தமிழர், சிங்களவர் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார் டி.ஆர். பாலு பாலு
யாழ்ப்பாணத்துக்கு நேற்று தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழு வருகை தந்த போது அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்.
இலங்கைத் தமிழர்களுக்கும் எமக்கு மிடையிலான இச்சந்திப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் கலைஞர், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் நாம் இங்கு வருவதற்கான அனுமதியைத் தந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எமது நன்றிகள்.
நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு சென்று மீளக்குடியேற வேண்டுமென்பது உங்களுடைய விரும்பம் மாத்திரமல்ல; அது தான் எல்லோருடைய விருப்பமும். இன்னும் சொன்னால் அது எட்டுக்கோடி தமிழர்களின் விருப்பமும் கூட. இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆகவே தான் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் தமது இருப்பிடங்களுக்குச் செல்லவேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
இதன் பயனாகவே நலன்புரி நிலையங்களுக்கு நேரில் வந்து பார்வையிட இலங்கை ஜனாதிபதி கலைஞருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் கலைஞரால் வரமுடியாத சூழ்நிலை காரணமாக எம்மை அனுப்பி வைத்துள்ளார். நாம் இங்குள்ள நலன்புரி நிலையங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை அறிந்து கொள்ளவுள்ளோம். அவ்வாறு சரியான நிலைமைகளைத் தெரிந்து கொண்டு அதனை இந்திய அரசுக்குத் தெரிவிப்போம்.
இதனூடாக மக்களை மீளக்குடியமர்த்து மாறு இலங்கை அரசுக்கு இந்தியஅரசு வேண்டுகோள் விடுக்கமுடியும். 13வது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை அடைய தொடச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சிகள் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு பொருத்தமான அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். இக்கருத்தினையே கட்சிபேதமின்றி இந்திய நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம். அதனூடாக தமிழர்களுக்கு உரிய தீர்வினை வழங்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்தும். எனினும் அதற்குரிய கால அவகாசம் எமக்குத் தேவை. ஏனென்றால் இப்போது தான் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட்டிருக்கிறீர்கள். ஏறத்தாழ 25 வருடங்களாக நடை பெற்று வந்த உள்நாட்டுப்போர் இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் சாதகமா? பாதகமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. போர் முடிவுற்ற கையோடு தமிழர்களுக்குத் தீர்வினை வழங்க முனைப்புடன் செயலாற்றுகின்றோம். இந்த விடயம் முழுமைபெறக் கால அவகாசம் தேவைப்படுகின்றது.
இந்த விடயத்தில் நாங்கள் பெரியவர்களா? நீங்கள் பெரியவர்களா? என்று பார்ப்பது சரியல்ல. இந்தியாவும் இலங்கையும் நட்புநாடுகள் தொப்புள்கொடி உறவு என்று சொல்லுமளவுக்கு அந்த நட்பு இறுக்கமானது. இரண்டு நாடுகளும் இரண்டு கண்களைப் போன்றவை. இரண்டு கண்களும் ஒரே கோணத்தில் பார்க்காவிட்டால் இரண்டுக்குமிடையிலான உறவு பாதிப்படையும். அதனை அனைவரும் உணர வேண்டும். எனவே இலங்கையில் உள்ள தமிழ் மக்களும், சிங்கள மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென இந்தியா விரும்புகின்றது. இலங்கையில் இருக்கும் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதக் கூடாது. அதனைத்தான் நாம் பலமுறை இந்திய மத்திய அரசிடம் சொல்லி இருக்கின்றோம்; இனியும் சொல்வோம்.
தமிழக முதல்வர் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காகத் தூக்கத்தைக் கூட மறந்து, போராட்டங்களை நடத்தி வருகின்றார். அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment