TRO தலைவர் ரெஜிக்கு UK இல் இருந்து வெளியேறும்படி நிர்ப்பந்தம் : த ஜெயபாலன்
புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ரெஜியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு கேட்டுள்ளதாக உள்ளதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது. சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் ரெஜி இங்கு அரசியல் தஞ்சம் கோரி இருந்தார். ஆனால் அவருடைய அரசியல் தஞ்சம் விண்ணப்பத்திற்குப் பிறம்பாக உத்தியோகப்பற்றற்ற முறையில் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” கவுன்சிலர் போல்சத்தியநேசன் இந்நடவடிக்கையைக் கண்டித்துள்ளார்.
பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்வேயில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு ரெஜி முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தேசம்நெற்க்கு செய்திகள் கிடைத்துள்ளது. நோர்வெயின் ஆளும்கட்சியில் உள்ள தமிழ் பிரமுகர் ஒருவருக்கு ஊடாக நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹைமிடம் இந்த தஞ்சக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பாக இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவராக ரெஜி செயற்பட்டு வந்தார்.
இச்செய்தி தொடர்பாக உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்ட போதும் தனிப்பட்ட ஒருவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுத்துவிட்டது.
இதற்கிடையே ரீஆர்ஓ வின் ஸ்தாபகராகக் கருதப்படும் அமெரிக்க பில்லியனெயர் ராஜ் ராஜரட்ணம் முன்னாள் புலிகளுக்கு இலங்கை அரசு மேற்கொள்ள உள்ள மறுவாழ்வுத் திட்டத்திற்கு ஒரு மில்லியன் டொலரை வழங்க முன்வந்தள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். ”ராஜ் ராஜரட்ணம் ரீஆர்ஓ க்கு அளித்த நிதியை புலிகளுக்க வழங்கிய நிதியாகக் கொள்ள முடியாது” என மிலிந்த மொறக்கொட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்து உள்ளார். சுனாமியின் போது இலங்கையில் தங்கியிருந்து உயிர் தப்பிய ராஜ் ராஜரட்ணம் சுனாமி மீள்கட்டுமானப் பணிகளுக்கு 5 மில்லியன் யுஎஸ் டொலர்களை வழங்கி இருந்தார். உலகிலேயே மிகச் செல்வந்தரான ஒரே இலங்கையர் ராஜ் ராஜரடணம் என்பது குறிப்பிடத்தக்கது. 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவரது மேற்பார்வையில் உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட போதும் பிரபலமான முக்கிய தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க பிரித்தானியா மறுத்திருந்தது. குறிப்பாக கேணல் கிட்டுவினுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை நிராகரித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு தாங்கள் கைது செய்து திருப்பி அனுப்புவதற்கு முன்னர் கேணல் கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தது. அவ்வாறு கிட்டு நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை சென்றபோதே சர்வதேச எல்லையில் வைத்து இந்தியக் கடற்படையால் தடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை இந்தியக் கடற்படை கைது செய்ய முற்படுகையில் தங்களது கப்பலைத் தகர்த்து தாமும் தற்கொலை செய்து கொண்டனர்.
பிரித்தானிய உள்துறை அமைச்சு கேணல் கிட்டு தொடர்பாக எடுத்த அதே முடிவையே தற்போது ரெஜி தொடர்பாகவும் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
ரெஜி தலைமையில் செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையின் பின் கணிசமான நிதி சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு 2005ல் வெளியிட்ட அறிக்கையில் சிறுவர் நலன்களுக்காக ரிஆர்ஓ க்கு வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டாலர்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தது. பிரித்தானியாவில் ரீஆர்ஓ வின் நிதிக் கையாள்கை தொடர்பான பிரச்சினையால் அதன் செயற்பாடுகள் முடக்கப்பட்டு பிரித்தானிய பொது அமைப்புகளின் ஆணைக்குழு ரீஆர்ஓ வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனாலேயே ஏனைய நாடுகளில் ரிஆர்ஓ என்று இயங்கிய போதும் லண்டனில் வெண்புறா வை ரிஆர்ஓ க்கு பதிலாக முன்னிலைப்படுத்தினர்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தாயகத்தில் உள்ள மக்களின் நல வாழ்வுக்காக சேகரிக்கபட்ட நிதி அந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ரீஆர்ஓ மீது நீண்டகாலமாக உள்ளது. அண்மைய வன்னி யுத்தத்தின் போது 2008 மாவீரர் தினத்திற்கு முன்னர் கிளிநொச்சி பகுதியில் இருந்து தப்பி வந்த ஒருவர் தேசம்நெற்க்கு வழங்கிய செவ்வியில் ரீஆர்ஓ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். வன்னி யுத்தத்தில் தப்பி வந்தவர்கள் அல்ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் தாங்கள் பணம் கொடுத்தே உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர். அதன் படி சர்வதேச உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களும் கூட மக்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை. விற்கப்பட்டு இருந்தது.
மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னர் தலைவரின் மரணச் செய்தியை வெளிவிடாமல் இருந்ததற்கு ரெஜியும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன் ஆகியோர் உட்பட்ட கஸ்ரோ குழுமமே பிரபாவின் மறைவுக்குப் பின் புலிகளின் சர்வதேச அமைப்பை கட்டுப்படுத்தி வருகின்றனர். ( VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் ) இவர்களே கேபி யின் தலைமைக்கு சலாலாகவும் இருந்தனர். ரீஆர்ஒ உட்பட புலிகளின் சர்வதேச நிதிக்கட்டுப்பாடும் இக்குழுமத்திடமே உள்ளது. இவர்கள் 300 மில்லியன் டாலர்கள் வருமானமுள்ள 1 முதல் 5 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்தக்களை நிர்வகிக்கின்றனர் என நம்பப்படுகிறது. ( இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன் )
தற்போது பிரித்தானியாவில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள ரெஜிக்கு நோர்வே தஞ்சம் வழங்குமா? என்ற சந்தேகமும் வலுவடைந்து உள்ளது. ஏனெனில் ஏற்கனவே கே பி க்கு அரசியல் தஞ்சம் தொடர்பாக நோர்வேயிடம் உதவி கேட்கப்பட்டதாகவும் அதற்கு நோர்வே மற்றும் அமெரிக்கா சாதகமாகப் பதிலளிக்கவில்லை என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
ரெஜியினுடைய குடும்பத்தினர் பிரித்தானியாவில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் கேணல் கருணாவினுடைய குடும்பத்தினருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது போன்று அவர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டு இருக்கும். ரெஜியினுடைய குடும்பத்தவர்கள் பெரும்பாலும் தென்னாபிரிக்காவில் வாழலாம் என சில செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இலங்கை இந்திய அரசுகளுக்கு மாறாக ரெஜிக்கு அரசியல் தஞ்சம் வழங்க தென்னாபிரிக்கா முன்வருமா என்பதும் சந்தேகமே. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தென்னாபிரிக்கா இலங்கைக்கு சாதகமாக வாக்களித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரெஜி எவ்வாறானவராக இருந்தாலும் ரெஜியை நாடுகடத்துவதற்கு எதிராக போராட வேண்டிய கடமைப்பாடு உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு உண்டு. குறிப்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் இம்முடிவுக்கு எதிராக உரிமை அமைப்புகள் குரல் எழுப்பும் என்றே நம்பப்படுகிறது. ஆயினும் இது அரசியல் மயப்பட்டுப் போகுமாக இருந்தால் அது பிரித்தானியாவுக்கு அமையும் என்பதால் ரெஜி யை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானியா கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம் இதனை அரசியல் மயப்படுத்தி அதில் தோல்வி கண்டால் நிலைமை பாரது}ரமாகலாம் மேலும் மேற்கு நாடுகளின் உறவுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ரெஜி நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
”பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடர முடியாதவர்களின் எண்ணிக்கை குறைந்தது 5000 பேராவது இருப்பார்கள். இவர்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் சற்று கூடுதலாக இருக்கும். ” எனத் தெரிவிக்கிறார் சட்ட வல்லுனர் அருண் கனநாதன். இவர் இவ்வாண்டு மார்ச்சில் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக தேசம்நெற்றுக்கு கருத்துத் தெரிவித்த கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”அரசியல் தஞ்சம் கோரிய ஒருவரை திருப்பி அவரது நாட்டுக்கு அனுப்புவதோ அல்லது அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி கோருவதோ மனிதாபிமானமற்ற செயன்முறை” எனத் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீண்ட காலமாகக் குரல்கொடுத்து வரும் கவுன்சிலர் போல் சத்தியநேசன் ”ரீஆர்ஓ தலைவர் ரெஜி க்கு தஞ்சம் நிராகரிக்கப்பட்டது பற்றியோ அல்லது அவரை வெளியேறும்படி கேட்டது பற்றியோ எனக்கு உறுதியாகத் தெரியவரவில்லை” என்றார். ஆனால் ”ரெஜி போன்ற முக்கிய புள்ளிகள் இலங்கைக்கு அனுப்பப்ட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஒன்று அங்கு உள்ளது. மேலும் ரெஜியை திருப்பி அனுப்பும் முடிவு ஏனைய அரசில் தஞ்ச விண்ணப்பதாரிகளையும் திருப்பி அனுப்புவதற்கு வழிவகுக்கும்” என்றும் கவுன்சிலர் போல் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார்.
”பிரித்தானிய அரசு அரசியல் தஞ்சத்தை சட்டவியலின் நுணுக்கத்தில் பார்க்கின்றதேயல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினையை கையாள்வதில்லை” எனவும் ஆட்சியில் உள்ள தனது கட்சியின் அரசியல் தஞ்சம் தொடர்பான கொள்கையை விமர்சித்தார்.
Thesamnet
0 விமர்சனங்கள்:
Post a Comment