கடும் குரலில் பாலு கண்டிப்பு - அழுத வவுனியா பெண் கலெக்டர்
வவுனியா: வவுனியா சென்ற திமுக - காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு கடும் குரலில் கண்டித்துப் பேசியதால் வவுனியா பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ் அழுது விட்டார். இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி, டி.ஆர்.பாலுவை தடுத்து அமைதிப்படுத்தினார். பின்னர் பாலு தவிர அனைவரும் பெண் கலெக்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
திமுக - காங்கிரஸ் எம்.பிக்கள் குழு இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதிகளின் நிலை குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று காலை யாழ்ப்பாணம் சென்ற அக்குழுவினர் மாலையில் வவுனியா சென்றனர்.
அப்போது வவுனியா மாவட்ட பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ், குழுவினருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அப்போது அவரது செயல்பாட்டால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, தனக்கே உரித்தான கடுமையான குரலில், நீங்கள் யார் எங்களது விஷயங்களில் தலையிட, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கண்டிப்புடன் கேட்டாராம்.
இதுகுறித்து பி.எஸ்.எம்.சார்லஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், குழுவினரின் நடவடிக்கையில் தலையிட நீங்கள் யார், உங்களது தகுதி என்ன என்று கடுமையான குரலில் கேட்டார் டி.ஆர்.பாலு.
அவரது கோபமான பேச்சால் நான் அழுது விட்டேன். இத்தனைக்கும் நான், தமிழக குழுவினரின் விருப்பத்திற்கேற்பதான் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். ஆனால் அவர் கண்டிப்பான குரலில் பேசியதால் நான் மனம் உடைந்து அழுது விட்டேன்.
இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி தலையிட்டு பாலுவை அமைதிப்படுத்தினார். அவரும், மற்றவர்களும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். ஆனால் நான் பேசியதை மறந்து விடுங்கள் என்று மட்டுமே பாலு என்னிடம் கூறினார் என்றார் சார்லஸ்.
இந்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீருடன் வரவேற்ற முகாம் தமிழர்கள்...
முன்னதாக டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக -காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.பிக்கள் வன்னியில் உள்ள முகாம்களுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களைச் சந்தித்தனர்.
அவர்களிடம் அகதிகள் கண்ணீர் மல்க தங்களது துயர நிலை குறித்து விவரித்தனர். கழிவு நீர் வசதி இல்லை, சுகாதாரமான குடிநீர் கிடையாது. ஒரு நாளைக்கு ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 லிட்டர் குடிநீர்தான் தருகிறார்கள்.
ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீரும், குளிக்கும் நீரும் தரப்படுகிறது.முகாம்களுக்கு குடிநீர் தர உதவி வரும் ஆறு வறண்டு போய்க் கிடக்கிறது. அரிசி மட்டும் அரசு தருகிறது. ஆனால், எண்ணை, காய்கறிகள் உள்ளிட்ட பிற பொருட்களை அதுத ருவதில்லை.
மழைக்காலம் நெருங்கி வருகிறது. ஆனால் இங்கு துப்புறவு சுத்தமாக இல்லை. மழைக்காலத்தில் இந்தப் பகுதி பெரும் நரகமாகி விடும் அபாயம் உள்ளது. நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகமாக உள்ளது என்றனர்.
விடுதலைப் புலிகளுக்கான எதிரான போரின் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து அகதிகள் எதுவும் கூறவில்லையாம். ஒரு வேளை பயம் காரணமாக அவர்கள் கூறாமல் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. அதேசமயம், முகாமில் உள்ள அனைத்துக் குறைகளையும் கொட்டித் தீர்த்தனராம்.
பெரும்பாலான அகதிகள் கண்ணீருடனேயே பேசினராம். எங்களை விரைவாக இங்கிருந்து மீட்க முயற்சியுங்கள் என்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்களிடம் கேட்டுக் கொண்டனராம்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்களின் வருகை தங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும், அதேசமயம், தங்களுக்கு உதவினால் மேலும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் அவர்கள் கூறினராம்.
மாணிக் பார்ம் முகாம் வளாகத்தில் உள்ள 1 முதல் ஐந்தாவது மண்டலம் வரையிலான பகுதிகளில் திமுக - காங்கிரஸ் கூட்டணி எம்.பி்க்கள் சென்று பார்த்தனர். ஐந்து மணி நேரம் நீடித்த இந்த ஆய்வை முழுமையாக வீடியோவில் படம் பிடித்தனர். பலர் அகதிகளின் பேச்சை குறிப்பு எடுத்துக் கொண்டனர்.
பின்னர் குழுவினர் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து சென்று முகாம் தமிழர்களைச் சந்தித்துப் பேசினர்.
தமிழக எம்.பிக்களைப் பார்த்த தமிழர்கள் , ராணுவத்தினர் குறித்த பயமே இல்லாமல் தைரியமாக அருகில் வந்து மனம் விட்டுப் பேசியதைக் காண முடிந்ததாக கூறப்படுகிறது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment