இந்தியக் குழுவின் விஜய ஏற்பாடு தமிழர் தரப்பில் பெரும் அதிருப்தி! உள்நோக்கம் குறித்தும் சந்தேகம்
இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் விஜயத்தை ஒட்டிய ஏற்பாடுகள் குறித்து
இலங்கைத் தமிழர்கள் தரப்பில் பெரும் அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் முட்கம்பி வேலிகளுக்குப்பின்னால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அகதிகளின் நிலைமையை நேரில் கண்டறிவது மற்றும் அவர்களை விரைந்து விடுவித்து மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வது ஆகிய இலக்குகளுடனேயே இக்குழு இலங்கை வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் அதை விட வேறு உள் நோக்கங்கள் இக்குழுவுக்கு இருக்கலாம் என்றும் தமிழர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படு கின்றது.
இந்தக் குழுவினரின் வருகைக்கான ஏற்பாடுகள், ஒழுங்குகள், நடைமுறைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடியோடு பிடிக்க வில்லை என்று தெரியவந்தது. சரியோ, பிழையோ இலங்கை நாடாளு மன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு, கிழக்குத் தமிழர்கள் 23 பேரில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இன்று சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் வன்னித் தமிழர்களை நாடாளுமன்றில் பெருமளவில் பிரதி நிதித்துவப்படுத்துபவர்களும் கூட்டமைப்பினரே.
எம். மக்களின் வருகை மூடுமந்திரமாக இருந்தது
இந்த மக்களின் அவலநிலைமையை உண்மை நிலைவரத்தை கண்டறிவதாயின் அதற்கான ஏற்பாடுகளை அந்த மக்களின் பிரதி நிதிகளுடனேயே செய்ய வேண்டும். ஆனால் இந்திய எம்.பிக்கள் குழுவின் வருகை பெரும் மூடுமந்திரமாகவே வைக்கப் பட்டது. தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஒரு சுமுகமான தொடர்பாடலைப் பேணாமலேயே இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆக, கூட்டமைப்பினருடன் ஒரு சந்திப்பு குறுகிய கால முன்னறிவித்தலுடன் ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்டது. அதுவும் ஒன்றே கால்மணி நேரத்துக்குள் அவசரமாக முடிக்கப்பட்டது. சந்திப்பின்போது இந்திய எம்.பிக்கள் தரப்பில் பிரதிபலிக்கப்பட்ட கருத்துக்கள் கூட்டமைப்பு எம்.பிக்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தின என்று கூறப்படுகின்றது. இலங்கைத் தரப்புடன் ஓர் உடன்பாடு கண்டு, அதனடிப்படையில் சில விடயங்களை ஒப்பேற்றவே இந்த எம்.பிக்கள் குழு இலங்கை வந்துள்ளது என்ற எண்ணம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் "உதயனு" க்குத் தெரிவித்தார்.
காங்கிரஸின் மூத்த எம்.பி. சொன்ன காரணம்
"இந்த அகதிகளை மீளக் குடியேற்று வதை இலங்கை இராணுவம் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகின்றது. அதையும் மீறி அகதிகளை மீளக் குடியேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயன்றால் அவருக்கு எதிராக இராணுவம் கிளம்பும் சாத்தியம் உண்டு. அத்தகைய நிலைமை ஏற்பட்டால் அதில் இராணுவத்துக்கு சார்பாக சீனா தலையிடும் சூழல் உண்டு. இதை யெல்லாம் நாம் கணக்கில் எடுக்க வேண்டி உள்ளது.'' என்ற சாரப்பட இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.ஒருவர் இந்தச் சந்திப்பில் கூறியிருக்கின்றார். இது, இக்குழுவினரின் உள் நோக்கம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் மத்தியில் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும், இந்தச் சந்திப்பில் அகதிகளின் நிலைமை குறித்துப் பேசி முடிப்பதற்கிடையிலேயே நேரம் போய்விட்டதாகக் கூறி சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டு விட்டது.
"தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய வந்தவர்கள் தமிழர் தரப்பின் முக்கிய பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்து யாடாமல் முடித்துக் கொண்டமை முறித்துக் கொண்டமை வேறு உள்நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலுடன் இக்குழுவின் விஜயம் அமைந்துள்ளது என்ற கருத்தையே எமக்குத் தந்துள்ளது.'' என்றார் கூட்டமைப்பின் இன்னொரு எம்.பி.
தமிழர்களின் அவல நிலைக்கு இந்தியாவே காரணம் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்
"ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்குப் பிரதான காரணகர்த்தாக்களில் இந்தியாவும் ஒன்று. அவர்களால்தான் இந்த அவல நிலை இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்துள்ளது. இதை இக்குழுவினருக்கு உணர்த்த முன்னரே சந்திப்பை நேரம் போதாது என முடித்துவிட்டார்கள். யாராவது ஒருவர் இதை அவர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.'' என்றார் இன்னொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எண்மர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஆவர்.ஆனால் யாழ்ப்பாணத்துக்கான இந்தக் குழுவினரின் விஜயம் எஞ்சியுள்ள ஓர் எம்.பியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் திரு விழாவாக நடத்திக்காட்டப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எடுபட்டு, இக்குழுவினர் இலங்கை அரசு சார்பானவர்களாகவே செயலாற்றும் அவலம் ஏற்படும் என்று தமிழ்க் கூட்டமைப்பின் மற்றொரு எம்.பி. முற்கூட்டியே எச்சரிக்கை செய்துள்ளார்.
இக்குழுவினரின் இலங்கை வருகைக்கான பிரதான நோக்கம் வவுனியாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் தமிழர்கள் பற்றியதே. எனவே, அவர்களின் வருகையில் கணிசமான நேரம் அந்த அகதிகளுடனான சந்திப்பாகவே அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நேற்று மாலை சில மணி நேரத்துடன் முடிந்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எல்லா அகதி முகாம்களுக்கும் இந்தக் குறுகிய நேரத்துக்குள் சென்று விடயத்தை முடித் துக்கொள்ளலாம் எனக் கூறுவது அபத்தமாகும். தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அகதிகளையும் இணைத்துக்கொண்டு வராமல், தமிழகத்தின் ஆளும் தி.மு.க. கூட்ட ணியில் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை மட்டும் அதுவும் இந்திய மத்திய அரசின் தூதுக்குழுவாக அல்லாமல் தமிழக முதல்வரின் தூதுக்குழுவாக அனுப்பி வைத்திருக்கின்றமையும் பலத்த சந்தேகத்தைக் கிளப்பியிருப்பதாகத் தமிழர் தரப்பில் கூறப்பட்டது.
Uthayan
0 விமர்சனங்கள்:
Post a Comment