ஈரானை நிலைகுலையச் செய்வது அமெரிக்காவுக்கு இலகுவானதல்ல
ஈரானில் ஜுன் 12ந் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 66.2 வீதம் பெற்றுத் தெரிவாகிய மஹ்மூத் அஹ்மதினேஜாத்தின் வெற்றியைக் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் பேரணிகளும் ஓய்ந்து அடங்கிவிட்டன. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் கண்டனப் பேரணிகளுக்கும் பின்னணி ஆதரவு வழங்கிய வெளிநாட்டு சக்திகள் இன்றும் ஓயவில்லை. குறிப்பாக அமெரிக்காவையும் ஐரோப்பிய யூனியன் நாடுகளையும் கூறலாம்.
அஹ்மதினேஜாத்தின் வெற்றிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற காலத்தில், ஈரானில் ஆட்சிமாற்றம் இடம்பெறப் போகின்றது என்ற பிரசாரத்தை மேற்குலகம் கட்டவிழ்த்து விட்டது. மத்திய ஆசிய நாடுகளில் அரங்கேற்றிய புரட்சிகளைப் போல (ஒறேஞ்ச் புரட்சி, அப்பிள் புரட்சி, பேப்பிள் புரட்சி) ஈரானிலும் ஒரு ‘புரட்சியை’ அரங்கேற்றலாம் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆட்சிமாற்றம் சாத்தியமில்லை என்பது தெளிவாகிய நிலையில், ஈரானை நிலைகுலைப்பதற்கான வழிவகைகளைத் தேடுகின்றார்கள்.
பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் ஈரானுடனான பிரச்சினையை நட்புறவுப் பாணியில் தீர்க்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஈரான் அரசாங்கத்தை 1953ம் ஆண்டு கவிழ்த்ததில் அமெரிக்காவுக்குப் பிரதான பங்கு உண்டு என்பதை ஒத்துக்கொண்ட முதலாவது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.
கெய்ரோ பல்கலைக் கழகத்தில் ஜுன் மாதம் ஆற்றிய உரையில் “ஈரான் இஸ்லாமியக் குடியரசு” என்று பராக் ஒபாமா ஈரானைக் குறிப்பிட்டதை ஈரான் தொடர்பான அமெரிக்க அணுகுமுறையில் ஒரு திருப்புமுனை என்று சில அரசியல் நோக்கர்கள் அன்று கருதினர். ஈரானை இஸ்லாமியக் குடியரசு என்று எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் இதற்கு முன்னர் குறிப்பிடவில்லை.
ஈரானில் ஆட்சிமாற்றம் சாத்தியம் என்று அமெரிக்கா கருதிய நாட்களிலேயே ஒபாமாவின் இந்த நிலைப்பாடு வெளிப்பாடு பெற்றது. இப்போது அணுகுமுறை மாறிவிட்டது.
அமெரிக்காவின் அதிகார வர்க்கத்தினது செல்வழியிலிருந்து ஒபாமா விலகிச் செல்வது சாத்தியமான காரியமல்ல. ஆட்சி மாற்றத்துக்குப் பதிலாக நிலைகுலைப்பு முயற்சி இப்போது முன்னெடுக்கப் படுகின்றது.
ஈரானில் ‘ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும்’ ஊக்குவிப்பதற்காக ஸிஷிதியிளி அமைப்பு இந்த வருடத்துக்கு 20 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருக்கின்றது. இந்த அமைப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நேடியான கண்காணிப்பில் இயங்குவது. ஜனாதிபதி ஒபாமாவுக்கு இது தெரியாமலிருக்க முடியாது.
குர்திஷ் மற்றும் அஸேதி சிறுபான்மையின அமைப்புகளுடன் அமெரிக்கா இரகசிய உறவு வைத்திருக்கின்றது. இந்த அமைப்புகளின் அரச எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா இரகசியமான முறையில் நிதியுதவி செய்கின்றது. ஈரானுக்குள் உள்நாட்டு நெருக்கடியைத் தோற்றுவிப்பதற்கு வெளிச் சக்திகள் மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்கப் போவதில்லை. தேர்தல் முடிவுக்கு எதிராக இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களின் தோல்வி இதையே உணர்த்துகின்றது.
இந்த நிலையில் ஈரானை நிலைகுலையச் செய்வதற்கு அமெரிக்காவுக்கு முன்னால் இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று ஐக்கிய நாடுகள் சபை மூலம் பொருளாதாரத் தடையைக் கொண்டுவருவது. மற்றது இராணுவ நடவடிக்கை. இரண்டும் அமெரிக்காவின் அதிகார வர்க்கம் நினைப்பது போல இலகுவானவையாகவோ எதிர்பார்க்கும் பலனைத் தருபவையாகவோ இல்லை.
வீட்டோ நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் பொருளாதாரத் தடையை எதிர்பதால் அது நடைமுறைச் சாத்தியமற்றது. இராணுவ நடவடிக்கை அமெரிக்காவையே பலவீனப்படுத்தும். ஆப்கானிஸ்தான் மீதும் ஈராக் மீதும் மேற்கொண்ட படையெடுப்புகள் அமெரிக்காவைச் சங்கடமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றன. ஈரான் மீது இப்போது தாக்குதல் நடத்தினால் எட்டு வருட காலத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மூன்றாவது இஸ்லாமிய நாடாக அது இருக்கும்.
அமெரிக்கா இஸ்லாமிய விரோத நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு அது வழிவகுக்கும். இப்போது நண்பர்களாக இருக்கும் இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து தூர விலகுவதற்குத் தீர்மானிக்கலாம். யுத்தம் என்று வந்தால் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பார்க்க மோசமான பாதிப்புக்கு அமெரிக்கா ஈரானில் முகங்கொடுக்க நேரிடும்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கின்றது என்பது அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டு ஈரான் அதை மறுக்கின்றது. ஈரானிடம் அணு ஆயுதம் எதுவுமே இப்போது இல்லை. எனினும் ஈரான் தனது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எவரும் பிழை காண முடியாது. ஒரு எல்லையில் ஆப்கானிஸ்தான். இன்னொரு எல்லையில் ஈராக். இரண்டு நாடுகளிலும் அமெரிக்கப் படை நிலைகொண்டிருக்கின்றது. மூன்றாவது எல்லையில் பாகிஸ்தான். அது அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடு. இந்த நிலையில் அமெரிக்காவிடமிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை ஈரான் செய்வது நியாயமானதே. இஸ்ரேல் ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் என அணுசக்தி நாடுகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில் ஈரானும் அணுசக்தியின் பால் நாட்டம் கொள்வதும் இயல்பானதே.
0 விமர்சனங்கள்:
Post a Comment