பரமேஸ்வரன் குறித்த சர்ச்சை: அதிர்வின் கண்ணோட்டம்
பரமேஸ்வரன் உண்ணாவிரதச் சர்ச்சை தொடர்பாக அதிர்வு இணையம் இச் செய்தியை சரிவரக் கையாளவில்லை என அதிர்வு இணையம் மீது குறைகூறி இணையத்தளம் ஒன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் சில வாசகர்கள் இச் செய்தி தொடர்பாக தமது ஆதரவையும் , எதிர்ப்பையும் வெளிப்படுத்தி இருந்தனர். நாம் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கியுள்ளோம். பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் நாம் அதற்கு பதில்கூறக் கடமைப்பட்டுள்ளோம். தமிழ் வெல்க என்ற பொருட்பட இயங்கும் பிரபல இணையத்தளம் ஒன்றில் மதிப்பிற்குரிய அன்பர் கீர்த்திகன் என்பவர் அதிர்வு இணையம் குறித்த ஒரு கட்டுரை ஒன்றை நேற்றைய தினம் எழுதியிருந்தார். அதில் அவர் மிகவும் நாகரீகமாகவும், பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்து, எழுதி இருக்கிறார். இச் செய்தியை நாம் சரிவரக் கையாளவில்லை என்பதே அவர் குற்றச்சாட்டு. இருப்பினும் ஒரு படி மேலே சென்று நாம் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறோம் என அவர் கூறி இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
முதலாவதாக முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டு: பரமேஸ்வரன் சாப்பிட்ட பேகரின் விலை 7.1 மில்லியன் பவுண்டுகள் என நாம் இட்ட தலையங்கம் பிழை என்பதாகும். இந்தத் தலையங்கம் ஆங்கில வடிவத்தில் இருந்து அப்படியே மொழிமாற்றப்பட்டது, காரணம் பிரித்தானியாவிலும் சரி, ஏனைய நாடுகளிலும் சரி , பிரித்தானியச் செய்திகள் எவ்வாறு கூறியிருக்கின்றது என்பதை அப்படியே மக்களுக்கு கொண்டுசெல்ல நாம் முற்பட்டதால் ஏற்பட்டது. பிரித்தானிய இணையத்தளங்கள் பரமேஸ்வரன் உண்ட மக்டொனால்ட்சின் விலை 7.1 மில்லியன் பவுண்டுகள் என்று செய்திவெளியிட்டால், அதன் கருப்பொருளை மாற்றி வெளியிடவோ, அல்லது அந்தச் செய்தியை மாற்றி எமக்குச் சாதகமாக முறையில் வெளியிடுவது மாபெரும் தவறு. தமிழ் மக்களுக்கு பிரித்தானிய ஆங்கில ஊடகங்கள் எவ்வாறு செய்திகளை வெளியிட்டுள்ளன எனக் கோடிட்டுக் காட்ட நாம் விரும்பினோம்.
அதனால் விழித்துக்கொண்டனர் தமிழர்கள். தம்மீது சுமத்தப்பட்டுள்ள பழிகளை உணர்ந்தனர். இச் செய்தி வெளியாகி சில மணிநேரத்திலேயே நாம் பரமேஸ்வரனுடன் தொடர்புகொள்ள முற்பட்டோம், என்பதை அவர் நன்கு அறிவார். நாம் ஸ்கொட்லன் யாட் பொலிசாரிடம் தொடர்புகொண்டபோது, இது குறித்து தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது என மறுத்த பொலிசார், சனிக்கிழமை காலை எம்மைத் தொடர்புகொள்வதாகத் தெரிவித்தனர். சனிக்கிழமை தொடர்புகொண்ட பொலிசாரிடம், கண்ட நேர்காணலை நாம் நேற்றைய தினம் பிரசுரித்திருந்தோம்.
குற்றச்சாட்டு 2: பரமேஸ்வரன் உண்ணாவிரத முடிவின்போது, பிரித்தானிய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தாம் உண்ணா விரதத்தைக் கைவிடுவதாகச் சொல்லியிருந்தார். ஏராளமான வாசகர்கள் அது என்ன என அறிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருந்தனர், இருக்கின்றனர். எமக்கு வந்த மின்னஞ்சல்களில் பெரும்பாலான மின்னஞ்சலில் இதனைத்தான் வினவியிருந்தனர் மக்கள்( அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்ட நேரத்தில்) அதனால் இந்தக் கேள்விக்கு அவர் என்றோ ஒரு நாள் பதில்கூறக் கடமைப்பட்டுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை, முள்ளிவாய்க்காலில் 25,000 பொதுமக்களும் ஆயிரக்கணக்கான மாவீரரும் மரணித்த பின்னர் என்றோ ஒரு நாள் அதை அவர் கூறித்தான் ஆகவேண்டும், அதனை அறியும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. பரமேஸ்வரன் உண்ணாவிரதத்தால் மட்டும்தான் பிரித்தானியத் தமிழர்கள் போராடத் தொடங்கினார்கள் என்று எவராலும் கூறிவிடமுடியாது.
குற்றச்சாட்டு 3: மெனிக்பாம் முகாமில் 96 இளைஞர்களை இராணுவம் கடத்திச் சென்றது குறித்த செய்திகள் ஏன் அதிர்வு இணையத்தில் வரவில்லை? இச் செய்தி எமக்கு கொழும்பில் உள்ள ஊர்ஜிதமற்ற செய்திச் சேவை ஒன்றின் முலம் வழங்கப்பட்டது. நம்பத்தகுந்த செய்தியாளர்கள் தரும் செய்திகளையே நாம் மேலும் ஒருமுறை ஊர்ஜிதம் செய்து போடவேண்டிய நிலையில் இருக்கிறோம். இச் சம்பவத்தை நாம் முதலில் பிரசுரித்து பின்னர் இது பொய்யான சம்பவம் என்று நிருபணமானால் தற்போது எம்மைப் பற்றி விமர்சித்திருக்கும் கீர்த்திகனே அதிர்வு இப்படி ஒரு நடக்காததை நடந்தது என்று கூறியிருக்கிறது என்று இதற்கும் ஒரு விமர்சனம் எழுதியிருப்பார். என்ன செய்வது விமர்சகர்கள் எண்ணிக்கை கூடிவிட்டது..
மதிப்பிற்குரிய கீர்த்திகன் அவர்களே! நாம் பிரசுரித்த செய்திகளில் தவறு இருக்கிறது அல்லது இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் சில சில செய்திகளை நாம் பிரசுரிக்கவில்லை என்றால் நாம் அரசாங்கத்துடன் சேர்ந்துவிடோம் என்ற தொனியில் எழுதுவது மிகவும் நாகரீகம் அற்ற செயல். இலங்கை அரசும் அதன் கைக்கூலிகளும் அதிர்வு இணையத்தின் வலையத் தளத்தில் சமீபத்தில் ஏற்படுத்திய தடங்கல்களை யாவரும் அறிவர். நாளாந்தம் எமக்கு வரும் தடைகள், சிங்கள எதிர்ப்புகள் என்பனவற்றை நாம் நேரடியாக அனுபவித்தவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எனவே நாம் எமது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்துவிட்டோம். இல்லை பரமேஸ்வரன் செய்தியை நாம் கையாண்டவிதம் தவறு என்று மக்களாகிய நீங்கள் இன்னமும் நினைப்பீர்களாக இருந்தால் அதிர்வு இணையம் தமிழர்களிடம் பகிரங்கமாகவே மன்னிப்புக் கோருகிறது!!!!. யார் நீங்கள்? எமது தமிழீழ உறவுகள் , உங்களிடம் தமிழீழத்தை நேசிக்கும் நாம் மன்னிப்புக் கோருவதில் வெட்கப்படவில்லை. அதிர்வு இணையம் தமிழீழ மக்களின் இணையம். தமிழீழ மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஓர் இணையம். தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க பாடுபடும் ஓர் இணையம். இதனையே நாம் தொடர்ந்தும் செய்வோம் எமது இலக்கான தமிழீழம் மலரும்வரை! மாவீரர் கனவு பலிக்கும் வரை.
இன்று எம்மை போற்றியோர் இனிவரும் காலத்தில் போற்றுவர், புழுதிவாரி தூற்றியோர் இனிவரும் காலத்தில் எம்மை நேசிப்பர்.
நன்றி,
அதிர்வின் ஆசிரியபீடம்
Athirvu
0 விமர்சனங்கள்:
Post a Comment