வேண்டாம்... இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்...!: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை
மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்... இனி ஒரு துரோகி... பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள்.இவ்வாறு இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்காகப் போராடிக் களப்பலியான தளபதிகள், அத்தனை பேரையும் காத்து நின்று கடைசிச் சொட்டு நீருக்கும் தலை வணங்காமல் உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் எனத் தமிழீழ விடுதலைக்காகத் தவம் இயற்றியவர்களின் புனிதங்கள் புலம்பெயர் தேசங்களில் விலை பேசப்படுகின்றன.
வன்னி அவலங்களின்போது கூட மடியை இறுக்கிப் பிடித்துக் கொண்ட பல கொடை வள்ளல்கள் கணக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். 'கடைசியாகச் சேர்த்த காசு கணக்கில் வரவில்லையாம்'. இப்படியெல்லாம் புரட்சிக் கொடி பிடிக்கும் இவர்கள் யார்? என்று விசாரித்துப் பார்த்ததில் விடுதலைப் போராட்ட காலங்களில் அவர்கள் தாயகத்து மக்களுக்காகக் கிள்ளியும் கொடுக்காதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளிவருகின்றன.
விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதி சுருங்கி, முல்லைத்தீவு நோக்கி மக்களும் புலிகளும் நகர்ந்தபோது புலம்பெயர் தேசம் பொங்கி எழுந்தது. போராட்டங்கள் வெடித்தது. சிங்களக் கொலைக்கரங்களில் சிக்கித் தவித்த தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரி வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தப்பட்டன.
தமிழீழ நிலத்தில் கால் பதித்தறியாக புலம் பெயர் தேசத்துக் குழந்தைகளும் புலிக் கொடியோடு போர்க் களம் புகுந்தனர். விதிகளை மீறிய போராட்டங்களால் பலர் சிறைக் களம் புகுந்தனர். சிலர் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் ஆட்சிப் பொறுப்பி லிருந்த பலர் காணாமல் போனார்கள். அல்லது, அடி வேலிகளில் மறைந்து நின்று ஆர்ப்பாட்டங்களின் ஆழம் பார்த்தனர். எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர்களும் தம் பங்கிற்குக் கடை வைக்க முயல்கிறார்கள்.
முள்ளி வாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இருண்டு போனது ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்று ஒப்பாரி முழங்கிய போதும், 'தானைத் தலைவன் எம்மோடு இருக்கிறான்' என்ற வீர முழக்கத்துடன் புலம்பெயர் தேசம் ஆர்ப்பரித்தது. சிங்கள தேசம் ஆடித்தான் போனது. 'இதோ, புலிகளின் கதை முடிந்துவிட்டது' என்று வெற்றி முழக்கமிட்ட ராஜபக்ஷக்கள் முகம் வெளிறி நின்றார்கள். ஆம், புலம் பெயர் தமிழர்களின் பலம் அவர்களை மீண்டும் ஒரு போர்க் களம் நோக்கிப் பயணிக்க வைத்தது.
புலம்பெயர் தேசங்களில் வாழும் புல்லுருவிகள் விசேட விமானத்தில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டார்கள். விருந்துபசாரங்களும் களியாட்டங்களும் தாராளமாகவே வழங்கப்பட்டது. உல்லாசப் பயணமாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது குக்கிராமங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரிகளுடன் சமபோசனம் அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, மீண்டும் அவரவர் தேசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதோ, வந்துவிட்டார்கள். கேட்டுப் பாருங்கள் யாழ்ப்பாணத்து நிலமையை... கேட்டுப் பாருங்கள் யாழ். மக்களின் வாழ்க்கைத் தரத்தை... புலிகளின் பின்னரான வன்னி மக்களின் நிலைகூட 'இந்து ராம்' வெட்கப்படும் அளவிற்கு பெருமையுடன் விளித்துக் கூறுகிறார்கள்... என்ன அவர்களுக்குப் புலம்பெயர்ந்த நீங்களும் கொஞ்சம் கொடுத்துதவினால் தேவலோக வாழ்க்கைதான் ... என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள்... நீங்கள் ஏமாளிகளாக இருந்தால்... அவர்கள் காட்டில் பண மழைதான் போங்கள்.
இவர்கள் மட்டும்தான் என்று முடிவு கட்டிவிடாதீர்கள்... இன்னமும் பலர் புறப்பட்டிருக்கிறார்கள்... வதந்திகள் பரப்ப... துண்டுப் பிரசுரங்கள் அடித்து இருட்டோடு இருட்டாக ஒட்ட... சொந்தப் பிரச்சனைக்கும் 'துரோகிகள்' பட்டம் வழங்க... இப்படி... இப்படி... எத்தனையோ பேர்.
ராஜபக்ஷக்கள் கைகொட்டிச் சிரிக்கின்றனர். 'நாம் சாதிக்க நினைத்ததை இவர்களே நமக்காகச் சாதிக்கின்றனர்' என்று மகிழ்ச்சியோடு கை குலுக்கிக் கொள்கின்றனர். புதை குழிகளிலும் கடல் அலைகளிலும் துயில் கலைந்த மாவீரர்கள் விம்மி அழுகிறார்கள்... தமிழீழக் கனவோடு சாவினைத் தழுவிக்கொண்ட தளபதிகள் கலங்கி நிற்கின்றார்கள்.
நாம் இழந்தது கொஞ்சமா? எத்தனையாயிரம் வேங்கைகளைப் பலி கொடுத்தோம்... இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளைப் பலி கொடுத்தோம்... இத்தனை இழப்புக்களின் பின்னராவது நாம் மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமா...?
முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்ட எம் மக்களை மீட்க வேண்டாமா...? போர்க்களத்தில் ஊனமாக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டாமா...? சிங்கள தேசத்தால் அநாதைகளாக்கப்பட்ட எம் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா...? வாழ்விழந்து தவிக்கும் எம் மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டாமா...? சோற்றுக்காகக் கையேந்த வைக்கப்பட்ட எம் தேசத்து மூத்த குடிகளைத் தாங்கி நிற்க வெண்டாமா...?
அத்தனை கடமைகளும் எமக்காகக் காத்திருக்கும்போது வெட்டிப் பேச்சும், வீண் கதைகளும் எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது? எதிரியிடம் மண்டியிட மறுத்து, இறுதிவரை களமாடிப் பலியான விடுதலைப் புலிகள் கற்றுத் தந்ததை மறக்கலாமா? உங்கள் கதிரைக் கனவுகளுக்காகவா களமாடி இத்தனை வீரர்கள் பலியானார்கள்? உங்கள் சொந்த விருப்பங்களுக்காகவா ஈழத்தில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்தார்கள்?
போதும்... இதுவரை போதும்... இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! இல்லையென்றால், மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா... இனி ஒரு டக்ளஸ்... இனி ஒரு துரோகி... பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களைத் தாங்கிப் பிடித்து வாழ வையுங்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment