வேலிக்கு ஓணான் போல, பாகிஸ்தான் சாட்சிக்கு வருகின்றது: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை ஆசிரியர்
உலக நாடுகளின் தொடர் கண்டனங்களுக்கு உள்ளாகி வரும் இலங்கை அரசு, உலகின் கவனத்தைத் திசை திருப்பும் பெரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதற்குத் துணையாக 'வேலிக்கு ஓணால் சாட்சி' என்பது போல் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இவ்வாறு பாரிசிலிருந்து வெளிவரும் 'ஈழநாடு' பத்திரிகையின் இன்றைய பதிப்பில் வெளிவந்த 'நமது நோக்கு' என்ற ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதான அறிவித்தலுடன் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புப் போர் திட்டமிட்டபடி நடாத்தி முடிக்கப்பட்டு விட்டது.
போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில், சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தத்திலிருந்து அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றும்படி புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களும் பெரும் பலன்கள் எதையும் பெற்றுக் கொடுக்காமல் ஓய்வு நிலையை அடைந்துவிட்டது.
விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என்ற இந்தியாவின் முடிவுக்கு முன்னால், அப்பாவித் தமிழ் மக்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற மேற்குலகின் ராஜதந்திர நகர்வுகளும் தோல்வியைத் தழுவியது.
தமிழீழ மக்கள் மீதான இந்த இன அழிப்பு யுத்தத்தில் இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும் பாக்கிஸ்தானும் கூட இலங்கையின் படை நடவடிக்கைகளுக்குத் தேவையான அத்தனை வளங்களையும் அள்ளி வழங்கின.
இந்திய காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளை முற்றாக அழப்பதற்காக எந்த நிலைக்கு இறங்குவதற்கும், விலையைக் கொடுப்பதற்கும் தயாராகவே களத்தில் இறங்கியிருந்ததனால் சீனா, பாகிஸ்த்தான் போன்ற தனது எதிரிகளுடன் இணைந்து சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணை நிற்பதை அவமானமாகவும் கருதவில்லை.
தமிழின அழிப்பிற்குத் துணை நின்ற பல்வேறு நாடுகளின் உதவி வளங்களுடன் தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு தொடுத்த சர்வதேச விதி முறைகளை மீறிய கொடுமையான போர் நடவடிக்கை மனிதாபிமானம் மிக்க பல நாடுகளினதும் அமைப்புக்களினதும் கண்டனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இலக்கானது.
இந்த நாடுகளின் இலங்கை அரசு மீதான போர் குற்றச்சாட்டுக்களையும் இந்தியா இலங்கை மீதான நன்றியுடன் எதிர் கொண்டதோடல்லாமல், சர்வதேச அரங்கில் இதனை முறியடிக்கவும் தனது ராஜதந்திர பலத்தை பிரயோகித்தது.
போர் நடைபெற்ற பகுதிகளுக்குள் சர்வதேச தொண்டு நிறுவனங்ளையோ, ஊடகவியலாளர்களையோ அனுமதிக்க மறுத்து இலங்கை அரசு சாட்சிகளற்ற விதத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்மீது அனைத்துலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், நச்சுக் குண்டுகள் வீசியும், பாதுகாப்பு வலயம் என்று தம்மால் அறிவிக்கப்பட்டு மக்கள் செறிந்து குவிந்த பகுதிகள் மீது எறிகணை, பீரங்கித் தாக்குதல்களை நடாத்தியும் தமிழ் மக்களை வகை தொகையின்றிக் கொன்று குவித்தது.
காயங்களுக்குள்ளாகி ஓடித் தப்ப முடியாமல் உயிருக்குப் போராடிய பல தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பலர் உயிரோடு புதைக்கப்பட்டார்கள். போர் முடிவுக்கு வந்துவிட்ட போதும், இன்றுவரை சாட்சிகளற்ற தமிழினப் படுகொலைகளின் தடையங்கள் எதுவும் சிக்கிக் கொள்ளாதபடி போர் நடைபெற்ற எந்தப் பகுதிக்குள்ளும் சர்வதேச நிறுவனங்களையோ, ஊடகவியலாளர்களையோ அனுமதிக்காமல் போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயற் பட்டது.
இந்த வேளையில்தான் பூதம் கிளம்பியது போல், சிங்கள தேசத்தின் கோர முகம் சர்வதேச சமூகத்தின் முன்பாக அம்பலத்திற்கு வந்தது. 'சனல் 4' பிரித்தானிய என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படும் காட்சி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.
நிர்வாணப் படுத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின் புறமாகப் பிணைக்கப்பட்ட நிலையில் பரந்த வெளி ஒன்றில் வைத்துச் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூரக் காட்சியைக் கண்டு கலங்காதவர்கள் இல்லை.
பல்வேறு திசைகளிலும் இருந்து, பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்களிடமிருந்து கண்டனக் கணைகள் சிங்கள தேசத்தை நோக்கிப் பாய்ந்தது. இந்தியாவின் பெரும் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்ட சிங்கள அரசு மீதான போர்க் குற்ற விசாரணை தொடர்பான கருத்துக்கள் மீண்டும் பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிய நிலை மீண்டும் உருவாகியுள்ளது. இதுவரை சிங்கள அரசை உலக நாடுகளின் கண்டனக் கணைகளிலிருந்து காப்பாற்றிய இந்தியா கூட 'சனல் 4' ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்களது படுகொலைக் காட்சிகளினால் தடுமாறிப் போய் விட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணாவும் அறிக்கை விடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.
ஐ.நா. செயலாளர் பதவியை துஷ்பிரயோகம் செய்து இலங்கை அரசு மீதான போர்க் குற்றச்சாட்டை பாதுகாப்பு சபையில் விவாதத்திற்கு எடுப்பதையே தவிர்த்துக் கொண்ட பான் கீ மூன் அவர்கள் மீது அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க பத்திரிகையான 'வாசிங்ரன் போஸ்ட்' பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், 'சனல் 4' ஒளிபரப்பிய காட்சிப் பதிவுகள் போலியானது என்று நிரூபிப்பதற்கு இலங்கை அரசு பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு தரப்பால் இந்தக் காட்சிப் பதிவு போலியானது என்று நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளரும், தற்போது நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான அமைச்சருமான எரிக் சொல்கெய்ம் ஒப்புக் கொண்டதாக செய்தி ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த ஒளிப்படப் பதிவு குறித்த எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படாத நிலையில் எரிக் சொல்கெய்ம் அவர்கள் இப்படி ஒரு தகவலை வெளியிட்டிருப்பார் என்று நம்புவதற்கில்லை.
இதே வேளை, 'சனல் 4' ஒளிபரப்பிய இந்த ஒளிப்பதிவுக் காட்சி குறித்து விசாரணை நடாத்துவதற்காக இலங்கை அரசு ஒரு உயர் அதிகாரியை பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் தொடர் கண்டனங்களுக்கு உள்ளாகி வரும் இலங்கை அரசு, உலகின் கவனத்தைத் திசை திருப்பும் பெரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதற்குத் துணையாக 'வேலிக்கு ஓணால் சாட்சி' என்பது போல் பாகிஸ்தான் பிரதமர் கிலானியை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் லாகூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் குழுமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலை நடாத்தியதாக 'ரெஹ்றிக் ஈ தலிபான் பஞ்ஜாப்' என்ற ஆயுதக்குழு மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, விடுதலைப் புலிகள் நிதி வழங்கியே அந்த அமைப்பின் 12 பேர் கொண்ட தீவிரவாதிகள் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவித்துள்ளார். அதுவும், கடந்த வாரம் இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்ஷவை லிபியாவில் சந்தித்து உரையாடிய பின்னர் கிலானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும்' என்பார்கள். ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தின் பங்காளியாக இருந்த பாகிஸ்தான் இப்படி ஒரு தகவலை இலங்கை அரசுக்காக வெளியிடுவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல.
ஆனாலும், தமிழர்கள் மிகவும் விழிப்பாக இருந்து, தமக்கான நீதிக்காகத் தொடர்ந்தும் போராட வேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment