நாடு கடந்த தமிழீழ அரசு-ஜெனீவாவில் அமைக்க புலிகள் முடிவு
ஆஸ்லோ: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய நடவடிக்கையான நாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவா நகரில் நிறுவப்படவுள்ளது.
சர்வதேச நகர் என்பதால் ஜெனீவாவில் தமிழீழ அரசை நிறுவ புலிகள் அமைப்பு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான செயற்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் ருத்ரகுமாரன் விஸ்வநாதன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ஆஸ்லோவில் நடந்தது. ஆஸ்லோவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களையும், அமைப்புகளையும் பொது மேடையில் சந்தித்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனையில் நாடுகடந்த தமிழீழ அரசு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவது என்றும், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கு முதற்கட்டமாக அரசியல் சாசனத்தை இயற்றும் அவைக்கு தேர்தலை நடத்துவது தொடர்பாகவும், அதற்கான நடை முறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அரசியல் யாப்பு அவையில் இருபாலாரும் பிரதிநிதித்துவம் பெறுவது பற்றியும், தேர்தல் பற்றிய திட்டமிடல் மற்றும் கண்காணிப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை அமர்த்துவது பற்றிய சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன் ஜெனீவாவில் இயங்கவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு, பல்வேறு நாடுகள் தழுவிய அளவில் செயற்குழுக்களை அமைத்து அவற்றை ஒருங்கிணைத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுதல் ஆகியவை தொடர்பாகவும் ஆஸ்லோ ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.
இக்கூட்டத்தில் முள்வேலி வதை முகாம்களில் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு இந்த ஆலோசனைக் கூட்டம் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலை செய்யவும், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லவும் முகாம்களில் நடை பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும் என்றும் இக்கூட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏன் ஜெனீவா..?
பல்வேறு முக்கிய சர்வதேச அமைப்புகள் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ளன.
ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம், ஐ.நா. இழப்பீட்டு ஆணையம், ஐரோப்பிய பொருளாதார கமிஷன், சர்வதேச தொழிலாளர் கழகம், மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச அமைப்புகள் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளன.
இந்த வரிசையில் நாடு கடந்த தமிழீழ அரசும் ஜெனீவாவில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அமைப்புகள் நிறைந்த நகரம் என்பதாலும், ஜெனீவாவின் சர்வதேச புகழ் காரணமாகவும் அங்கு நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment