இலங்கை அரசு புலம்பெயர் தமிழருக்கு நீட்டும் இலவச மக்டொனால்ஸ்: கீர்த்திகன்
இந்தக் கட்டுரையை எழுதுவதன் நோக்கம் யார் மீதும் உள்ள தனிப்பட்ட வெறுப்போ அல்லது யாரையும் புண்படுத்துவதோ அல்ல மாறாக தலை மொட்டைபோல் தெரிகிறதென்பதற்காக மிளகாய் அரைக்க நினைக்கக் கூடாதென்பதற்காகவும் தமிழினம் சந்திக்கும் சந்திக்க இருக்கும் மிகப்பெரும் சவால்களை தொட்டுச் செ(சொ)ல்வதற்குமேயாகும்.
ஏதிரி ஒரு இரையைப் போடுவதும் அதை நாங்கள் விழுங்கிக்கொண்டு திண்டாடுவதும் எங்களைப் பார்த்து எதிரிகொண்டாடுவதுமே அண்மைக்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
மீண்டும் புலம்பெயர் தேசங்களில் வலுப்பெறும் போராட்டங்களும் அநேக நாடுகள் கொடுக்கும் அழுத்தங்களும் இலங்கை அரசுக்கு கிலியையும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்கவும் ஆன்ம உறுதியை அசைத்துப் பார்க்கவும் சிங்கள தேசம் பல சதி முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக பல நிறுவனங்களுடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. பல மில்லியன் டொலர் பணத்தையும் செலவுசெய்துகொண்டிருக்கின்றது.
இதன் அடிப்படையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கவேண்டும். வெளிவரும் ஒவ்வொரு செய்திகளினதும் உள்நோக்கங்களையும் உண்மைத்தன்மையையும் பகுத்தறிந்து வெளிக்கொண்டு வரவும் உள்வாங்கவும் கருத்துக் கூறவும் காலத்தால் எச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக தமிழ் ஊடகங்களை இயக்குபவர்களின் கைகளில் காலம் மிகப்பெரும் வரலாற்றுக் கடமையை கையளித்திருக்கிறது.
நாங்கள் நடுநிலமை என்ற சொல்லாடலுக்கும் சில சமயங்களில் உண்மை என்ற உறுதிப்படுத்தப்படாத தன்மைக்கும் அப்பால் ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் எதை எப்படி எப்போது தன் மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற தெளிவு மிகவும் முக்கியமானது.
இவற்றை நாம் சரிவர செய்கின்றோமா என சுய மீளாய்வு செய்தலே தேசத்திற்கு நாம் செய்யும் முதல் கடமையாகும். அதனடிப்படையில் பரமேஸ்வரன் சாப்பிட்ட மக்டொனால்சின் விலை 7.1 மில்லியன் பவுன்ஸ் என்ற செய்தியை தொட்டு சில விடயங்களைக் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
இந்த தலையங்கத்தை ஒரு ஆங்கில ஊடகம் வெளியிட்டது. அதை ஒத்த செய்தியை சில ஆங்கில இணையத்தளங்களும் வானொலிகளும் வெளியிட்டு பல்வேறுவிதமான கருத்தாடல்களும் இடம்பெற்றன.
இதே செய்தியை பரமேஸ்வரன் சாப்பிட்ட மக்டொனால்சின் விலை 7.1 மில்லியன் பவுன்ஸ் என்ற அதே தலையங்கத்தோடு ஒரு தமிழ் இணையத்தளம் முதலில் வெளியிட்டது.
அதே செய்தியை வைத்து நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
பரமேஸ்வரன் சாப்பிட்ட மக்டொனால்சின் விலை 7.1 மில்லியன் பவுன்ஸ்
இந்த தலையங்கத்தை முதலில் வெளியிட்டவர்களே இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையில் நாங்கள் ஏதோ நேரில் பார்த்தவர்கள் போல் உறுதியிட்டுக் கூறுகின்றோம். உண்ணாவிரதத்தின் போது பரமேஸ்வரன் உணவருந்தியதாக குற்றம் சாட்டப்படுகின்றது என்றோ அல்லது இதே தலையங்கத்திற்கு ஒரு கேள்விக்குறியைப்போட்டோ வெளியிட்டால் நாங்கள் என்ன குறைந்தா போய்விடுவோம்.
பரமேஸ்வரன் எங்களில் ஒருவன் தானே அவனைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டுவிட்டு இப்படி செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது ஆனால் பரமேஸ்வரன் மறுக்கின்றார் என்றோ போட்டால் தப்பா? கேவலம் நீங்கள் செய்தி போட்டு கருத்தெழுதியவர்கள் எல்லாம் அவரைப்பச்சைத்துரோகியாக்கித் திட்டி தீர்க்க பரமேஸ்வரன் உங்களைத்தொடர்புகொண்டு மறுப்புத் தெரிவித்த பின்னரே மறுப்பறிக்கையை பிரசுரிக்கும் கேவலமான நிலமை.
பிரித்தானியாவில் உண்ணா விரதம் இருந்த பரமேஸ்வரன் இரவில் மக்டொனால்ஸ் சாப்பிட்டதாக ஸ்கொட்லன் யாட் பொலீசார் கூறியுள்ளனர். இலங்கையில் மே மாதத்தில் போர் உச்சக்கட்டமாக நடந்தவேளையில், பிரித்தானியாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் பரமேஸ்வரன் என்பது யாவரும் அறிந்ததே. பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் கொடுத்த வாக்குறுதி காரணமாக பின்னர் உண்ணாவிரம் கைவிடப்பட்டது.
இந் நிலையில் இந்தத் தொடர் உண்ணாவிரதம் காரணமாக, பிரித்தானியப் பொலீசாருக்கு சுமார் 7.1 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகள் செலவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ரும் பிரித்தானிய வரலாற்றில் மிக நீண்ட நாட்களாக நடைபெற்ற போராட்டம் இதுவென வரலாற்றுப் பதிவும் பெற்றுள்ளது.
இன்று இது குறித்து பிரித்தானியாவின் ஸ்கொட்லன் யாட் பொலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெற்ற கூடாரத்தை தாம் கண்காணிப்பதற்காக, அதி சக்திவாய்ந்த நுணுக்கமான கமராக்களை தாம் பொருத்தி வைத்திருந்ததாக தெரிவித்த போலீசார், அதில் பரமேஸ்வரம் மக்டொனால் பேகரை(big mac) இரவில் சாப்பிடுவதை தாம் அவதானித்ததாகக் கூறியுள்ளனர்.
நான்கு வாரமாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் மே மாதம் நிறைவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறிப்பிட்ட அந்த அதிகாரி பரமேஸ்வரன் சாப்பிட்ட மக்டொனால்ஸ்சின் விலை 7.1 மில்லியன் பவுண்டுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட்லன்ட் யாட் பொலீசார் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் என எழுதியிருக்கின்றீர்கள். பரமேஸ்வரனிற்கு பொலிசார் கூறியிருக்கிறார்கள் தங்களிடம் அப்படியான ஆதாரம் எதுவும் இல்லையென்று. ஸ்கொட்லன்ட் யாட் பொலீசார் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் என்ற செய்தியை தயவு செய்து இன்னுமொருமுறை உறுதிப்படுத்துங்கள்.
இப் போராட்டத்தின் முடிவில் பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் கொடுத்த இரகசிய வாக்குறுதி காரணமாக உண்ணாவிரம் கைவிடப்பட்டதாகப் பரமேஸ்வரன் தெரிவித்தபோதிலும், இன்றுவரை அந்த இரகசிய வாக்குறுதி என்ன என்பதை அவர் சொல்லவே இல்லை.
இதை அந்த ஆங்கில ஊடகங்கள் எதுவுமே கூறவில்லை. இந்தச் செய்திக்குள் இதை இணைத்ததன் நோக்கம் என்ன? இப்படித்தான் தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்ப்பதா? உங்கள் வாசகர் கருத்துப்படி சாப்பிட்ட வீடியோவைக்காட்டி உண்ணாவிரதத்தை நிறுத்தியதென்பது உண்மையென்றால் பரமேஸ்வரன் அதிலிருந்து தப்பவும் தன்னை நியாயப்படுத்தவும் என்ன செய்திருப்பார் என உங்கள் வீட்டு குழந்தைகளைக் கேட்டு சரியான பதிலைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பரமேஸ்வரனுக்கு பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் கொடுத்த வாக்குறுதி என்ன என்பதை அறிய இலங்கை அரசு இன்றுவரை முயன்று தோற்றிருக்கும் நிலையில் அரசு பணியை நாம் தொடர்வோம் என சபதம் செய்கின்றோம். பரமேஸ்வரனின் வார்த்தைகளில் " வரலாற்றில் இனத்திற்காக மறைக்கவேண்டிய சில விசயங்களை மறைத்துத்தான் ஆகவேண்டும் அதற்காக நான் என்ன விலையும் கொடுக்கத் தயார்" என்கிறார்.
அன்று பரமேஸ்வரன் இறந்திருந்தால் கூட இன்றைய நிலையை தடுத்து நிறுத்தியிருக்கமுடியாது. இந்நிலையில் கோமா நிலைக்கு போக முதல் நாள் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டதும் அப்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் தான் தமிழர்களிற்கு இன்று முக்கியமான பிரச்சனையா?
இன்று வெளியாகியுள்ள எல்லா பிரித்தானிய ஆங்கில செய்தித்தாழ்களில் இவ் விடையம் வெளியாகியுள்ளது.
எல்லாம் என்பதன் அர்த்தம் என்ன? பிரித்தானியாவில் மொத்தம் எத்தனை செய்தித்தாள்கள் உள்ளன அதில் எல்லாவற்றிலும் வந்ததா? நீங்கள் இவ்வளவு மிகைப்படுத்துவதன் நோக்கம்? இப்படித்தான் தமிழ் மக்களுக்கு யாதார்த்தத்தை புரிய வைக்கின்றீர்களா?
இத்துடன் இணையத்தளங்களும் இச் செய்தியை பிரசுரித்துள்ளதால் , தமிழ் மக்கள் யதார்த்தத்தை அறியவேண்டும் என்பதற்காக இச் செய்தியை நாம் பிரசுரிக்கிறோம்.
இதில் எவ்வித தனிப்பட்ட விரோதப் போக்கும் இல்லை. அத்துடன் தமிழ் மக்களால் பாரிய போராட்டம் பிரித்தானியாவில் நடைபெற்று அது ஒரு வரலாறாகப் பதிவாகியுள்ள நேரத்தில், சிலரது நடத்தை காரணமாக, போராடிய ஒட்டுமொத்த தமிழர்களுமே அவமரியாதைக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோமே அன்றி வேறொன்றும் இல்லை.
எந்தச் செய்தியானாலும் அதனை நாம் துணிச்சலாப் பிரசுரிப்பது யாவரும் அறிந்ததே. இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், போராட்டத்தில் இவ்வாறு ஏற்படும் தடங்கல்களையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் ஓர் இணையமாக நாம் செயல்படுகிறோம். எனவே இச் செய்தி குறித்து உங்கள் கருத்துகள் ஏதாவது இருந்தால் அனுப்பிவைக்கவும்.
ஸ்கொட்லன் யாட் குறிப்பிட்டதுபோல சம்பவம் நடைபெறவில்லை என்றால் பரமேஸ்வரன் சட்டவல்லுனர்களை அணுகி முறைப்படி மான நஷ்ட வழக்கைத் தொடரமுடியும் என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
பரமேஸ்வரனை வசைபாட வழிசெய்து கொடுத்துவிட்டு பரமேஸ்வரன் பக்கம் நியாயம் இருந்தால் சட்ட வல்லுனர்களை அணுகி முறைப்படி மான நஸ்ட வழக்கைத் தொடர முடியும் என ஆலோசனை கூறும் நீங்கள் யுத்தத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட தனது இரத்த உறவுகளை இழந்து தன்னையே கொடுக்கத் தயாராகி ( அவர் மக்டொனால்ஸ் சாப்பிட்டிருந்தால் கூட உண்ணாவிரதத்தை இன்னும் ஒரு நாள் தொடர்ந்திருந்தாலே கோமா நிலைக்கு சென்றிருப்பார் என பிரித்தானிய மருத்துவர்களின் சான்றிதழ் சொல்கின்றது) தனிமரமாக நிற்கும் பரமேஸ்வரனிற்கு பல ஆயிரம் பவுண்ஸ் செலவாக இருக்கும் வழக்கைத் தொடர உங்களால் என்ன செய்ய முடியும் என சிந்தியுங்கள். ( இந்த எம் கே.நாராயணன் காலத்தில் அருமையான அட்வைசர்களுக்கு பஞ்சம் இல்லை)
அவரால் ஒட்டு மொத்த தமிழர்களும் அவமரியாதைக்குள்ளாகியிருகிறார்கள் என்று இனமானம் பேசும் நீங்கள் பரமேஸ்வரனின் மறுப்பையும் அவர்வைத்திருக்கும் ஆதாரத்தையும் கொண்டு உங்கள் இனமானத்தை எப்படிக்காப்பாற்றலாம் அல்லது அதற்காக நீங்கள் எவ்வளவு மணித்துளிகளை வெள்ளித்தொகைகளை செலவளிக்கப்போகின்றீர்கள் என சிந்தியுங்கள்.
7.1 மில்லியன் பவுன்ஸ் செலவாகிவிட்டதாக முதலைக்கண்ணீர் வடிக்கும் பிரித்தானிய வெள்ளைத்தோல்களுக்கு சொல்லுங்கள் அதில் தமிழன் கட்டிய வரிப்பணத்தையும் கோப்பிக்கடை வாகனப்போக்குவரவு என தமிழர்கள் செலவழித்து அதன் மூலமாக பெறப்பட்ட வரிப்பணத்தையும் கழித்து கணக்கை சொல்லும்படி. போதாதென்றால் எங்கள் ப+மியை ஆண்ட காலத்தில் சுரண்டியதில் இருந்து எடுத்துக்கொள்ளும்படி சொல்லுங்கள்.
நீங்கள் சொல்வதுபோல் அனைத்து பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் பரமேஸ்வரன் 7.1 மில்லியன் பவுன்ஸ் மக்டொனால்சை தின்றுவிட்டான் என்று கூறிவருகிறார்களென்றால் அவர்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக்கொண்டு அதை எப்படி எதிர்கொண்டு எமக்கு சாதகமாக்குவது என்று சிந்தியுங்கள். (ஏனெனில் இனி நிறையவே எதிர்பாரத இத்தகைய செய்திகள் வரும் வாய்ப்பு அதிகம்) அதை உங்கள் தளங்கள் ஊடாக மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். மாறாக நீங்கள் மக்களுக்கு புதிதாக யதார்த்தம் கற்பிக்க வேண்டாம்.
தயவு செய்து இணையத்தளம் உங்களதாய் இருக்கலாம். ஆனால் பொறுப்பற்ற முறையில் செய்திகளையும் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும் திணித்து விட்டு நீங்கள் பெரிய ஈழப்போராட்ட ஆதரவாளர் என்றும் மற்றவர்களை துரோகிகள் என்றும் வசைபாடும் உரிமை யாரிற்கும் இல்லை.
தன் இனத்திற்காக உண்மையாக சாகத்துணிந்த அந்த பரமேஸ்வரனை விமர்சிக்கும் உரிமை இனி பரமேஸ்வரனிற்கு கூட இல்லை. குறிப்பாக தன் இனத்திற்காக ஒரு நாளாவது உண்ணாமல் இருக்க தயாராகாத எவருக்கும் இல்லை.
இந்த ஆராய்ச்சிகளில் நாங்கள் இருக்க நேற்று முன்தினம் மெனிக்பாம் முகாமில் 96 இளைஞர்களையும் நேற்று 47 இளைஞர்களையும் இன்று 52 இளைஞர்களையும் சிறீலங்கா சிறப்பு புலனாயய்வுப்பிரிவு பெற்றோர் கதறக் கதற கைது செய்து கொண்டு சென்றிருக்கின்றது.
சாதாரண மக்களை வந்தடையும் செய்தி ஏன் உங்களுக்கு இன்னும் வரவில்லை? இதைத்தான் சொல்வது எதிரிபோட்ட இரையை அப்படியே விழுங்கி அவனின் பணியை இலகுவாக்குதல் என்று.
தயவு செய்து ஊடகங்களை நடத்தும் தமிழீழ ஆதரவாளர்களே தமிழினத்திற்கு வழிகாட்டுவதாய் சொல்லி குழிதோண்டாமல் குறைந்த பட்சம் ஊடக தர்மத்தையும் நாகரிகத்தையுமாவது பேணுங்கள். சிந்திப்போம் செயற்படுவோம்.
நன்றி
அன்புடன்
கீர்த்திகன்
keerththikan@gmail.com
Tamilwin
0 விமர்சனங்கள்:
Post a Comment