முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூரம்!
முள்ளிவாய்க்கால் பகுதியில் கடைசிவரை இருந்து, வதைமுகாமிற்குள் அடைபட்டு, அங்கிருந்த தப்பி நாட்டைவிட்டு வெளியேறியிருக்கும் ஒரு மருத்துவப் பணியாளர் வழங்கியுள்ள அதிர்ச்சிகர தகவல்கள்!
“முன்னேறி வந்த சிறீலங்கா இராணுவம், பதுங்கு குழிக்குள் இருந்த மக்களை கைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும், எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவ டாங்கிகளால் பதுங்கு குழிகளை அப்படியே மூடியும் கொன்றொழித்தபடியே முன்னேறியது. காயப்பட்டிருந்த அனைவரையும் அப்படியே கொன்று குவித்தது” என முள்ளிவாய்க்கால் பகுதியில் கடைசிவரை இருந்து, வதைமுகாமிற்குள் அடைபட்டு, அங்கிருந்த தப்பி நாட்டைவிட்டு வெளியேறியிருக்கும் ஒரு மருத்துவப் பணியாளர் கூறினார்.
இவர் நோர்வே தமிழர் சுகாதார மையத்தினூடாக (NTHO) ஒரு நீண்ட கடிதத்தை தமிழ்நெற் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ளார். பாதுகாப்புக் காரணங்கள் கருதி அவரது பெயர், விபரம் தவிர்க்கப்பட்டுள்ளது. அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டவற்றைக் கீழே தருகின்றோம்.
இராணுவப் பகுதிநோக்கிச் சென்ற மக்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளிலும், கட்டாய ஆட்சேர்ப்பிலும், குறிப்பாக மாவீரர், போராளிக் குடும்பங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளிலும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் நீண்ட காலமாகவே ஊடுருவிக் கலந்திருந்த கையாட்களாலேயே நடாத்தப்பட்டது. புலிகளின் மூத்த தளபதிகளும், போராளிகளும் இந்தத் துரோகத்தை அறிந்தபோது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இவர் மேலும் கூறுகையில், கொழும்பு, முக்கியமாக வைத்தியசாலைகளையும், இடம்பெயர்ந்த தற்காலிக முகாம்களையும் குறிவைத்தே தன் தாக்குதலை நடாத்தியிருந்தது. மக்கள் கிளிநொச்சியைவிட்டு வெளியேறிய பின்னர், உடையார்கட்டு பாடசாலைக் கட்டிடங்களில் தற்காலிக வைத்தியசாலைகள் இயங்கத்தொடங்கின.
இந்தக் கட்டிடங்களில் மீது மட்டும் குறைந்தது 2000 எறிகணைகள் சிறீலங்கா இராணுவத்தால் வீசப்பட்டன. கிளிநொச்சியில் இருந்து தர்மபுரம், வட்டக்கச்சி, விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, பின்னர் முள்ளிவாய்க்காலை நெருங்கும்வரை சிறீலங்கா இராணுவத்தால் குறைந்தது 50 உயிர்கள் ஒவ்வொரு நாளும் பறிக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலைச் சுற்றிவளைக்கும் முன்னர் 8000 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட மக்களோடு வைத்திய தாதிகளும், வைத்திய ஊழியர்களும் கொல்லப்பட வைத்திய சேவைகள் முடக்கம் காணத்தொடங்கின.
மூன்று இலட்சம் மக்கள் இருந்த பிரதேசத்திற்கு வெறும் முப்பதினாயிரம் பேருக்கான உணவே அனுப்பிவைக்கப்பட்டது. மயக்க மருந்துகள், நோய் நிவாரணிகள் போன்றவை அங்கு அனுப்பப்படவில்லை. மயக்க மருந்து இல்லாத சத்திர சிகிச்சைகள் நோயாளிகளிற்கும், மருத்துவர்களிற்கும் மரணவேதனையை அளித்தது. பால் மாவிற்காக வரிசைகளில் நின்ற தாய்மாரும், பிள்ளைகளும் முக்கிய இலக்குகளாக சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைகளால் குறிவைக்கப்பட்டன.
இந்த எறிகணைகளால் பிள்ளைகளை இழந்த தாய்மாரினதும், தாய்மாரை இழந்த பிள்ளைகளினதும் கதறல்களையும், கொடுமைகளையும் நேரில் காணாதவர்களால் உணர்வது கடினம். எங்கெல்லாம் கூழுக்காக மனித வரிசைகள் நின்றனவோ, அவையெல்லாம் ஆளில்லா விமானங்கள் மூலம் காட்டிக்கொடுக்கப்பட்டு, குண்டுவீச்சுகளிற்கு இலக்காகின. இழப்புகள் மத்தியிலும் இந்த மனித வரிசைகள் கூழுக்காக மீண்டும் அணிதிரண்டன. தங்கள் வயல் நிலங்களில் சிறீலங்கா இராணுவத்தால் அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டபோது, மக்களுக்குக் கிடைத்துவந்த கூழும் கேள்விக்குறியாகியது.
இந்தக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமை போராளிகளிற்கு ஒரு உத்தரவிட்டது. போராளிகளின் தேவைக்கென வைத்திருக்கப்பட்ட போர்க்கால உணவுச் சேமிப்புக்களை மக்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி உத்தரவிடப்பட்டது. போராளிகள் தாமும் கூழ் உணவோடு களமாடி தம் உணவுகளை ஒவ்வொரு போராளியும் மக்களிற்கு விட்டுக்கொடுத்தனர். நீர்த் தேவைக்காக ஆயிரக்கணக்கான துளைகள் பூமியில் இடப்பட்டும், நூற்றுக்கணக்கான மலசலகூடங்கள் கட்டப்பட்டும் மக்களின் தேவைகளை புலிகள் ஓரளவு பூர்த்தி செய்திருந்தனர்.
மணலோடு கலந்துவந்த நீரை எறிகணை வெற்றுக் குழாய்களுக்குள் துணிமூலம் வடித்தெடுத்து குடிநீராக்கி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கணிசமான போராளிகள் ஈடுபட்டனர். அங்கு எந்தவிதமான தொற்று நோய்களும் ஏற்படவில்லை. கர்ப்பிணித் தாய்மார்களும், குழந்தைகளும் எறிகணைகளால் காயப்பட்ட நிலையில் தற்காலிக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். வைத்தியசாலைகள் 24 மணி நேரமும் இயங்கியபடி இருந்தன. வைத்தியசாலைகளில் வலியால் முனகல்களும், எறிகணை ஓசைகளும் சுற்றிவரக் கேட்டுக்கொண்டே இருந்தன.
கடும் எறிகணைத் தாக்குதல்களால் தகனம் செய்யப்படமுடியாத உடலங்கள் பசித்த நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டன. ஒவ்வொரு முறையும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் காயப்பட்டோரை ஏற்றிச்செல்ல வரும்போதும் அந்த இடம் கடும் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியது. கப்பலில் ஏற்றிச்சென்ற நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கப்பலில் ஏற்றப்படாமலேயே இறக்க நேரிட்டது. இந்தக்கொடுமையான நிலையிலும் மக்கள் இரத்த தானம் செய்தனர். இப்படிச் செய்த பலர் பின்னர் எறிகணைகளால் காயப்பட்டு, இறக்கவும் நேரிட்டது.
ஏப்ரல் மாதம் 20ம் திகதி சிறீலங்கா இராணுவம் மாத்தளன், பொக்கணை பகுதிக்குள் நுழைந்தபொழுது ஒருநாளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலானோர் கொல்லப்பட்டனர். மே 15ல் கடைசியாக ஒரே இடத்திற்குள் முடக்கி விடப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்களை இராணுவம் சுற்றிவளைத்து ஊழித்தாண்டவம் ஆடியது. நான் இராணுவப் பகுதிக்குள் இறுதியாக வரும்பொழுது தெருவெங்கும் உடலங்களும், காயப்பட்டோரும் சிதறிக்கிடந்தனர். அவர்களில் பலர் குற்றுயிராக நடக்க முடியாத நிலையில் கிடந்தனர். நடக்க முடிந்த சிலருக்கு நான் உதவினேன்.
காயப்பட்டுத் தரையில் கிடந்தவர்கள் நான் செல்லும்பொழுது என் கால்களை இறுகப் பிடித்தனர். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவர்கள் அப்படியே விடப்பட்டனர். இறுதி நாள் யுத்தத்தில் மட்டும் 18,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 5000 இற்கும் மேற்பட்டோர் அங்கவீனர்களாயினர். 7000 இற்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். பல்லாயிரக் கணக்கானோர் சிறு காயங்களிற்குள்ளாகினர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் மனநிலை பாதிக்கப்பட்டனர். 100 இற்கும் அதிகமான வைத்தியர்கள், மருத்துவ ஊழியர்கள், தாதிகள், தொண்டர்கள் அழித்தொழிக்கப்பட்டனர்.
சிறீலங்கா இராணுவத்தால் இப்பகுதிக்குள் வைத்து உயிருடன் பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளமானது. இப்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியானது ‘ஒரு முக்கியமான ஒரு சோடிக் கண்களின்’ கண்காணிப்பின் கீழ் தமிழர்களின் கொலைக்களமாக மாறியுள்ளது. முல்லைத்தீவில் நூறாயிரக் கணக்கான மக்களை வரிசையில் நிற்க விட்டுவிட்டு திடீரென நிலத்தில் வீழ்ந்து படுக்கும்படி கூறினர். மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து துன்பப்படுவதை கொடூரமாக பார்த்து சிறீலங்கா இராணுவம் சிரித்து இரசித்தது.
அந்த மக்களை அடிப்பதற்கும், துன்புறுத்துவதற்கும் நீண்ட உருளைக் கட்டைகள் பாவிக்கப்பட்டன. இளையோரும், முதியோரும் கொடும் வெயிலின் கீழ் தாகத்தோடு, வெட்டவெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர். முல்லைத்தீவிலிருந்து வவுனியா வரை பேரழிவுக் காட்சியாகவே இருந்தது. இப்படிக் கொண்டு செல்லப்பட்ட மக்கள் செட்டிகுளத்தில் 20-30 பேர்வரை ஒவ்வொரு கூடாரத்திற்குள்ளும் அடைக்கப்பட்டனர். எப்போதாவது ஒருமுறை வாகனங்களிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி எறிவார்கள். இந்த முகாம்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது முப்பது பேராவது இறக்கின்றனர்.
இந்தப் பகுதி தொற்று நோய்களின் கூடாரமாக மாறியுள்ளது. இங்கு அம்மை நோய்களும், மூளைக் காய்ச்சலும் பெருமளவில் பரவியுள்ளது. பல முதியவர்கள் நோயால் இறக்கின்றனர். துன்பம் தாளாது பலர் தற்கொலை செய்கின்றனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பல இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோதும் அங்கு புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளால் பல உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன.
தொற்று நோய்கள் எதுவும் ஏற்படவில்லை. எவரும் நோயால் உயிரிழக்கவுமில்லை. பல்லாயிரக்கணக்கான வறிய சிங்கள இளைஞர்களின் உயிர்களைப் பலிகொடுத்து, மற்றவர்கள் வலியில் இன்பம் காணும் ராஜபக்சக்கள் தங்கள் அரசியல் இலாபங்களிற்காக எல்லாவிதமான வழிகளிலும் அப்பாவி மக்களைத் துன்புறுத்தி அதில் இன்பம் கண்டு அதையே வெளியுலகத்திற்கு தனது மனிதாபிமான நடவடிக்கையென்று பிரச்சாரப்படுத்தினர்.
இந்தச் சர்வதேச உலகம் தமிழர்கள் பட்ட வலியினை மறந்துவிடலாம். ஆனால் தமிழர்களாகிய நாங்கள் இருபத்தொராம் நூற்றாண்டின் நாகரீகம் காட்டிய ‘மனிதாபிமானத்தையும்’ அவர்கள் கண்மூடித்தனங்களையும் என்றுமே மறக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment