சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்; மன்னிப்புக் கோராவிடின் மாற்று நடவடிக்கை
சனல் – 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி பொய்யென்பதை நிரூபித்து அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அறிக்கைகளை அத்தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்புவதுடன் எம்மிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.
இன்றேல் மாற்று நடவடிக்கை எடுக்க நேரும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை இக்காட்சிகளை ஒளிபரப்பிய அல் ஜெஸிரா, சி. என். என். போன்ற நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி நிறுவனங்கள் தமக்குக் கிடைக்கும் இதுபோன்ற வீடியோ மற்றும் தகவல்களை எம்மிடம் உறுதிப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, அதனைத் தருவோர் தொடர்பில் தெளிவோடு செயற்படுதல் அவசியமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனல் – 4 தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் :-
னல் – 4 விவகாரத்தின் சூத்திரதாரிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இது தொடர்பில் எமது வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் அறிவித்துள்ளதுடன் ஜே. டி. எஸ்., ஐ. என். எஸ். ஜீ. போன்ற பெர்லினில் இயங்கும் அமைப்புக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.
பெர்னிலில் இயங்கும் இந்த அமைப்பில் ரஞ்சித் லொக்பைல் என்பவர் பொறுப்பாகவுள்ளார். எமது தூதரகத்தினூடாக நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இது தொடர்பான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.
ஐ. என். எஸ். ஜி. என்ற இவ் அமைப்பு பெர்லினில் இயங்கும் அமைப்பாகும். இதில் பலர் அங்கத்தினர்களாக உள்ளனர். யோகநாதன், சிவசாமி சிவராஜா, திருமதி தினுஜா கிருஷ்ண சுப்பிரமணியம், நடராஜா என பெயர் கொண்டவர்களும் இவ்வமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த அமைப்பு 2009 ஆகஸ்ட் முதலாம் திகதியிலேயே ‘ப்ளொக்ஸ்டொப்’ ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கு ஜொனதன் மில்லர் என்பவரே பொறுப்பாளராகச் செயற்படுகின்றார்.
இச்செயலானது எமது நாட்டையும் படையினரையும் களங்கப்படுத்தும் செயல் என்பதால் இது விடயத்தில் நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. இதனால் நாம் இவ்விவகாரத்தை சுயாதீன பரிசீலனைகள் மூலம் விசாரித்து வருகின்றோம். இது தொடர்பில் 4 பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் விஞ்ஞானத்துறை நிபுணர் ஒருவரும் இது தொடர்பில் சுயாதீன பரிசீலனைகளை மேற்கொண்டார்.
இவர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலை சம்பந்தமான சுயாதீன விசாரணைகளில் ஈடுபட்டவர்.
இந்த நான்கு பரிசீலனைகளிலிருந்தும் கிடைத்துள்ள முடிவுகளின்படி மேற்படி வீடியோக் காட்சி கையடக்கத் தொலைபேசி கெமராவில் பிடிக்கப்பட்டதல்ல என்பது புலனாகிறது.
நேற்றும் மேற்படி விவகாரம் தொடர்பில் சகல தூதுவர்களுக்கும் அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளோம். ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய நாட்டை நேசிக்கும் சகலரும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளில் செயற்பட வேண்டியது அவசியமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை லலித் திசாநாயக்க எம்.பி. நேற்றுச் சபையில் சமர்ப்பித்ததுடன் அமைச்சர் மஹிந்த சமரவீர, ஜே. வி. பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும் இவ்விவாதத்தில் உரையாற்றினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment