பெரிதாக எதுவும் நடந்து விடாது மறந்து விடுவோம் அவ்வளவுதான்!
ஒன்றும் பெரிதாக நடந்துவிடப் போவதில்லை. இப்படி எத்தனை ஆதாரங்களைக் கிண்டி எடுத்தாலும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் மறுக்கவும், அவர்க்கு ஆதரவான தரப்புக்கள் நியாயப் படுத்தவும்தான் செய்வார்கள். கடந்தகாலங்களில் இப்படி எத்தனையோ நாம் பார்த்து விட்டோம்.
அது புலிகள் தரப்பில் முன் வைக்கப்பட்ட அராஜகமாய் இருந்தாலென்ன, அரசாங்கம் மீது சொல்லப்பட்ட அத்து மீறல்களாயிருந்தாலென்ன அவரவர் தத்தம் பங்கிற்கு தம்மை நோக்கி வரும் குற்றச் சாட்டுக்களை மறுத்தடித்தும், மற்றைய தரப்பின்மேல் தூக்கிப் போட்டுவிட்டு தங்கள் தங்கள் கைகளைக் கழுவிக்கொண்ட நாசமாய்ப் போன வரலாறுதான் நமது தேசத்தின் வரலாறு.
குமுதினிப் படகு படுகொலை, குருநகர் மீனவர் படுகொலை தொடக்கம், கனகம் புளியடியிலிருந்து அல்லைப்பிட்டி வங்காலை, கெப்பிற்ரிக்கொல்லாவ அனுராதபுரம்வரை பார்த்து விட்டோம். மக்கள்மீது இளைக்கப்பட்ட துரோகங்களை யார்தான் இதுவரை பொறுப்பேற்றார்கள்.
அண்மையில் வெளிவந்துள்ள வீடியோ ஆவணத்தை அவரவர் தரப்பிலிருந்தும், சார்பிலிருந்தும் பார்க்கப்பட்டும் பேசப் பட்டுக்கொண்டும் இருக்கின்றது. இன்னும் கொஞ்ச நாளில் இந்த அலை ஓய்ந்து விடும். நாமும் மறந்து விடுவோம். இப்படி முன்பும் நடக்கவில்லையா என்ன? உதாரணத்திற்கு:, பெண் போராளிகளின் சடலங்களை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்திய வீடியோ ஆவணத்துக்கு என்ன நடந்தது? கொதித்தோம், சிலாகித்தோம், அடங்கினோம், மறைத்தோம் என்று போகவில்லையா? இதுவும் அப்படித்தான்.
இந்தா பாருங்கள், மனித உரிமை கண்காணிப்பகம் சொல்கிறது ”இறுதிக்கட்ட மோதல்களின் போது, இரண்டு தரப்பினரும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் எனவே, சர்வதேச ரீதியான விசாரணைகளின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறது.
”இராணுவச் சீருடை அணிந்த சிலர் கைதிகளைச் சுட்டுக்கொலை செய்வதனைப் போன்ற வீடியோ காட்சிகளை செனல்4 வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வீடியோக் காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியாது என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் நைசாக நழுவுகின்றது. இனியென்ன அவ்வளவுதான். ஆட்டம் குளோஸ்.
0 விமர்சனங்கள்:
Post a Comment