இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த பத்தாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்: அவர்களுக்கு என்ன நடந்தது?

வடக்கிலிரந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை தற்காலிகமாக தங்க வைத்துள்ள வவுனியா நலன்புரி முகாம்களிலிருந்த சுமார் 10,000 பொதுமக்கள் அங்கிருந்து காணாமல் போயுள்ளனர் என்று வவுனியா மாவட்ட அதிபரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தொகைப் பொதுமக்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குறித்த பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் விஷேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளமுள்ளி வாய்க்கால் மற்றும் நந்திக்கடல் களப்பு போன்ற பிரதேசங்களில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போர் நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தங்கியிருந்த பொதுமக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருமாறு பாதுகாப்புப் படையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையின் பிரகாரம் சுமார் மூன்று இலட்சம் பொது மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்தனர். இவ்வாறு வருகை தந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் கணக்கிடப்பட்ட போது அத்தொகை மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 80 ஆயிரமாகக் காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த பொது மக்கள் அனைவரும் வவுனியாவில் அமைக்கப்பட்ட தற்காலிக நலன்புரி மகாம்களில் தங்க வைக்கப்பட்டதோடு அங்கு தங்கியிருந்த நிலையில் சுமார் 10ஆயிரம் பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்று இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டதோடு அவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளிப்பதற்காக புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்காக ஈடுபடுத்தப்பட்டவர்களில் சுமார் ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் குறித்த நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தொடர்பில் மீண்டுமொரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மாதத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் போது அங்கு தங்கியிருக்கும் பொதுமக்களில் சுமார் 10ஆயிரம் பேர் குறைவடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையானது வவுனியா மாவட்ட அதிபர் ஏ.எஸ்.எம்.சார்ள்ஸினால் மேலதிக விசாரணைகளுக்காக வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்துக் கொள்வதற்காக வவுனியா மாவட்ட அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அவர் இந்த நாட்களில் வெளிநாடு சென்றுள்ளதால் உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாது உள்ளது.
ஆரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சைகளின் பின்னர் முகாம்களுக்கு மீண்டும் திரும்பாமல் இருந்திருக்கலாம். இல்லை இடம்பெயர்ந்து வந்த பொதுமக்கள் தொடர்பில் நடத்தப்பட்ட முதலாவர் கணக்கெடுப்பு நடவடிக்கையின் போது ஏதேனும் தவறுகள் நடந்திருக்கலாம். ஆதனால் கணக்கெடுக்கப்பட்ட எண்ணிக்கை பிழைத்திருக்கலாம். இ;வ்வாறான காரணங்கள் காரணமாகவே இத்தொகைப் பொதுமக்கள் குறைவடைந்திருக்கலாம் என்று தாம் கருதுவதாக மாவட்ட அதிபரின் அலுவலகத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரால் அம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள சுமார் 20 முகாம்களில் இந்த பொதுமக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் போது சுமார் 2,65,000 பொதுமக்கள் பதிவு செய்யப்பட்டனர். இத்தொகை மக்கள் மாத்திரமே தற்போது முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் அந்தக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட அரசாங்க அதிபர் அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பொதுமக்கள் முதன் முறையாக கணக்கெடுக்கப்பட்டதற்கும் தற்பொது அவர்கள் மேற்படி தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கும் இடையிலான வேறுபாடு சுமார் 10 ஆயிரமாகக் காணப்படுகிறது. இத்தொகை பொதுமக்கள் குறித்த முகாம்களிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று நேற்று வெளியான தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இதற்கு முன்னர் இது தொடர்பான செய்தியொன்றை வெளியிட்ட வார இதழ் பத்திரிகையொன்று குறித்த மகாம்களில் தங்கியிருந்த சுமார் 20,000 பொதுமக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று செய்தி வெளியிட்டு இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அவ்வியக்கத்தின் குறித்த முகாம்களில் தங்கியிருந்த பொது மக்களில் ஒரு நாளைக்கு சுமார் 110 முதல் 220 பேர் வரையில் தப்பிச் சென்றிருந்தனர் என்று கணக்கிடப் படுகின்றது.
இது எவ்வாறாயினும் குறித்த பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலை தொடர்பில் எதிர்க் கட்சிகள், சர்வதேச சிவில் அமைப்புக்கள், மற்றும் மேற்கத்திய நாடுகள் போன்றன அரசாங்கத்துக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
குறித்த முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் கம்பி வேலிகளால் மறைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் அடைப்பட்டுள்ளனர். அம்மக்கள் எப்பொழுதும் இராணுவ பாதுகாப்புக்கு மத்தியிலேயே வசித்து வருகின்றனர். அதனால் அனுமதி பெற்றுக்கொள்ளாத எவரும் அங்கு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. இந்த நிலமையானது ஹிட்லர் யுகத்தில் காணப்பட்ட முகாம்கள் போன்றே காணப்படுகின்றது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
(லங்கா ஈ நியூஸ்)






0 விமர்சனங்கள்:
Post a Comment