இறந்து போன ஈழ தமிழருக்கு ஈமசடங்கு நடத்தியாகிவிட்டது! எஞ்சியுள்ள பசித்த வயிறுகளுக்காவது அடுத்தவேளை கஞ்சியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது தமிழகத்தின் கடமை!
தேர்தல் முடிந்துவிட்டது. பிரச்சாரப் பயணங்களும் இப்போதைக்குத் தேவை இல்லை. தமிழக மக்கள் யார் பக்கம் என்கிற விவாதத்திற்குக்கூட இப்போதைக்கு இடமில்லை. இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து அரசியலையே நடத்தி வருகின்றன. எத்தனைமுறை முறையிட்ட பிறகும் செவி சாய்க்காமல் இருக்கும் மத்திய அரசிற்கும் இலங்கை அரசிற்கும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் இருந்து உப்பு சப்பாய் எழுப்பப்படும் கண்டனங்களை சம்பந்தப்பட்ட இரண்டு அரசுகளுமே கண்டு கொள்ளவில்லை.
ஒற்றுமையாய் இந்த விஷயத்தில் தமிழகத்தில் இருந்து கண்டனங்கள் எழ வாய்ப்பில்லை என்கிற உண்மை தருகிற தைரியத்தில்தான் அவை அப்படி நடந்து கொள்கின்றன. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. ஏற்கனவே இறந்து போனவர்களுக்கு ஈமச்சடங்கு நடத்தியாகிவிட்டது.
இருக்கிற பசித்த வயிறுகளுக்காவது அடுத்த வேளை கஞ்சியை சுதந்திரமாக குடிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டியது தமிழகத்தின் வரலாற்று கடமை. இந்திய அரசு இறையாண்மை பேசலாம். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் உணர்வையும் கடமையையும் பேச வேண்டிய தருணம் இது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரையும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் சந்தித்து முள் வேலிகளுக்குள் அடைபட்டிருக்கிற இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்விற்கு உத்தரவாதம் தரவேண்டி கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
வழக்கம்போல கோரிக்கை மனுக்கள், பிரதமருக்கு அனுப்பப்படும் ஏகப்பட்ட கடிதங்கள் வாயிலாக அந்த மக்களுக்கு வாய்கரிசிகூட போட முடியாது என்பதை தமிழக முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது. இலங்கை விவகாரத்தை வைத்துக்கொண்டு ஆளும் தி.மு.க அரசிற்கு நெருக்கடியைக் கொடுக்கலாம் என எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது செத்துமடியும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு ஒப்பானது. அரசிலை தூர எறிந்துவிட்டு ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்தால் ஒரளவிற்காவது இலங்கையில் நிலமை சீர்பட வாய்ப்பிருக்கிறது. இந்தக் கடமையில் இருந்து பின்வாங்கும் அரசியல் கட்சிகளை வலாறு மன்னிக்காது.
-இந்திய டுடே
0 விமர்சனங்கள்:
Post a Comment