கவலைப்படாதீர்கள், இந்தியா உங்களுக்கு உதவும்; முற்றவெளியில் கண்ணீர் மல்கிய முதியவரிடம் பாலு
ஈழத் தமிழர்கள் இனிக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கௌரவமான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும்.
அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா நிச்சயம் உதவிசெய்யும். இவ்வாறு குறிப்பிட்டார் திராவிட முன் னேற்றக்கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்திய மத்திய அமைச்சருமான ரி.ஆர்.பாலு.
இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர். இக்குழுவினரை வரவேற்பதற்காக யாழ். முற்றவெளிப் பகுதியில் நேற்றுக்காலை முதல் மக்கள் கூடியிருந்தனர். இந்தியத் தூதுக்குழுவினர் தந்தை செல்வா சிலைக்கு மலர்மாலை அணிவித்த பின்னர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு, வீதியில் திரண்டிருந்த மக்களுக்கு அண்மையில் சென்று சந்தித்துப் பேசினார். இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, தொல்.திருமாவளவன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் உடன் சென்றனர்.
அப்போது அங்கு கூடியிருந்த முதியவர்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலுவைப் பார்த்து"நாங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் போதும். எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வைப் பெற்றுத்தந்து நிம்மதியாக வாழ உதவுங்கள். இழப்புகளை இனிமேலும் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. தயவு செய்து எமக்கு உதவி செய்யுங்கள்'' என்று கண்ணீர் மல்கியவாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்குப் பதிலளித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு
ஈழத் தமிழர்கள் எவரும் இனிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவோம். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இங்குள்ள நிலைமைகளைப் பார்த்து நாம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்போம். உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அந்த நம்பிக்கையுடன்தான் இங்கு வந்துள்ளோம். எனவே ஈழத் தமிழர்களின் விடயத்தில் இந்திய அக்கறையுடன் செயற்பட்டு நீங்கள் கௌரவமாக வாழ்வதற்கு உதவும் என உறுதிபடக் கூறுகின்றேன் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment