முகாம்களில் அவலம் இல்லை: காய்களுக்கு மட்டும் சிக்கல்: காங். எம்.பிக்கள்
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளோ, வேறு தேவைகளோ அவசியமாக இல்லை. அவர்கள் தங்களை சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும் என்பதையே பிரதான கோரிக்கையாக முன் வைத்தனர். முகாம்களில் உள்ள மக்கள் அனைத்துலக விதிகளின்படி பராமரிக்கப்படுகிறார்கள் என்று திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவில் இடம் பெற்றுள்ள 2 காங்கிரஸ் எம்.பிக்கள் கூறியுள்ளனர்.
காய்கறிகள், குடிநீர் கிடைப்பதில்தான் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிவதற்காக திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய ஒரு குழு இலங்கை போயுள்ளது.
இவர்கள் வவுனியாவில் உள்ள மிகப் பெரிய முகாமின் சில பகுதிகளைப் பார்வையிட்டு அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.
பாதுகாப்புக்காகத்தான் முள் வேலி...
இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் இடம் பெற்றுள்ள எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில்,
போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக விதிகளுக்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பாது காப்புக்காகவே முள்வேலி போடப்பட்டுள்ளது.
முகாமில் இருப்பவர்கள் தங்கள் ஊருக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்களே தவிர வேறு எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.
முகாமில் எல்லா இடங்களுக்கும் நாங்கள் சுதந்திரமாக சென்றோம். யாரையும் சந்திக்க கூடாது என்று எங்களுக்கு தடை விதிக்கவில்லை. மக்கள் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தோம்.
அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளோ, வேறு தேவைகளோ அவசியமாக இல்லை. அவர்கள் தங்களை சொந்த ஊரில் குடியமர்த்த வேண்டும் என்பதையே பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர். முகாம்களில் உள்ள மக்கள் அனைத்துலக விதிகளின்படி பராமரிக்கப்படுகிறார்கள் என்றார்.
அவலம் எல்லாம் ஒன்றும் இல்லை...
ஜே.எம். ஆரூண் கூறுகையில்,
இடம் பெயர்ந்து முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஊடகங்களில் வந்த தகவலை போல அவலங்களை எதிர் நோக்கவில்லை. முகாம்களை நேரில் சுற்றி பார்த்தன் மூலம் இந்த உண்மைகளை கண்டறிந்துள்ளோம்.
காய்கறிக்கு மட்டும்தான் சிக்கல்...
முகாம்களில் உள்ள மக்கள் குடிநீர் மற்றும் காய்கறி போன்றவற்றை பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக மட்டும் தெரிவித்தனர். இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று வவுனியா கலெக்டர் உறுதியளித்து உள்ளார்.
இந்தியா திரும்பியதும் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், முதல்- அமைச்சர் கருணாநிதி , காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரிடம் விளக்கம் அளிக்க உள்ளோம்.
மத்திய அரசின் மூலம் இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார் ஆரூண்.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment