சுனாமி நிவாரணத்தில் ரூ.7.5 கோடி மோசடி: பெண் டாக்டர் கைது- பெற்றோருக்கு வலை
தென்னிந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் பொதுச் செயலாளர் மோசஸ் ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில்,
தென்னிந்திய திருச்சபையின் கீழ் 24 துணை திருச்சபைகள் உள்ளன. இதில் 9 திருச்சபை பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதியில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்காவில் உள்ள இ.ஆர்.டி தொண்டு நிறுவனம் ரூ.17.63 கோடி ஒதுக்கியது.
இந்தப் பணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல் மற்றும் மீன்பிடி படகு, மீன்பிடி வலை, வீட்டு உபயோக பாத்திரங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2006லிருந்து 2008ம் ஆண்டு வரை இந்த பணிகள் செய்யப்பட்டன. அப்போது தென் இந்திய திருச்சபையின் செயலாளராக இருந்த பாலின் சத்தியமூர்த்தி இந்தப் பணிகளை முன்னின்று செய்தார்.
அவர் தனது கணவர் சத்தியமூர்த்தி, மகள் பெனடிக்டா, உறவினர் ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோரை இந்த பணிகளை மேற்கொள்ள பாலின் நியமித்தார்.
ஆனால், இவர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுத்தும், சொகுசு கார்கள் வாங்கியும், ஆடம்பர பங்களா கட்டியும் பல்வேறு முறைகேடுகள் நடந்து விட்டன.
மேலும் செலவு செய்த பணிகளுக்கு சரியாக கணக்கும் காட்டவில்லை. சுமார் ரூ. 7.5 அளவுக்கு இதில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண் டாக்டர் பாலின் சத்தியமூர்த்தி, அவரது கணவரான ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சத்தியமூர்த்தி, மகள் டாக்டர் பெனடிக்டா, உறவினர்களான ராபர்ட் சுனில் மற்றும் கஸ்தூரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் டாக்டர் பெனடிக்டா, ராபர்ட் சுனில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுனாமி நிவாரண நிதியில் தங்களுக்கு இரு போர்டு எண்டவர் கார்களை வாங்கியுள்ளனர் இந்த இருவரும். இந்த இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட கார்களின் மதிப்பு ரூ.36 லட்சம் ஆகும்.
திருச்சியில் வசிக்கும் பாலின் சத்தியமூர்த்தி மற்றும் சத்தியமூர்த்தி, கஸ்தூரி ஆகியோரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலின் தென்னிந்திய திருச்சபையின் செயலாளராக உள்ளார். இதற்கு முன் கல்லூரி பேராசிரியையாக பணியாற்றியுள்ளார். கஸ்தூரி தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பொருளாளர் ஆவார்.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment