தோற்றதுதான் சரித்திரம் வெற்றிகளெல்லாம் வெறும் சம்பவங்களே
மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளே இடம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். எல்லாவற்றையும் தானே எடுத்து தானே போட்டுடைத்த மனிதராக வரலாற்றில் மாறிவிட்டார் அவர். பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” என்ற மாதிரியே இந்த நிகழ்ச்சிகளும் அமைந்துவிட்டன.”
என்றுதான் முடிகிறது அந்த நீண்ட கட்டுரை. இது ஒரு மாதத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து வெளிவரும் காலச்சுவடு சஞ்சிகையில் பிரசுரமாகியிருந்தது. வன்னிக்குள் வாழ்ந்து புலிகளுடன் நேரடி பரிட்சயம் உள்ள ஒருவர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை தான் நேரடியாக கண்ட சாட்சியமாக, ‘வன்னியில் நடந்தது என்ன? களத்திலிருந்து ஓர் அனுபவப் பகிர்வு’ என்ற தலைப்பில் எழுதி பிரசுரித்திருந்தார். பாதுகாப்புக் காரணங்கள் கருதி எழுதியவரின் பெயர் பிரசுரிக்கப்படவில்லையாம் என காலச்சுவடு எழுதியிருந்தது.
வசதி கிடைத்தால் இந்தக் கட்டுரையை எல்லோரும் வாசித்தல் வேண்டும் என்பது எனது விருப்பம். தேனி இணையத்தளத்தில் இதனை இப்பொழுதும் வாசிக்கலாம். இந்தக் கட்டுரையின் முடிவில் கூறப்பட்டிருந்த இரண்டு விடயங்களையே இங்கு நான் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளுகிறேன்.
ஒன்று, கடைசி நேரத்தில் எவரும் நினையாப் பிரகாரமாக, பிரபாகரனால் ஏன் தன்னையும் மக்களையும் பாதுகாக்க முடியாமல் போனது என்பதற்கான பதில்கள் ‘பிரபாகரனின் கடந்தகால செயற்பாடுகளிலும் அவருடைய மனவுலகத்திலுமே இருந்தன’ எனச் சொல்லப்பட்டிருப்பது. இரண்டாவது, ‘பிரபாகரனே சொல்வதைப் போல “வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” ’ என கூறப்பட்டிருக்கும் விடயங்களாகும்.
இதில் முதலாவது விடயமான பிரபாகரனது கடந்தகாலச் செயற்பாடுகள் ஏன் அப்படி இருந்தன? அவர் ஏன் அப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதற்கான பதில்கள் அவரது மனவுலகத்தில் மட்டும் இருந்தன என்று கூறி நாம் தப்பிக்கொள்ள முடியுமா? பிரபாகரன் எல்லாவற்றையும் தன்னிச்சையாக செய்தார் மற்றெல்லாரும் வெறும் தலையாட்டிகள்தான் என்று சிந்திப்பதைப்போல் மடமைத்தனம் வேறெதுவும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. பிரபாகரனின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் அவரது ஒட்டுமொத்த செயற்பாட்டிற்கும் அவரும் அவரது தளபதிகளும் மட்டுமல்ல, தமிழ் சமூகம் எந்தளவு பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதும் இங்கு நிட்சயமாக கேட்கப்படல் வேண்டும்.
பிரபாகரனின் கட்டளையில் மேற்கொள்ளப்பட்ட தனிநபர் கொலைகள் மற்றும் கைதுகள், தடுத்து வைத்தல், சித்திரவதை முகாம்கள் மற்றும் சில தனிப்பட்ட வக்கிர செயற்பாடுகள் என்பன ஏன் செய்யப்பட்டன என்பதற்கான பதில்கள் வேண்டுமானால் பிரபாகரனது மனவுலகத்தில் இருக்கலாம். ஆனால் புலிகளின் அபரிமிதமான வளர்ச்சி, பிரபாகரன் எடுத்த அரசியல் முடிவுகள், 30 வருடகால அவரது ஒட்டுமொத்த அரசியல் நகர்வுகள், பிற்போக்குத்தனமான சக்திகளுடன் புலிகளின் கூட்டுச் சேர்க்கை, இந்திய எதிர்ப்பு, தமிழ் சமூகத்தில் ஏனைய முற்போக்கு சக்திகளையும் அதன் தலைமைகளையும் அழித்தமை என்பவை தொடர்பான விடைகளை பிரபாகரனின் மனவுலகத்தில் மாத்திரம் தேடுவது பேதமையானது.
மேற்கூறப்பட்டவைக்கான விடைகளை இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியல் ஆதிக்கத்தை கையப்படுத்தி வைத்திருக்கும் யாழ்ப்பாணியத்தை ஈவிரக்க மின்றி சமுக அரசியல் ரீதியாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் மாத்திரமே கண்டுகொள்ள முடியும் என்றே நான் கருதுகிறேன். அது மட்டுமன்றி, யாழ் தமிழ் சமூகத்தினுள் ஆள வேருன்றியுள்ள அதன் அடிக்கற்களான ஜாதிய ஆதிக்கம், பிரதேசவெறி, ஆணாதிக்கம், ஊர்வாதம், சுயமையவாதம் (self centrism) என்பன எவ்வாறு இந்த வெற்றுத் தமிழ் தேசிய படாபடோபத்தினால் இழுத்துப் போர்த்தி மூடப்பட்டன என்னும் விடயமும் முழுமையாக வெட்டித் திறந்து பார்க்கப்படல் வேண்டும். ஒரு காலத்தில் யாழ்பாணச் சமூகத்தினுள் வர்க்கப் போராட்டத்தையே தீண்டாமை ஒழிப்பு போராட்டம் என்னும் ஜாதி எதிர்ப்பு போராட்டமாகத்தான் யாழப்பாண மாக்ஸிஸ்டுக்களால் நடத்த முடிந்தது. அந்தளவிற்கு அச்சமூகத்தில் ஜாதிக்கும் வர்க்கத்திற்குமான இடைவெளி நுண்ணியதாகக் காணப்பட்டது.
தமிழ் சமூகத்தின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறை வியாபித்து ‘தமிழ் தேசிய’ விடுதலை என்னும் பெயரில் ஆயுதப் போராடம் வளர்ந்த காலத்தில்கூட “இது நளவர் பள்ளரின்ற இயக்கம்” “அந்த இயக்கத்துக்குள்ள கண்ட சாதிகளும் இருக்கிதுகள்” போன்ற கருத்துக்கள் யாழ்ப்பாண சமூகத்தில் மிகச் சாதாரணமாகவே புளங்கின. புலிகள் ஏனைய இயக்கங்களை அழிக்கும்போது, “அவங்கள் வெளிமாவட்டப் பொடியளைத்தான் கொல்லுறாங்கள். யாழ்பாண பொடியளை கொல்ல இல்லை”. “வெளிமாவட்ட சனியங்கள்தான் இங்கை வந்து கண்ட இயக்கங்களோடையும் சேர்ந்து களவெடுக்கிதுகள்” என்னும் அளவுக்கான கீழ்த்தரமான பிரதேசவாதமும் அங்கு சகஜமாக நிலவியது.
ஆகவே, புலிகள் என்பது தனியொரு குழு, பிரபாகரன் என்பவர் தனியொரு நபர் என்று முடிவுக்கு நாம் வருவது அபத்தமானதாகும். அப்படியான முடிவுக்கு வருவதன் மூலம் அந்த சமூகத்தினுள் ஆழுமையில் இருக்கும் ஆதிக்க வெறிகொண்ட மோசமான சமூக அரசியல் போக்கினை மீண்;டும் உரமிட்டு வளர்ப்பவர்களாவோம். பிரபாகரன் சிந்தனை, புலிகள் இயக்கச் செயற்பாடு என்பதுதான் யாழ்ப்பாணியத்தின் சமூக அரசியல் அடித்தளம். பிரபாகரனும் புலிகளும் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனநாயக மறுப்பு, தமிழ் சமூகத்தில் இயங்கும் சகல அமைப்புகள் மீதான கொடும்பிடி, தாம் மடடுமே சரி மற்றெல்லாம் தவறானவை, பயனற்றவை, எனவே அழிக்கப்படலாம் என்கின்ற சுயநல, சுய மையவாத போக்கு என்பவற்றை, நாம் யாழ்பாணியத்தினுள் நாளாந்த சமூக வாழ்க்கையில் பல்வேறு தரப்பினரிடையே, பல்வேறு தளங்களில், பல்வேறு தரத்தில் காணலாம்.
இதில் மிக மோசமானது என்னவெனில் புலிகளின் அரசியலுக்கு எதிர் அரசியல் செய்தவர்கள், புலிகளின் ஜனநாயக மறுப்பை விமர்சித்தவர்கள், புலிகளின் ஊடக ஒடுக்கு முறையை கண்டித்தவர்கள், புலிகளின் மனித உரிமை மீறல்களை கண்டித்து மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் என எல்லோரிடத்திலும் இந்த யாழ்ப்பாணியத்தின் போக்குகள் கணிசமாக இருப்பதை நாம் காணலாம். அவரவர் பலம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்த யாழப்பாணியத்தின் போக்கை அருவருக்கத்தக்க வகையில் அவர்களும் வெளிப்படுத்தி வந்துள்ளனர் என்பது அருவருப்பான உண்மையாகும்.
இந்த யாழப்பாணிய பிற்போக்குத்தனமான ஆதிக்கச் செயற்பாட்டின் சமூக, அரசியல், மனோவியல் போக்குகளை சரியாக கணிப்பிட முடியாது. அதனுடன் மோதியவர்கள்; அடித்து நொருக்கப்பட்டார்கள். அதன் போக்குகளை நன்கு அறிந்திருந்தும் அதனுடன் மோதாது அதற்கு ஒத்தூதி, பின்னர் எல்லாவற்றையும் சமாளிக்கலாம், மாற்றலாம் என்று கனவுகண்டவர்களும் தோல்வியைத்தான் தழுவினார்கள்.
வெளியிலே முற்போக்கு பேசியபடி அதேவேளை உள்ளுக்குள்ளே அதே யாழப்பாணியத்தின் ஒரு கூறாக இருந்தபடி அதனை நியாயப்படுத்தியவர்களும் இன்று மூக்குடைபட்டு நிற்கின்றார்கள். அதனை நியாப்படுத்தி அதற்கு சர்வதேச சமூக அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த பலர் அதனாலேயே அழிக்கப்பட்டும் விட்டனர். யாழ்ப்பாணியத்தின் பிரதிபிம்பமான புலியிச அரசியலில் தொங்கி வித்தைகாட்டி மிதந்து விடலாம் என கனவு கண்டவர்கள் எல்லோரையம்கூட அது கடித்து சப்பி சக்கையாகத் துப்பித்தானிருக்கிறது.
ஆகவே புலிகளின் வளர்ச்சியையும், செயற்பாடுகளையும், தோல்வியையும் பிரபாகரனின் மண்டைக்குள் தேடுவதை விடுத்து அதனை எமக்குள்ளேயே தேடினால்தான் அதற்கான சரியான விடைகளைக் முடியும். யாழ்ப்பாணியம் என்னும் அழிவு இயந்திரத்தின் கூரிய பற்களாக செயற்பட்டு அதனாலேயே கடித்துக் குதறப்பட்டவர்கள்தான் பிரபாகரனும், அவரது தளபதிகளும், அவரது துதிபாடிகளும் என்பதே உண்மை எனவே எல்லாப் பழியையும் பிரபாகரனினதும் அவரது கூட்டாளிகளினதும் தலைமேல் சுமத்திவிட்டு யாழ்ப்பாணியம் புதுவேஷத்தோடு, புதுக்கோஷத்தோடு வருவதற்காக மீண்டும் தயாராகிறது என்பதையிட்டு எச்சரிக்கையாக இருப்பதே சாலச் சிறந்தது.
‘வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்’ எனறு பிரபாகரன் சொல்வாராம் என்று கட்டுரையாளர் முடிவில் கூறியிருக்கிறார். இதே போன்றதொரு கருத்தை ஜே.வி.பி. தலைவரான ரோஹன விஜேவீர சிறையில் இருக்கும்போது கூறியதாக தென்னிலங்கை முன்னாள் ஜே.வி.பி. நண்பரொருவர் ஒருமுறை என்னிடம் கூறினார். “எமது புரட்சி தோல்வி கண்டதால் எல்லோரும் இதனை ‘1971 ஏப்ரல் கிளர்சி’ என்று சொல்லுகிறார்கள். இன்று பலர் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் விமர்சிக்கிறார்கள். ஆனால் அது வென்றிருந்தால் எல்லோரும் எமது வெற்றியின் களிப்பைப் பருகியபடி இதுவே மாபெரும் புரட்சி என்று கொண்டாடியிருப்பார்கள். வென்றால் புரட்சி தோற்றால் கிளர்ச்சி” என்றாராம் ரோஹன விஜேவீர.
ஆனால் 1971ம் ஆண்டில் மண் கவ்விய அவரது புரட்சி, 1987ல் விஜேவீரவும் அவருடைய பிரதான சகாக்களும் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்களும் பறிபோனதோடு படு தோல்விகண்டதே, அது எப்படி? 1971இல் இருந்து 1987வரை அவர்கள் தங்களை மீளாய்வு செய்யவில்லையா அல்லது 1971ல் ஏற்பட்ட தோல்வியின் படிப்பினைகளை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையா? அவர்களது தோல்வி இன்றும் எதைக்காட்டி நிற்கின்றது? எங்கேயோ பாரிய தவறு விடப்பட்டிருக்கிறது என்பதையல்லவா? வேரிலேயே அழுகல் இருந்தால் விருட்சம் உருப்படுமா? என்பார்களே அதுபோல்தான்.
1971ம் ஆண்டு தோல்விக்குப் பின்னர், ஜே.வி.பி.யுடன் இருந்து வெளியேறிய பலர் பின்னர் அதன் தலமையையும் அதன் கொள்கை செயற்பாடுகளையும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். அவர்களில் சிலரிடம் நான் பேசியபோது 1971ல் உங்களுக்கு எப்படி ஜே.வி.பி.யின் கொள்கைகள் செயற்பாடுகள் தவறாக தெரியவில்லை? என்று வினவியிருக்கிறேன். அதற்கு அவர்கள் “தவறுகள் தெரிந்தாலும் அப்போது எமக்கு வேறு மாற்று இருக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும், அரசுக்கு எதிராக தாக்கமுள்ள அழுத்தத்தை கொடுக்கும் ஒர் இயக்கமாக ஜே.வி.பி. மட்டுமே இருந்தது.” என்றார்கள். “ஆனால் ஜே.வி.பி.யின் தவறான போக்குகள் மக்களை அழிவுக்குத்தான் கொண்டுபோகும் என்பதை நாம் பின்னர் அறிந்துகொண்டோம். அந்தப் போராட்டம் வெற்றி பெறமாட்டாது என்பதும் எமக்கு தெரியும்” என்றனர்.
புலிகளின் போராட்டமும் அதற்கு கொள்கை வகுத்துக் கொடுத்த யாழ்ப்பாணியத்தின் போராட்டமும் வெற்றிபெறமாட்டாது என்பது ஆரம்பத்திலேயே புரிந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அன்று முதல் புலிகளுக்கு முண்டுகொடுத்து ஆதரித்த தமிழ் சமூகத்தின பல தரப்பினருக்கு புலிகளைவிடவும் வேறு மாற்றுக்கள் நிரம்பவே இருந்தன.
தமிழ் மக்களின் ‘தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தமிழ் சமூகத்துக்குள்ளேயே புழுத்து, முட்டை நாற்றமெடுத்த பிற்போக்குத்தனங்களைத் தூக்கியெறிய வேண்டும் என்னும் நோக்கில் உருவாகிய அரசியல் செயற்பாடுகள் பல இருந்தன. ஆனால் அந்த யாழ்ப்பாணியத்துடன் ஒத்துப்பாடி சமூக அங்கீகாரம் பெறும் அற்பத்தனமான ஆதிக்க ஆசை அந்தத் தரப்பினரை புலி அரசியலை நோக்கித் தள்ளியது. மனித சமூகத்தை வெறும் மந்தைகளாக பார்க்கும் வெறித்தனம் மிக்க ஒரு வெற்று மனிதனை, இந்த சமூகம் தலைவனாக தூக்கி வைத்தது. தவறான அரசியல் செயற்பாடுகளை கேள்வியின்றி ஆதரித்தது.
இத்தகைய பின்னணியில் இந்தப் போராட்டம் வெற்றிபெற்று ‘சரித்திரமாகும்’ என்ற கனவுலகில் அது தமிழ் சமூகத்தை வாழ வைத்தது. விதையிலேயே சூத்தை விழுந்த இப்போராட்டம் வெற்றியடைந்திருக்காது என்பது தான் உண்மை. ஆகவே அப்போராட்டத்தின் தோல்விதான் இன்று சரித்திரமாகியிருக்கிறது. அதன் முப்பது வருடப் பாதையில் அது அடைந்ததாக கூறிய இராணுவ வெற்றிகள் எல்லாம் இன்று வெறும் சம்பவங்கள் மட்டுமே.
நன்றி உதயம்
0 விமர்சனங்கள்:
Post a Comment