புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழகத்தின் எம். பி. க்களையே அரசாங்கம் அழைத்துள்ளது
விடுதலைப் புலிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒத்துழைப்பு வழங்கிய இந்தியாவின் தமிழக எம். பி. க்களை இலங்கை அரசாங்கம் வரவழைத்தமையை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது என்று முன்னணியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நலன்புரி நிலையங்களுக்கு செல்ல முடியுமானால் ஏன் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு முகாம்களுக்கு செல்ல முடியாது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது
தமிழகத்தின் எம்.பி. க்கள் குழுவினர் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் நாங்கள் பல விடயங்கள் குறித்து ஆராயவேண்டியுள்ளது.
வவுனியாவில் அமைந்துள்ள நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள அகதி மக்களை பார்வையிடுவதற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் எங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவின் தமிழக எம். பி. க்கள் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது.
மேலும் இந்திய எம்.பி. க்கள் குழுவில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தொடர்பில் ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். அதாவது 1990 ஆம் ஆண்டு வட பகுதியில் இருந்து முஸ்லிம்கள் புலிகளினால் விரட்டப்பட்டபோது அதனை நியாயப்படுத்தி அன்று தொல் திருமாவளவன் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனவே அவரை இலங்கைக்கு வரவழைத்தமை தொடர்பில் எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். இதேவேளை புலிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒத்துழைப்பு வழங்கிய தமிழக எம். பி. க்களை வரவழைத்தமை தொடர்பிலும் எமது எதிர்ப்பை வெளியிடுகின்றோம். அரசாங்கத்தின் இந்திய சார்புத்தன்மையையும் எதிர்க்கின்றோம்.
அத்துடன் இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயம் தொடர்பில் குழப்பமே நிலவுகின்றது. அதாவது இந்திய எம்.பி. க்கள் குழுவினர் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளா? அல்லது இந்திய அரசியல் கட்சிகளின் பிரநிதிகளா? என்ற கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டியுள்ளது.
இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி.க்கள் விஜயம் குறித்து தன்னிடமே விளக்கம் அளிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே தற்போதைய சிக்கலுக்கு அரசாங்கம் பதிலளித்தாகவேண்டும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment