இந்திய நாடாளுமன்ற தூதுக்குழு நிவாரண முகாம்களுக்கு நேரில் விஜயம்!
இலங்கை வந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றுக் காலை யாழ். நகருக்கும், அங்கிருந்து வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கும் விஜயம் செய்தனர். நேற்றுக் காலை விமானப் படை விமானம் மூலம் இரத்மலானையிலிருந்து யாழ். நகரைச் சென்றடைந்த குழுவினர் பலாலி விமானத் தளத்திலிருந்து ஹெலிகொப்டர் மூலம் யாழ். கோட்டையை சென்றடைந்தனர்.
காலை 9.45 மணியளவில் யாழ். கோட்டையை சென்றடைந்த குழுவினரை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, யாழ். அரச அதிபர் கணேஸ் ஆகியோர் வரவேற்றதுடன் தந்தை செல்வா நினைவுத் தூபி அருகே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார்.
தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தபின்னர் பேண்ட், மற்றும் நாதஸ்வர மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக யாழ். பொது நூலகத்துக்கு குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் தமிழக குழுவினர் கலந்துகொண்டனர்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக குழுவின் தலைவர் ரி. ஆர். பாலுவுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். யாழ். மேயர் பதவிக்கு தெரிவாகியுள்ள திருமதி யோகேஸ்வரி கவிஞர் கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்த நிகழ்வுகளின் பின்னர் யாழ். நூலகத்துக்கு முன் குழுமியிருந்த மக்களுடனும் தமிழக் குழுவினர் உரையாற்றினர்.
தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் யாழ். ஆயரும், செல்வநாயகம் ஞாபகார்த்த அறங்காவல் குழுவின் தலைவருமான பேராயர் வணக்கத்துக்குரிய ஜெபநேசன் அடிகளாரும் தமிழக குழுவினருடன் பேசினார். யாழ். நிகழ்வுகளை முடித்துக் கொண்ட தமிழக குழுவினர் ஹெலிகொப்டர்களில் காலை 11.30க்கு வவுனியா புறப்பட்டனர்.
வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்தை அண்டியுள்ள ஹெலிக்கொப்டர் நிறுத்துமிடத்துக்கு பகல் 12.15 மணியளவில் வந்து சேர்ந்த தமிழக குழுவினர் மனிக்பாம் நிவாரணக் கிராமத்தின் வலயம் 1, வலயம் 2 என்பவற்றுக்கு விஜயம் செய்தனர்.
நிவாரணக் கிராமத்திலுள்ள பாடசாலைகளை பார்வையிட்டதுடன் அங்கிருந்த மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து கொண்டனர். நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் தமிழக குழுவில் அங்கம் வகிக்கும் கலைஞர் கருணாநிதியின் புதல்வி கவிஞர் கனிமொழியையே பெரும்பாலும் சூழந்துகொண்டனர்.
கதிர்காமர், அருணாசலம், இராமநாதன் வலயம் 4, 5 போன்ற நிவாரணக் கிராமங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்தனர். சில நிவாரணக் கிராமங்களின் உள்ளே சென்று மக்களுடன் உரையாடினர். சில கிராமங்களை வாகனத்தில் சென்றபடியே பார்வையிட்டனர்.
சென்னையிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி உயர் ஸ்தானிகர் வீ. கிருஷ்ணமூர்த்தி, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் காரியவசம், இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் தமிழக குழுவினருடன் சென்றுள்ளனர். வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து தமிழக குழுவினர் நேற்று மாலை 4.00 மணிக்கு மீண்டும் கொழும்பு திரும்பினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment