இலங்கையில் புதைகுழிகளும் விதவைகளும் (பகுதி 2)
மல்லிகா (18.07.09) என்றபெண்ணின் கூற்றின்படி' சுதந்திரபுரத்திலிருந்து 1500பேர் வெளிக்கிட்டோம். அப்போது 27பேர் ஷெல் அடியில் சிதறிப்போய் உடனடியாக இறந்தார்கள். 50தமிழர் படுகாயமடைந்தார்கள். பெரிதாக மருந்து உபகரணங்கள் கிடைக்காததால் அவர்களிற் பலர் இறந்தார்கள். சுதந்திரபுரத்திலிருந்து ஒன்பது இடங்கள் இழுபட்டு இங்கு வந்திருக்கிறோம் (மனிக் முகாம்). இங்கு புலிகளாலோ ஆமியின் ஷெல் அடி வரும் என்றோ மரண பயம் கிடையாது. புலிகள் பெண்களைத் தங்கள் படையிற் சேர்ப்பதற்காக இடைவிடாத பயங்கர பிரச்சாரத்தைச்செய்தார்கள். நீங்கள் எங்களுடன் சேர்ந்து போராடாவிட்டால் இராணுவம் உங்களைக் கற்பழிப்பு செய்யும் என்று ஓயாமற் பயமுறுத்தியதால் எதிரியிடம் அகப்பட்டு மானபங்கப் படுவதை விட இறப்பதுமேல் என்று பல பெண்கள் போரில் இணைந்தார்கள். ஓவ்வொரு வீட்டிலும் தலைப்பிள்ளையைத் தங்களுக்குத தரச்சொல்லிக் கட்டளை போட்டார்கள். கொடுக்காவிட்டால் பலவந்தமாக இழுத்துக்கொண்டு போனார்கள்'
முகாமிலிருக்கும் பலரின் கூற்றுப்படி, புலிகளின் கொடுரத்தால் தங்களின் பெண்களைப் போரில் பலி கொடுக்கவிரும்பாத பெற்றோர் பெண்கள் பெரிய பிள்ளையானதும் யாரோ ஒருத்தனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் சிறிய வயதிலேயே கர்ப்;பவதியானார்கள். புலிகள் இந்தப் பெண்களை கர்ப்;பவதிகள் என்று நம்பாமலும், அப்படியிருந்தாலும் அவர்களின் கருவைக்கலைத்து விட்டுத் தங்களுடன் சேர்ப்பதற்கும் கர்ப்பம் அடைந்திருந்த சிறு வயதுபட பெண்களை மரத்தில் ஏறவிட்டுக் குதிக்கப் பண்ணினார்கள். இதனால் வந்த உயிரழிவுகள், ஊனங்கள் பல.
அரச படை செய்வதாக் கூறும் பாலியல் வன்முறைக்கொடுமைகளைப் புலிகள் பிரச்சாரம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தங்களின் எதிரிகளின் குடும்பப் பெண்கள் என்று நினைத்தும், அத்துடன் தங்களுடன் போர் முனைக்கு வர மறுத்த பல இளம் தமிழ்ப் பெண்களைப் புலிகள் பாலியல் கொடுமை செய்த விபரத்தைக் கொழும்பில் வைத்து ஒரு டாக்டரின் மனைவி எனக்குச் சொன்னார்.
மிகவும் வறுமைக்குள் மாட்டுப்பட்டுத்தவிக்கும் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் இப்படி எத்தனையோ துயரக்கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.இன்று ஒரு மாதத்துக்கு 400 குழந்தைகள் முகாம்களிற் பிறக்கின்றன. பெரும்பாலான பெண்களுக்குக் கணவர்கள் இல்லை அவர்களின் கணவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. மிகவும் வறிய வாழ்க்கை நிலை தொடர்டந்தால் இந்த மக்கள் பல தொற்று நோயால் இறக்கும் நிலை தவிர்க்க முடியாது.
நெருக்கமான இடங்களில் நீண்ட காலம் வாழும்போது வரும் கலாச்சார பண்பாட்டுப் பிரச்சினைகள் ஏராளம் . தேவையில்லாமல் அல்லது தக்க காரணங்கள் இன்றி ஒரு பெரிய சனத் தொகையை இப்படி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.;.
'எப்போது இவர்கள் அனைவரையும் மீள் குடியமர்த்துவீர்கள'; என்று ஜனாதிபதியின் சகோதரரும் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடி நிர்வாகத்துக்கும் பொறுப்பானவருமான திரு பசில் இராஜபக்சாவைக் கேட்டபோது (14.07.09)' பாதுகாப்பு விடயங்கள் முற்றுப்' பெற்றதும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்' என்றார்.
'பாதுகாப்பு விடயங்கள் முடிந்ததும் எப்போது இந்த மக்கள் மீழ் குடியேற்றம் செய்யப்படுவார்கள'; என்று பாதுகாப்பு உயர் செயலாளரான திரு கோத்தபாய இராஜபக்சபஷாவைக் கேட்டபோது (14.07.09) ' பெரும்பாலும் 180நாள்களுக்கிடையில் 80வீதமான மக்கள் மீள் குடியேற்றம் செய்யப் படுவார்கள் என்று சொன்னார். வைகாசி மாதம் போர் முடிந்து இன்று 10கிழமைகள் முடிந்து விட்டன. கிட்டத்தட்ட 60.000மக்கள் இதுவரை மீழ் குடியேற்றம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.
அங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் நெல் விளையும் பொன் பூமியான வன்னியின் மைந்தர்கள். இவர்களின் நிலங்கள் பயிர் காணவேண்டும் ஒவ்வொரு விவசாயிக்கும் 20.000பணம் , விதை நெல், விவசாய தளபாடங்கள், கூட்டு வேலை செய்ய உழவு மெஷின், அவர்களுக்கு உழைப்பு கையில் வரும்வரை அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்கப் படும் என்று திரு பசில் இராஜபக்ஸா சொன்னார்.;. 35 கிராமங்கள் மீள் குடியேற்றத்திற்குத் தயாராகவிருப்பதாக வவுனியாவின அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் அவர்கள் சொன்னார்கள்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்பவர்களில் 40 வீதமானோர் இளவயதினராகும். பெரும்பாலான இளம்தாயமார் போசாக்கின்மையால் வாடுகிறார்கள். இவர்களுக்கு உதவ 17 நிலையங்களில் போசாக்கு உணவுகள் கொடுபடுவதாக அகில உலக உணவுப் பகிர்வாளர்கள் சொன்னார்கள் (18.07.09);. இவர்களின் பிளாஸ்டிக் முகாம் நீண்ட வாழ்க்கைக்கு உதவாது. இந்த இடங்களில் வாழ்பவர்கள் நெருக்கடிகளைச் சகிக்க வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களை நெருக்கமான இடத்தில்' தற்காலிக'; முகாம் என்ற பார்வைக்குள் நீண்ட காலம் அடைத்து வைப்பது பல பிரச்சினைகளைக் கொண்டுவரும்.
இலங்கையில் இந்த முகாம்களில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவ நினைக்கும் புலன் பெயர்ந்த தமிழர் எத்தனையோ உதவிகளைச் செய்யலாம். அத்துடன் வயது குறைந்த போராளிகள் , அரச படையிடம் சரணடைந்தவர்கள் ஜந்து முகாம்களில் வைக்கப்பட்டுப் படிப்பு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றன. பெரும்பாலான மாணவர்கள் ஓ லெவல் ஏலெவல் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது புலிகளால் பிடிக்கப்பட்டு போர்முனையில் தள்ளப் பட்டவர்கள். இந்த மாணவச் செல்வங்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட ஒரு சில நூறுபேர் மட்டும் தப்பி வந்து சரணடைந்திருக்கிறார்கள். இவர்களின் உயர் கல்விக்கு உதவினால் உங்களுக்குப் புண்ணியம் வரும்.
லண்டனில் தொடங்கப்பட்ட ' லிட்டில் எயிட்' என்ற ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டு இவர்களுக்கு உதவலாம். இம்மாத முடிவுக்குள் இடம் பெயர்ந்த மக்களுக்காக மட்டுமன்றி இலங்கையில் போரால் அவதிப்பட்ட பலருக்கும் உதவி செய்ய எங்கள் முயற்சியால் இலங்கையில் ஒரு ஸ்தாபனம் பதிவு செய்யப் படுகிறது. அந்த ஸ்தாபனத்தின் விபரங்கள் மிக விரைவில் தெரியப் படுத்தப் பட்டதும் அதன் மூலம் உங்கள் உதவிகளை எங்கள் மக்களுக்குக் செய்யலாம்
வெளி நாடுகளில் போராட்டங்களை நடத்தி அதன் அடிப்டையில் அன்னியர் மூலம் ஈழம் எடுக்கலாம் என்ற போலிப்பிரசாரத்தை நம்பாமல் இன்று கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவது எங்கள் கடமையாகும.; தங்களுக்கு இலாபம் வராத எந்த நாட்டு அரசியலிலும் மேற்குலகம் பெரிதாகத் தலையிடாது. அத்துடன் அவர்கள் இன்று எங்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல் பாசாங்கு பண்ணுவது தங்கள் நாட்டில் வாழும் தமிழரின் வாக்குகளைத் தக்க வைத்தக் கொள்ள மட்டும்தான் என்பதைப் புரிந்து கொள்ளல் நல்லது. எங்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்நாட்டுக்குப்போய் முதல்வரின் மகளான கனிமொழி அவர்களிடம் ' இலங்கையில் முகாம்களில் வாடும் இலங்கைத் தமிழரை ஒரு தரம் வந்து பாருங்கள், இந்தியத் தமிழரின் குரல் தமிழ் மக்களின் துயர் துடைக்க ஓங்கி ஒலிக்க வேண்டும்' என்று கேட்டபோது' எனக்கு அங்கு வந்து நிலைமையை நேரில்பார்க்க விருப்பம் ஆனால் மத்திய அரசு அதற்கு இன்னமும் அனுமதி தரவில்லை' என்றார். இலங்கைத் தமிழருக்கு அனுதாபப்படக்கூட' அனுமதி' வேண்டும் என்ற பரிதாபமான அரசியற் சூழ்நிலையிற்தான் நாங்கள் வாழ்கிறோம்.
புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் சிலர் புலிகளின் ஊதுகுழல் வானொலி மூலம் 'இலங்கையில் வாழும் தமிழர்கள் போரைக் கொண்டு நடத்தவேண்டும் அதற்காக எந்த விதமான பண உதவியையும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தருவதற்குத் தயாராகவிருக்கிறோம்' என்று சொன்னதாக முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஆத்திரப் பட்டார்கள். போர் நடந்த இடங்களில் புலிகளின் ஆயுதங்கள் என்று கண்டுபடிக்கப்பட்டவைகளில்; இதுவரை கண்டு பிடித்தது 20 விகிதம் மட்டுமே, தமிழ்ப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் மிகுதி ஆயதங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் சொல்கின்றன. கோடிக்கணக்கான பணம் செலவழித்துப் புலிகள் கொள்வனவு செய்த நவீன ஆயதங்கள் இருந்தும் அவற்றைப் பாவித்துப் போர் செய்ய ஆட்கள் இல்லாதபடியால் புலிகளின் போர் தோல்வியானது. சனத்தொகையிலும், பொருளாதாரத்திலும், மனவலிமையிலும் மிகவும் ஒடுங்கிக் கிடக்கும் சமுதாயத்தை இன்னமும் வருந்தப் பண்ணுவது தர்மமல்ல. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயதங்களை மறுபடியும் தூக்குவதற்கு மனிதக் கரங்கள் கிடையாது. அங்கிருக்கும் பல கரங்கள் காயம் பட்டவை, ஊனமானவை. அத்துடன் இன்னுமொரு யுத்தம் வரக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள்.
இன்று எங்கள் தமிழ்ச்சமுகம் மிகவும் துயருற்ற நிலையில் இருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து போர் முழக்கம் செய்வதால் இலங்கையில் இன்னும் பேரழிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்க பலர் துடிக்கிறார்கள். பணத்தைக் குவித்து பெரிய இரும்பு ஆயதங்களைக் குவிக்கலாம் . ஆனால் வீர உணர்வுடன் போராட வலிமையான கரங்கள் இல்லாவிட்டால் இந்த இரும்பு ஆயதங்கள் காலக் கிரமத்தில் துருப்பிடித்து பிடித்த அழிந்து விடும். புலிகள் இதுவரை சேர்த்த பணத்தில் 700 பில்லியன் தொகை வெளிநாட்டு வங்கிகளில் இருப்பதாகச்சொல்லப் படுகிறது. அதில் ஒரு சிறு பகுதியை இன்று இந்த முகாம்களில் துயர்படும் ஏழைகளுக்குக்கொடுத்து உதவலாம்.
ஓரு சமுதாயத்தின் கண்கள் அந்நாட்டின் பெண்கள். இன்று இலங்கையின் தமிழ்ப் பெண்கள் கணிசமான தொகையில் கைம்பெண்களாகக் கஷ்டப்படுகிறார்கள். மிக மிக வசதி படைத்த வாழ்க்கையைப் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு வருடத்துக்கொருதரம் சினேகிதிகளுடன் சேர்ந்து கொண்டு தண்ணியடித்து விட்டுப் பெண்ணியம் பேசுவதால் முகாம்களிலுள்ள பெண்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடமுடியாது.
இந்த முகாம்களில் வாழும் பெண்களின் நிலையை மாற்றம் அதிகாரம் படைத்தவர்கள் இன்று ஆட்சியில் இருப்பவர்கள். அந்த நிர்வாகத்தைப் பராமரிப்பவர்களின் அரசியல் தத்துவம் எங்கள் பலரின் அரசியல் தத்துவங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அல்லற் படும் ஏழைகளுக்கு ஏதோ ஒரு நிவர்த்தி கிடைக்க அந்த அதிகாரத்துடன்தான் பேசவேண்டும்.
அப்படிப் பேச முனைவோரின் அந்தத் துணிவையும் ஆளுமையையும் வெற்று வார்த்தைகளால் கிண்டல் அடிப்பதால ஆக்க பூர்வமாக எதுவும் செய்ய முடியாது. இழப்பதற்கு ஒன்றுமேயற்ற தமிழருக்காக ஏதும் நன்மை செய்ய வருபவர்களைப் பழித்துக்கூற 'அவர்கள் அரசின் பணத்திற்குப் பல்லிழி;ப்பவர்கள்' என்று பேசுவது மிக மிக கீpழ்த்தரமான மனப்போங்காகும்.
வலிமையற்று இன்று முகாம்களில் வாடும் தமிழ் மக்களுக்குக் குரல் கொடுக்க ஒன்றுபடும் துணிவும், நேர்மையும் அதற்கு மேலால் தமிழினத்தில் பாசமுமுள்ள ஒரு சிலரை விலைக்குவாங்க எந்த அரசாலும் முடியாது. விலைமதிப்பற்ற மனித நேயத்திற்கு விலைபேச எந்த சக்திகளுக்கும் வலிமை கிடையாது. அப்படியான சக்திகளுடன ;சேர்ந்து எங்கள் மக்களுக்கு உதவுவோம் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜப்பானும் ஜேர்மனியும் மிகவும் பாரதூரமாகப்பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் தலைவர்கள் அழிக்கப்பட்டார்கள் அதற்காக ஜேர்மனியோ ஜப்பானோ உலக வரை படத்திலிருந்து அழிக்கப்படவில்லை. இன்று பொருளாதாரத்திலும் ஜனநாயகக்கோட்பாடுகளிலும் மற்றவர்களால் மதிக்கும் நாடுகளாகத் தலை நிமிர்ந்து நிற்கின்றன.
1982ல் அகில உலகக் கல்விக் கணிப்பீட்டில தென்கிழக்காசியாவில் தலை நிமிர்ந்து நின்ற தமிழ்ச்சமுதாயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம். வெட்ட வெட்டத் தழைக்கும் மரத்தைப்போல் எந்தக்கொடுமைக்கும் சளைக்காது மீண்டும் மீண்டும் உயர்ந்து நிற்கும் மனப்பான்மை கொண்டவன் இலங்கைத் தமிழன். அந்தப் பாரம்பரிய சரித்திரத்தை மீள்; படைப்போம் எங்கள் மக்களை முகாம்களிலிருந்து வெளியே எடுத்து ஒரு புதிய சமுதாயததைப் படைப்போம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, அது இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு.
' சக்தி' பெண் அமைப்புக்கு உதவ நினைப்பவர்கள் உங்கள் உதவியை:
''Sakthi' Ac No:265-4000010-8,
934, Sithandi branch-
என்ற விபரத்துக்கு அனுப்பவும்;
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
Thenee
0 விமர்சனங்கள்:
Post a Comment