இலங்கை - இந்திய உறவும் ஈழத் தமிழின விடுதலைப் போராட்டமும் - 1
கடந்த ஒரு வருடத்துள் இலங்கை கொன்று குவித்த, கைது செய்து சித்திரவதை செய்து காணாமற் போக்கடித்த மக்கள் பற்றிய விபரமோ தொகையோ எவருக்குமே தெரியாது.
மேலும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான எமது உறவுகள் முட்கம்பி முகாம்களுக்குள் நரக வேதனைக்குள் விடியல் இன்றித் தவிக்கின்றனர்.
அன்றாடம் வெளிவரும் ஒலி-ஒளிக் காட்சிப் பதிவுகள் உருகாத உள்ளங்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்து வருகின்றன. இவை முடிந்துவிட்ட கதைகள் அல்ல. முடிவின்றித் தொடரும் சோகக் கதைகள். நம் இனம் உட்பூசல் விரோதங்களில் காட்டிக் கொடுப்புகளில் எதிரிகளுக்கு வசதியாக உறைந்து கிடக்;கிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏதோ புதிதாகக் கிணறு வெட்டப் போவதாகவும் அதற்கு இலங்கை அரசால் சர்வதேச சட்ட விதிகளுக்கு விரோதமாகக் கடத்திச் சிறையில் விசாரணைக்கு உள்ளாகி உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் செல்வராசா பத்மநாதனிடம் கொந்தாலி பெறப் போவதாக இந்திய அரசு இலங்கை அரசின் சர்வதேசக் கடத்தல் கைதுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.
மேலும் இந்த அரசுகளின் கூட்டு தொடர்ந்தும் எம்மினத்தை வறுத்து எடுப்பதிலே கண்ணும் கருத்துமாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.
இக்கட்டுரை எழுதப் படும் 7.09 இலும் தென் இந்தியத் தமிழகத் தினத் தந்திப் பத்திரிகையில் புதிதாக ஒரு அபாண்டப் பழி புலிகள் இயக்கத்தின் மீது போடப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானில் இலங்கைக் கிரிக்கட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலுக்குப் புலிகள் இயக்கம் பணம் கொடுத்துச் செய்வித்ததாக பாக்கிஸ்தான் அதிபர் கிலானி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் என அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும் அந்த அற்புத தகவலைத் தமக்கு மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் லிபியாவில் சந்தித்த போது கூறியதாகச் செய்தியாளருக்குத் தெரிவித்தார் எனவும் அச்செய்தி கூறுகிறது.
எல்லைப் போரில் எந்நேரமும் மோதலில் ஈடுபட்டு வரும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இத்தகைய பிரச்சாரத்தில் இறங்கி இருப்பதன் நோக்கம் என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இவர்களின் உள்நோக்கம் ஈழத் தமிழரின் எவ்வித நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளும் கோரிக்கைகளும் அடியோடு இல்லாமல் போகச் செய்வது அல்லாது வேறு என்னவாக இருக்கும்?
நாடு கடந்த தமிழ் ஈழ அரசுப் பிரகடனம் தளிர்த்துத் தலை தூக்கி விடக்கூடாது என்பதில் எதிரிகளும் எதிரிகளின் எதிரிகளும் ஒன்றிணைந்து எமக்கு எதிராகச் செயற்படுகிறார்கள்; என்பதை இத்தகைய செய்திகள் காட்டுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எதிரிகளைப் பொறுத்தவரை எப்போதையும் விட இப்போது மிகத் தீவிரமாகவும உறுதியாகவும் எமக்கு எதிராகப் போராடுவது தெளிவாகத் தெரிகிறது.
சிங்களத்தின் ஈழத் தமிழின அழிப்புப் போரின் முக்கிய பங்காளிகள் இந்தியா சீனா பாக்கிஸ்தான் என்ற நிலை மாறி ஐ.நா. செயலர் பான் கீ மூன், அவரது முதன்மை அதிகாரி விஜய் நம்பியாரும் அவரது சகோதரரும் இலங்கை இராணுவ ஆலோசகருமான சதீஷ் நம்பியாரும் பங்களிப்புச் செய்ததும் இந்திய உலங்கு வானூர்திகள் மற்றும் படைப் பங்களிப்புகள் உறுதிபட வெளியாகி இருப்பதும் இலங்கைக்கான இந்திய ஆதரவு என்பது மெல்லவோ விழுங்கவோ முடியாத நிலையை இந்தியாவுக்கு உருவாக்கி உள்ளது.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான விவாதம் எடுபடாமற் செய்வதை இந்தியா உறுதிப்படுத்தியதில் இருந்து இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தமிழருக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளை விடவும் கடுமையான விதிகளை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது.
இவர்களின் தவறான வழிகாட்டலால் தாம் தவறிழைத்து விட்டோம் எனச் சில சர்வதேச நாடுகள் உணரத் தலைப்பட்டுவிட்டதை அவற்றின் அறிக்கைகளும் இன்னர் சிற்றி பிறஸ் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கூற்றுகளும் வெளிப்படுத்தி வருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டும் அல்ல ஈழம் என்ற சொல்லே பயன்படுத்தக்கூடாது என்ற தடையை இந்திய மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் இந்தியா ஈழத் தமிழருக்கு எத்தகைய அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் என்பது சிறு பிள்ளைகளும் புரிந்து கொள்ளக்கூடிய விடயமே.
அதே தருணத்தில் இலங்கைக்கு எதிரான எந்தவிதச் சர்வதேச விசாரணை, கட்டுப்பாடுகள், அல்லது நெருக்கடிக்கும் இந்தியா என்ன விலை கொடுத்தும் தடுக்கும், இடம் அளிக்காது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
சர்வதேச வர்த்தக இராணுவ நலன்கள் மட்டுமே உலக அரசுகளின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் இன்றைய உலகில் இந்தியாவின் இத்தகைய நிலைப்பாடு எமக்கு மிக ஆபத்தானதாக உள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான எந்த ஒரு இன அழிப்பு மற்றும் போர்க் குற்ற சர்வதேசக் குற்ற விசாரணையும் கூட எடுபடாது போகும் ஆபத்தில் எமது இனம் தவிக்கிறது.
எமக்கு நீதி நிவாரணம் மீள் குடியமர்வு மறுக்கப்பட்டுள்ள படு கேவலமான, பரிதாபமான மனித அவல நிலையைக் கூட இந்தியாவின் சுயநலம் கண்டு கொள்ளாது இருப்பதும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.
இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழினத்தின் தலைமையை தீர்மானிப்பவர்களாக காட்டிக் கொள்பவரை நாம் அடையாளம் கண்டு தூக்கி எறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்த்தவே இக்கட்டுரை.
செய்த குற்றங்கள் கொடுமைகள் செய்து வரும் இனச் சுத்திகரிப்புக் குற்றங்களை மூடி மறைப்பதில் போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை நின்ற அத்தனை நாடுகளும் நேர்மையான நடுநிலை நீதி விசாரைணக்கு வழி விடமாட்டா என்பதை ஸ்ரீலங்கா அரசின் மிரட்டல் இராஜதந்திரம் உறுதிப்படுத்தும் என ஊகிப்பது கடினமான விடையம் அல்ல.
விசாரணைக்கு அழைப்பு விடத்; துணியும் எந்த அரசும் ஸ்ரீலங்கா அரசினால் குற்றத்தில் துணை போன வகையில் விசாரணைக்குள் இழுத்துவிடும் நிலை உருவாக்கப்படும். எனவே எமக்கான நீதி என்பது இப்போதைக்குப் பகல் கனவாகவே இருக்கிறது. இந்நிலையில் நாம் எமது அரசியல் உரிமைகளைத் தொலைத்து வருங்காலத் தலை முறையையும் எமது மண்ணையும் மீளாத நிலைக்குத் தள்ளி விடுவதா?
1905 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண வாலிபர் சங்கம் எழுப்பிய விடுதலை முழக்கம் இலங்கையின் வரலாற்றில் முதலும் முன்னோடியும் ஆனது. சிங்களவர் எவரும் விடுதலை பற்றிப் போசாதிருந்த நாட்களில் தமிழினம் எழுப்பிய முதல் முழக்கம்! மகாத்மா காந்தி வல்லபாய் பட்டேல் போன்ற இந்தியக் காங்கிரஸின் முக்கிய தலைவர்களை அழைத்து எழுப்பிய வீர முழக்கம்!
அப்போது இத்தாலியும் இந்தியாவும் படுக்கை போடாத காலம். அதனால் ஈழத் தமிழனுக்கு தேசமும் தேசியமும் இறையாண்மையும் இல்லை எனச் சொல்ல இந்திய இலங்கை அரசுகள் பிறந்திருக்கவில்லை. ரஷியாவும் அமெரிக்காவும், ஜப்பானும் சீனா பாக்கிஸ்தானும் எம்மை அறிந்து கொள்ளவும் இல்லை. இன்று இவர்கள் எல்லாம் எம்மைக் கருவறுக்கும் பணியில் துணிந்து நிற்கின்றனர்.
இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழினத்தை தலைமை தாங்கி வழி நடத்தும்; தகுதி யாருக்கு இருக்கிறது?.
தொடரும் கட்டுரைகள் இக்கேள்விக்கான பதிலைத் தேடும்.
-த.எதிர்மனசிங்கம்-
நன்றி: ~நிலவரம்|
0 விமர்சனங்கள்:
Post a Comment