இலங்கைக்கு எம்.பி.க்கள்குழுவை அனுப்புவது கேலிக்கூத்து:ஜெ.கடும் தாக்கு
''இலங்கையில் மனித உரிமை நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.சபை ஆகியவற்றிற்கு கூட உண்மையான நிலையை பார்வையிட அனுமதியில்லாத நிலையில் இங்கிருந்து எம்.பி.க்கள் குழுவை அனுப்புவது கேலிக்கூத்து"என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..'' இலங்கைத் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய எம்.பி.க்கள் குழு இலங்கை செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்குழுவில் எதிர்க்கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் இடம்பெறவில்லை. சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இந்தக் குழுவில் இல்லை.
இந்தக் குழுவின் பயணம் குறித்து இந்தியப் பிரதமர் எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரோ, உள்துறை அமைச்சரோ, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரோகூட இது குறித்து எதுவும் கூறவில்லை.
இந்த நாடாளுமன்றக் குழு இலங்கை சென்று திரும்பியதும், முதல்வரிம் அறிக்கையை அளிக்குமா? இந்திய நாடாளுமன்றத்திடம் அறிக்கையை அளிக்குமா? இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யார் தேர்வு செய்தது? இந்தக் குழுவின் சுற்றுப்பயணத்தை யார் அனுமதித்தது? உண்மையான முகாம்களுக்கு சென்று பார்வையிட இந்தக் குழு அனுமதிக்கப்படுமா?
இலங்கையிலிருந்து வரும் அனைத்துச் செய்திகளும் தணிக்கை செய்யப்படுகின்றன. மனித உரிமை நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கூட அனுமதியில்லை. இந்த நிலையில், இத்தகைய குழுவை அனுப்புவது ஒரு கேலிக்கூத்து நாடகமே."என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தேனாலி
0 விமர்சனங்கள்:
Post a Comment