப்பாக வருகிறார்.
முதலில் தீர்மானித்த வலயம் ஒன்று, இரண்டு கிராமங்களுக்குச் சென்றால் அங்குள்ள முகாம் அதிகாரிகள், அவர்களின் மேலதிகாரி மேலொப்பமிட்டுத் தரவேண்டும், அனுமதி வழங்கவேண்டும் என்று கூறிவிட்டனர். முகாம் கட்டளை அதிகாரியைக் காணச் சென்றால் அவர் கூட்டமொன்றுக்குப் போயிருக்கிறார். அவர் வரும் வரை வீணே ஏன் நேரத்தைக் கடத்த வேண்டும் என்றுதான் கதிர்காமர் கிராமத்திற்குச் சென்றோம்.
அடையாள அட்டைகளையும் கைப்பேசிகளையும் ஒன்றாகத் தந்துவிட்டுப்போகலாம் எனப் பச்சைக்கொடி காட்டுகிறார்கள் அங்குள்ள படையினர். இப்படித்தான் கதிர்காமர் கிராமத்தில் உள்ள க. பொ. த. சாதாரண மாணவர்களுக்கு இந்து மன்றத்தின் உதவி போய்ச் சேருகிறது. மாதிரி வினாப்பத்திர புத்தகங்கள், கொம்பாஸ் பெட்டிகள், பேனை, பென்சில்கள், உள்ளிட்ட எழுது கருவிகள், உபகரணங்கள் கொண்டு வந்திருப்பதாக முகாம் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்தோம். அவர் உடனடியாக அதிபருக்கு அறிவித்து ஆசிரியர், மாணவர்களையும் வரவழைத்துவிட்டார்.
ஆசிரியர் பணி என்பது வெறும் ஒரு தொழில் அல்ல. மூங்கில்களைப் புல்லாங்குழலாக்கும் கலை. அந்த வகையில், நிவாரண கிராமங்களில் உள்ள ஆசிரியர்கள் கல்விப் பணிக்காக தங்களையே கரித்து மெழுகாக்கித் தொண்டாற்றுகிறார்கள். முகாம் மாணவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதிலும், அவர்களுக்கு உதவிகளைப் புரிவதிலும் ஆர்வமாக செயற்படுகிறார்கள் அந்த ஆசிரியர்கள். இங்கு மாணவர்கள் படிக்கின்ற சூழல் நன்றாக இருக்கின்றது. மாணவர்களுக்கான தேவைகளை அறிந்து அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்தார் அதிபர் ராஜா.
கதிர்காமர் வித்தியாலயத்தில் தரம் ஒன்று முதல் 13 வரை 628 மாணவர்கள் பெற்றோரை இழந்தவர்கள். தரம் 1 – 5 வரை 227 மாணவர்களுக்குப் பெற்றோர்கள் இல்லை. 70% மாணவர்களுக்கு பாதணிகள் அவசியம். என்ற விபரங்களைக் கூறும் அதிபர் ராஜா, மாணவர்களின் சொந்த இடங்களை வினவுகிறார். கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்கிறார்கள் மாணவர்கள். ஆக எல்லா இடங்களையும் சேர்ந்த பிள்ளைகள் இங்கு ஒன்றாகக் கற்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் இன்னும் உதவி புரியவேண்டும். அதற்கு பலதரப்பட்டோரும் ஒத்துழைக்கவேண்டும்.
லேக்ஹவுஸ் இந்து மன்றம் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழாவையொட்டி பாடசாலை மாணவர்கள் மத்தியில் கட்டுரைப் போட்டிகளை நடத்திப் பரிசில்களை வழங்குகிறது. கலை நிகழ்வையும் ஏற்பாடு செய்கிறது. இந்தத் தடவை எல்லா கலகலப்பையும் நிறுத்திவிட்டு, நிவாரண கிராமங்களின் பிள்ளைகளுக்கு உதவ முடிவு செய்ததன் விளைவே செட்டிக்குளம் நிவாரண கிராமங்களுக்கான விஜயம். இதற்கு லேக்ஹவுஸ் நிறுவனம் பூரண ஒத்துழைப்பை வழங்கியது. மன்றத்தின் உறுப்பினர்கள், அல்லாதவர்கள், முன்னாள் ஊழியர்கள் எனப் பல தரப்பினரும் ஒத்துழைத்தார்கள். குறிப்பாக தினகரன்/ வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியம், செய்தி ஆசிரியர் குணராசா, அசோக்குமார் ராஜா, அருள் சத்தியநாதன், முன்னாள் ஊழியர்கள் சற்குணநாதன், ஜெகதீஸ்வரன், மற்றும் தெஹிவளை ஆஞ்சநேயர் ஆலயத்தினர் ஆகியோரை விசேடமாக நினைவுபடுத்த வேண்டும். இதுவிடயத்தில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது.
வவுனியா நிவாரண கிராமங்களுக்குச் செல்லத் தீர்மானித்ததும், பொருளாளர் விஸ்வகாந்தன் பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றினார். கிராமங்களுக்குச் சென்று எண்ணத்தை நிறைவேற்றும்வரை உற்சாகம்தான். தலைவர் ஈஸ்வரலிங்கம், செயலாளர் அனோஜா சஜிதரன், கிருஷ்காந்தன், சிவக்குமார், சுஜீவன் சர்மா, நிரஞ்சன், வீரசிங்கம், நாகேஸ்வரன், பரசுராமன், ருக்மணிகாந்தன், இராஜன், மணி ஸ்ரீகாந்தன், நாகஇளந்திரையன், பவானந்தன், சிதம்பரப்பிள்ளை சிவகுமார், வாசுகி சிவகுமார், பாண்டியன், உதயகுமார், பிரேம்குமார், ஸ்ரீகாந்த், யோகரஞ்சன், செந்தில்வேலவர், ஆனந்த பாலகிட்ணர், ரவிரத்னவேல், ஜெயகுமார், ஜெயரேணுகா துஷ்மந்த, லட்சுமி பரசுராமன், உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மன்றத்தின் முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறார்கள்.
தாயின் ஆரோக்கியம்தான் குழந்தையின் ஆரோக்கியம், ஆசிரியரின் ஆரோக்கியம் மாணவர்களின் ஆரோக்கியம், அதுவே ஒரு சமூகத்தின் ஆரோக்கியம். இந்து மன்றத்தின் ஆரோக்கியமான பணிகள் என்றும் தொடரவேண்டும்.
விசு கருணாநிதி






0 விமர்சனங்கள்:
Post a Comment