அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் இரத்மலானை சிவகுமார் சடலம் மீட்பு; பொலிஸ் காண்ஸ்டபிள் கைது (வீடியோ இணைப்பு)
கொழும்பு, பம்பலப்பிட்டி கடலில் அடித்துக் கொலை செய்யப்பட்டவர் இரத்மலானைப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் நேற்று பம்பலப்பிட்டி கடற்பகுதியில் கரையொதுங்கியது. சடலத்தை மீட்டெடுத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தரான திமுது சொம்னத் என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.
இறந்தவரின் சகோதரர் நேற்று பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இறந்த தனது சகோதரர் அங்கொடை மனநோயாளர் மருத்துவ நிலையத்தில் மூன்று தடவைகள் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
குறிப்பிட்ட நபரை தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தரும் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகளை தனியார் தொலைக்காட்சி யொன்று நேற்றுமுன்தினம் இரவு ஒளி பரப்பியது. இதனையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர்.
விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது: கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர்.
அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.
அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் அமிழ்ந்து போவது காண்பிக்கப்பட்டது.
உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment