ஈரான், வடகொரியாவுக்கு அணு ஆயுத ரகசியத்தை பரப்பியது பாகிஸ்தான்
விஞ்ஞானியின் கடிதம் மூலம் அம்பலம்
அணு ஆயுத ரகசியங்களை ஈரான், வடகொரியா, சீனா ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் பகிர்ந்து கொண்ட ரகசியம் அந்நாட்டு அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் எழுதிய கடிதம் மூலம் அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தான் அணு ஆயுதங்களின் தந்தை என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டவர், விஞ்ஞானி ஏ.க்யூ கான். பாகிஸ்தான் அணு ஆயுத திட்டங்களை வெற்றிகரமாக முடித்தவர். ஆனால், இவர் அணு ஆயுத ரகசியங்களை ஈரான், வடகொரியா போன்ற நாடுகளுக்கு விற்றதாக கடந்த 2003ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். கைதுக்குப் பின் விஞ்ஞானி ஏ.க்யூ. கான் தனது மனைவி ஹென்னிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ‘அணு ஆயுத ரகசியங்களை ஈரான், வடகொரியா, சீனா போன்ற நாடுகளுக்கு கொடுக்க சொன்னதே பாகிஸ்தான் அரசுதான். அது உலகநாடுகளுக்கு தெரிந்ததும், என் மீது குற்றம் சுமத்தி பழியை மறைப்பதற்கான வேலைகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபடலாம். அப்படி செய்தால், எனது பத்திரிக்கையாளர் நண்பர் ஹென்டர்சன்னை தொடர்பு கொண்டு, எல்லா உண்மைகளையும் தெரியப்படுத்துÕ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தின் நகல் ஹென்டர்சனுக்கு 2007ம் ஆண்டு கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹென்டர்சன் அதை பற்றி பத்திரிக்கையில் எழுதவில்லை.
ஆனால் தற்போது, ஏ.க்யூ கான் எழுதிய கடிதத்தின் தகவல்கள் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
அணு செறிவூட்டல் தொழில்நுட்பத்தை சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்து உதவியது. சீனாவின் ஹன்சாங் பகுதியில் அணு செறிவூட்டல் ஆலையை அமைத்து கொடுத்தோம். அதற்கு பதிலாக, அணு ஆயுதங்களின் ப்ளூ பிரின்ட் மற்றும் யுரேனிய பொருட்களை சீனா வழங்கியது. ஈரானுக்கு அணு ஆயுத ப்ளூபிரின்ட்கள் மற்றும் அணு ஆயுத தயாரிப்பு பொருட்களை வழங்கும்படி, பெனாசிர் புட்டோவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜெனரல் இம்தியாஸ் என்னிடம் கேட்டுக் கொண்டார். இதே போல் வடகொரியாவுக்கும் அணு ஆயுத தொழில்நுட்பம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதற்காக என் மூலம் வடகொரியாவிலிருந்து 3 மில்லியன் டாலர் பணத்தை அந்த ஜெனரல் பெற்றார்.
இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள், அணு ஆயுத பரவலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. ஏ.க்யூ கான் (74) பாகிஸ்தானில் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment