மாமன்னருக்கு தெனியாயவில் இரகசிய மாளிகை
தனக்கருகில் உள்ளவர்களைக் கொண்டு தன்னை மன்னராகக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, மாத்தறை மாவட்டத்தில் தெனியாய நகரில் மிகவும் இயற்கை எழில்மிக்க இடமொன்றில் ஆடம்பர மாளிகையொன்றை நிர்மாணித்து வருகிறார்.
லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துடன் இந்த இரகசிய மாளிகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் இந்த இரகசிய மாளிகை, அவரது சகோதரியான காந்தினிக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகிலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தெனியாய, பெபரேலிய பிரதேசத்தில் மிகவும் அழகான இடமொன்றில்
அமைக்கப்படும் இந்த மாளிகையின் நிர்மாணப் பணிகள் பிரபல வாஸ்துசாஸ்திர நிபுணரான சந்தனதாஸ் வத்தவின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கமநெகும திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரமல்லாது, அரசாங்கத்தின் ஏனைய வாகனங்களையும் பயன்படுத்தி இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், இவ்வாறு அமைக்கப்பட்டு வருவது என்ன என்பது குறித்து கேள்வியாகவே இருந்ததாகவும், கடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் இவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டுவரும் இந்த இரகசிய மாளிகை தொடர்பான தகவல்களைச் சேகரிக்க சென்ற போதே லங்கா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனியார் காணியொன்றிற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று ஊடகவியலாளர்களையும் கைதுசெய்த காவல்துறையினர் மொரவக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுத்துக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொண்டு கொழும்பு அழைத்துவந்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment