ஏமாறுவதற்கு என்றே பிறந்தவன் தமிழன்
தள்ளாத வயதிலும் தள்ளு வண்டியில் பிறர் தள்ளப் பயணிக்கும் நிலையிலும் ஈழத் தமிழருக்காகப் பேசவும் அவர்களை விலை பேசவும் விமர்சிக்கவும் மனம் கொண்ட துணிச்சல் மிக்கவர் தமிழக முதலமைச்சர் என்பதை எவரும் மறுக்க முடியாது.
சிங்களத்தோடு ஒத்துப் போகவும் ஈழத் தமிழரை மட்டுமல்ல இந்தியத் தமிழரையும் கொன்று வரும் மகிந்த அரசைத் துதிபாடித் துணை நிற்கும் துணிச்சலும் அவருக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர். கறுப்புச் சட்டையில் புரட்சி செய்து இன்று காவித் துண்டில் தமிழரின் மரண காவியம் படைக்கும் பண்பாளர்.
எங்கே மகிந்தவை உலக நாடுகள் ஈழத் தமிழின அழிப்புப் போரில் இழைத்த போர்க் குற்றங்களுக்காக போர்க் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தி விடுமோ என்ற கவலை அதில் முக்கிய பங்களிப்புச் செய்த இந்திய மத்திய அரசுக்கும் மத்திய அரசியல் முக்கிய பங்காளியான கலைஞருக்கும் ஏற்படுவது இயற்கையே.
இதன் காரணமாகவே இந்தியப் பாராளுமன்றக் குழு என்ற பெயரில் தி.மு.க. தேர்தல் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளை அவசர அவசரமாக தாமாகவே இலங்கைக்கு அனுப்பி வைத்தார் அல்லது மத்திய அரசின் முக்கியமாகச் சோனியா அம்மையாரின் ஆணையை ஏற்றுச் செயற்பட்டார் எனினும் தவறில்லை.
இவர்களின் தேவை ஈழத் தமிழனின் உயிரோ உடமையோ அல்ல, மாறாக மகிந்த சிக்கிவிடக் கூடாது அப்படிச் சிக்கிவிட்டால் இறுதிக் கட்டப் போரில் இந்தியாவின் பங்களிப்பு உலகின் கவனத்துக்குக் கொண்டு வர இலங்கை அரசு தயங்காது என்பது இவர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட உள்ள காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தியப் பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் இலங்கை விடையம் விவாதிக்கப்பட வேண்டும் எனக் காட்டிய ஆர்வத்தை முறியடிக்கவுமே கலைஞரின் இம்முயற்சி என்பது அங்குள்ள எதிர்க் கட்சிகளின் குற்றறச்சாட்டாக உள்ளது. வட மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை அடக்கவும் இப்படியான ஒரு நாடகம் தேவையாக இருந்தது.
இந்தியத் தொலைக் காட்சி ஒன்றின் செய்மதி விமர்சகர் இதனை பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எடுக்கும் நிலையில் ஒரு உண்மையான பாராளுமன்றக் குழு உருவாகி அதனால் பாராளுமன்றத்துக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனில் அது உலக அளவில் பாரிய தாக்கங்களை ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தி விடும் அதனைத் தடுக்கவே குறிப்பிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் குழு உருவானது என்பற கருத்தைத் தெரிவித்தார்.
இக்கருத்தை நாம் இன்னும் ஒரு படி மேலே போய்ப் பார்ப்போமேயானால் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா., அமெரிக்கா போன்ற நாடுகளின் இலங்கைக்கு எதிரான அண்மைக்கால அறிக்கைகளும் போக்குகளும் தமிழர் சார்பாகவும் சிங்களத்துக்கு எதிராவும் அமைய முக்கிய காரணியாக இருப்பது இடம் பெயர்ந்த தமிழரின் மீளக் குடியமர்வும் அவர்கள் துயருறும் முட்கம்பி முகாம்களுமே.
இவற்றை வெளி நாட்டவர் பார்த்துவிடவோ அவை பற்றி எதுவும் கேட்டுவிடவோ கூடாது என்பதில் இலங்கை இந்திய அரசுகளுக்கு அதீத கவனம் உண்டு என்பதை முதலிலேயே குறிப்பிட்டுள்ளோம். எனவே அவை பற்றிய நற்சான்றிதழ் இலங்கைக்கு மட்டும் அல்லாது இந்தியாவுக்கும் பெரும் நன்மை அளித்து விடும் என நினைப்பது நியாயமே.
இந்தக் குழு புறப்படும் முன்னர் செய்தியாளருக்குத் தெரிவிக்கையில்; சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் தமது தரப்பான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன எனத் தெரிவித்தமை இலங்கை அரசின் முழு ஈடுபாடும் இதன் பின்னணியில் இருந்ததைக் காட்டுகிறது.
கொழும்பில் இவர்கள் விருந்துண்டு கொண்டாடிப் பொன்னாடை போர்த்திய கண் கொள்ளாக் காட்சியையும் காளைபோல் சென்ற திருமாவளவன் மகிந்தவால் காயடிக்கப் பட்ட காளையாக மீண்டதையும் கலைஞரும் கனிமொழியும் மணக்கும் தமிழால் தமிழன் பிணக் குவியல் மேல் மகிந்த புகழ் பாடி செம்மொழி திருவிழா எடுப்பதும் எம்முன் விரியும் காட்சிகள்.
கலைஞர் தொலைக் காட்சியில் அவரது கரகரத்த சிம்மக் குரலில் “ தமிழர்களே ! தமிழர்களே! என்னைக் கல்லில் கட்டிக் கடலில் போட்டாலும் தெப்பமாக மாறி உங்களைக் காப்பேனே அல்லாது உங்களை ஒரு போதும் கவிழ்த்து விடமாட்டேன்“ என்று ஒலிப்பதை இலவசமாக இந்தியத் தமிழன் கேட்பதோடு புலம் பெயர் ஈழத் தமிழரும் பணம் கொடுத்துக் கேட்கும் கொடுமை இன்னும் பல ஆண்டுகள் தொடரும். ஏன் என்றால் தமிழன் ஏமாறுவதற்கு என்றே பிறந்தவன்.
அன்று சரத் பொன்சேகர தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என விமர்சித்ததை இன்று எவராவது நினைத்துப் பார்த்தால் ,சரத் பொன்சேகா எத்தனை துல்லியமாக இவர்களை எடை போட்டுள்ளார் என்பது தெரியும். இன்னும் தான் எம்மவரில் பலர் கலைஞரைப் பகைக்காதே தூற்றாதே இந்தியாவே எமது ஆபத்பாந்தவன் எனப் பரிதவிப்பது பாவமாகத் தெரிகிறது. அற்பத் தமிழா உனக்கு வலிக்கிறது என அழக் கூடவா பிறரது அனுமதி வேண்டும்?
த.எதிர்மன்னசிங்கம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment