தென்கச்சி சுவாமிநாதன் நேற்று காலமானார்

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் உதவி இயக்குநரும், பிரபல எழுத்தாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் நேற்று காலமானார்.
இறக்கும்போது அவருக்கு வயது 67. அவர் சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். சென்னை வானொலியில் ‘இன்று ஒரு தகவல்’ என்னும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஆண்டுகள் வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன்.
அது ஒலிபரப்பான காலகட்டத்தில் அதை கேட்காதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அந்நிகழ்ச்சி புகழ்பெற்று விளங்கியது. அதில் தினம் தினம் புதுப்புது தகவல்களை, நகைச்சுவையுடன் வழங்கியவிதம் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
அவர், பிரபல எழுத்தாளராகவும் விளங்கினார். ‘அன்பின் வலிமை’, ‘தீயோர்’ மற்றும் ‘அறிவுச் செல்வம்’ உட்பட ஏராளமான புத்தகங்களை தென்கச்சி சுவாமிநாதன் எழுதியுள்ளார். 1977ம் ஆண்டில் அகில இந்திய வானொலி பணியில் சேர்ந்த அவர், விவசாய நிகழ்ச்சிப் பிரிவு இயக்குநராக நியமிக்கப்பட்டபோது, ‘வீடும் வயலும்’ என்ற சிறப்பான நிகழ்ச்சி மூலம் விவசாயத்துறையின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவி புரிந்தார்.
இது தவிர, குழ ந்தைகளுக்கான ஏராளமான நிகழ்ச்சிக ளையும் தயாரித்து வழங்கியவர் தென்கச்சி சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கச்சி சுவாமிநாதன் மறைவுக்கு பா.ஜனதா தலைவர் இல. கணேசன், இந் திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா. பாண்டியன், திராவிட கழக தலைவர் கி. வீரமணி ஆகியோர் அனுதாபம் தெரிவித் துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment