தமிழகக் குழுவின் மலையக விஜயம் ஏமாற்றத்தையே தந்துள்ளது : கணபதி கனகராஜ்
"தமிழக நாடாளுமன்ற தூதுக்குழு மலையகத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சியளித்தாலும் இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்திய வம்வாவளி தமிழ் மக்களின் சமகால பிரச்சினையை அறிந்து கொள்வதில் அவர்கள் அக்கறை செலுத்தாமல் சென்றிருப்பது கவலையளிப்பதாகவுள்ளது."
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப்பேரவலம் வடக்கிலே நடந்தது. அது போன்றே இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அடிமைத்தனம் மலையகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இந்தியாவோ தமிழகமோ காத்திரமான பங்களிப்பை கடந்த காலங்களில் நல்கவில்லை. இதற்குப் பிரதான காரணம் இலங்கையில் இந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகள் மலையக மக்கள் சம்பந்தமான தகவல்களை தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் எடுத்து செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
இந்த நிலையில் இங்கு வந்திருக்கும் தமிழக தலைவர்கள் குழு, மலையக மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதில் கவனத்தை செலுத்துமென்ற எதிர்பார்ப்பு எல்லேரிடமும் இருந்தது.
மலையகத்தில் நோர்வே அரசாங்கம் அமைத்துக் கொடுத்த தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் இருக்கிறது. ஜேர்மன் அரசால் அமைத்து கொடுத்த ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரி இயங்குகிறது.
ஆனால் இந்தியாவின் பங்களிப்புடன் நவீன தொழிநுட்பத்துடன் அமைத்துக் கொடுப்பதாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட டிக்கோயா வைத்தியசாலை என்ன நிலமையில் இருக்கிறது?
இந்த வைத்தியசாலையைப் பார்வையிடுவதற்கும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இந்திய நாடாளுமன்ற அங்கத்தவர்களை அங்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை?
மக்களை - தொழிலாளர்களைச் சந்திக்கவில்லை
மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக வந்திருக்கும் தமிழ் தெரிந்த, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையகத்தில் எங்காவது ஓரிடத்தில் மலையக மக்களை, தோட்டத் தொழிலாளர்களை ஏன் சந்திக்கவில்லை?
பொகவந்தலாவ பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு எதிர்பார்த்திருந்தும் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
தோட்டப்பாடசாலைகள், அங்கு கற்கும் மாணவர்களின் நிலைமை, மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும்.
மலையக மக்களின் பிரச்சினைகள், இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் மீண்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள், சுகபோக வாழ்கையை அனுபவிப்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஒருசில மலையக அரசியல்வாதிகள் தமது இழந்துபோன செல்வாக்கின் சரிகட்டல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு மலையக மக்களின் பிரச்சினைகளை இரும்புத் திரைபோட்டு மறைத்திருக்கின்றார்கள். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மலையக விஜயம் மலையக மக்களுக்கு ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது."
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment