புல்மோட்டை முகாமை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை:கண்ணீர் வடிக்கும் பெண்
இலங்கையில் புல்மோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு கடந்த மூன்று மாதங்களாக அங்குள்ள உறவினர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
கடும் போராட்டங்களுக்கு பிறகு இப்போது அனுமதி கிடைத்துள்ளது.
இந்நிலையில் தனது மகனைப் பார்வையிடுவதற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் தனது அனுபவத்தை பி.பி.சி.க்கு விவரித்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து புல்மோட்டைக்குச் சென்று தனது மகனைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்புவதற்கு தனக்கு மூன்று நாட்கள் தேவையாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த முகாமுக்குச் செல்வது மிகவும் கடினமானதாக இருந்தது. திருகோணமலையில் இருந்து புல்மோட்டைக்குச் செல்வதற்கு ஒரேயொரு பேருந்துதான் உள்ளது. அதில் பயணிப்பதற்கே ஒரு நாள் சென்றது. அதன் பின்னர் முச்சக்கர வாகனம் ஒன்றில் மூன்று கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டி இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்றால், மகனுடன் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே எனக்குத் தரப்பட்டன எனவும் அவர் கவலையுடன் கூறியுள்ளார்.
புல்மோட்டை முகாமிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் அனைத்தும் வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு மட்டுமே சென்று பார்வையிடுகின்றன எனவும் தெரிவித்த அவர், புல்மோட்டை முகாம்களுக்கு யாராவது சென்றுள்ளது பற்றி தான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் புல்மோட்டைக்கு வந்தவர்கள் கடந்த வாரம் முகாம்களில் உள்ள தமது உறவுகளைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்னர் பல தடவைகள் தனது மகனைப் பார்வையிடுதற்காக தான் சென்றபோது அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் சிலரும் புல்மோட்டையில் சிலருமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முகாம்களில் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமானதாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பகுதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு கவனத்திற்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நக்கீரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment