இலங்கைத் தமிழ் அகதிகளும் தமிழக அரசியலும்
இலங்கைத் தமிழ் அகதிகள் மூன்று பிரிவினராக உள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இறுதி வரை தங்கியிருந்து போர் முடிவுக்கு வந்த பின்னர், முள்வேலி முகாம்களுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் பேர் ஒரு பிரிவினர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் மக்கள், சுமார் ஒரு இலட்சம் பேர், இலங்கையின் தென்பகுதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் இரண்டாவது பிரிவினர்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த இலங்கைத் தமிழ் அகதிகள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் ன்றாவது பிரிவினர்.
இவர்களில் முதல் பிரிவினராக உள்ள யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் 30 முகாம்களில் உள்ள அகதிகள் பிரச்சினையே இன்று இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும், மிகுந்த கவலையோடும், அக்கறையோடும் பேசப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் குடியுரிமைப் பிரச்சினை தற்போது விவாதத்துக்குரிய ஒன்றாக முன்வந்துள்ளது. இடைப்பட்ட தென் இலங்கை முகாம் அகதிகளின் பிரச்சினை அவ்வளவாக கவனத்தை ஈர்க்காத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஈழப்போர் நடைபெற்று வந்த காலம்தொட்டு, அங்கே இருதரப்பிலும் துப்பாக்கிகள் மௌனமானதற்குப் பின்னர், இன்று வரை தமிழ்நாட்டில் அரசியல் இயக்கங்களிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளன. 2008ஆம் ஆண்டில் ஒரு மிகக்குறுகிய கால அளவில் மட்டுமே, போர்நிறுத்தம் என்ற கோரிக்கை, தமிழ்நாட்டிலிருந்து ஒருமித்த குரலில் எழுப்பப்பட்டது.
இந்திய பாராளுமன்றத் தேர்தல் காலத்திய அரசியல் கட்சி குழறுபடிகளுக்குள் இலங்கைத் தமிழர் பிரச்சினை சிக்கிச் சிதறுகாயானது. இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிவுக்கு வந்தது இலங்கையிலோ, போர் நிறுத்தம் நிகழவில்øல் போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு வெற்றிப் பெருமிதத்தோடு அறிவித்தது.
விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள பின்னணியில், இன்றைய தமிழகத்து அரசியலில் இலங்கைத் தமிழர் பிரச்சினையின் மூன்று மையமான அம்சங்கள் விவாதப்பொருளாக இடம்பெற்றுள்ளன.
ஒன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் குறித்த செய்திகள்.
இரண்டு முள்வேலி ·காம்களில் சிக்கி உள்ள ன்று இலட்சம் அகதிகளின் வாழ்வுரிமைப் பிரச்சினைகள்.
மூன்று இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வழி எது என்ற கேள்வி.
இந்த மூன்றிலுமே தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்கள், வெவ்வேறான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன என்பது வெளிப்படையான உண்மை.
இலங்கைப் பிரச்சினையில் இன்று இந்தியாவில் நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்துள்ள நிலைப்பாடு என்ன? பிரபாகரன் மறைவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த மரணச்சான்றிதழை வழங்கி, ராஜீவ்காந்தி வழக்கை இறுதியாக முடித்து வைக்க உதவ வேண்டும் என்பது இலங்கை அரசுக்கு இந்திய அரசு விடுத்துள்ள கோரிக்கை.
வட இலங்கை முகாம்களில் உள்ள சுமார் மூன்று இலட்சம் தமிழர்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கான 180 நாட்கள் திட்டம் ஒன்றையும், இலங்கை ஜனாதிபதியுடனான கூட்டறிக்கை ஒன்றின் வாயிலாக இந்திய அரசு ஏற்றுள்ளது.
இலங்கையின் அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தோடு தொடங்கி, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதும், அதே கூட்டறிக்கையில் இந்திய இலங்கை அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இவை எதிலும் கடந்த ன்று மாதகாலமாகக் கடுகு அளவு முன்னேற்றம்கூட எட்டப்படவில்லை என்பதும் மறுக்க இயலாத யதார்த்தம்.
இந்தப் பின்புலத்தில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று, இலங்கைக்குச் சென்று அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு, அந்நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேசித் திரும்பியுள்ளது. இது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டில் புதியதொரு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
இலங்கை செல்லும் தி.மு.க. அணியின் எம்.பி.க்கள் குழு மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தூதுக் குழுவா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, தமிழக முதலமைச்சர், இது அரசாங்கத்தின் சார்பில், அரசு செலவில் அனுப்பப்பட்ட குழுவல்ல. அரசு சார்பிலே குழு அனுப்பும் போதுதான் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், துறையின் பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும் என்று விளக்கமளித்தார்.
குழுவிலே சென்ற உறுப்பினர்களது விமானக் கட்டணம் போன்ற செலவுகளைக்கூட அந்தந்தக் கட்சிகள்தான் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது, இது அதிகாரப்பூர்வ தூதுக்குழு அல்லவே அல்ல என்பதற்கான அழுத்தமான சாட்சியமாகவும் முதலமைச்சரால் பதிவு செய்யப்பட்டது.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இலங்கை சென்று நிலைமைகளை அறிந்து வர மத்திய அரசின் வெளியுறவுத்துறை அனுமதித்துள்ளது என்றுதான் அன்றைய தினத்திலே முதலமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.
பிரதமருடனான இந்தச் சந்திப்பு டில்லியில் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற்றது. அப்போது பிரதமருக்கு மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அளித்த மனுவில், இக்கோரிக்கை இடம்பெறவில்லை.
வாய்மொழியாகவே எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டுகோள் விடப்பட்டது. அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வியை எழுப்பிய கட்சியினருக்கு அக்கறை இருக்குமேயானால் அவர்கள் பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்து இந்திய அரசு இலங்கை அரசோடு அதைப் பற்றிக் கலந்தாலோசித்து அனுமதி பெற்றுச் சென்று பார்க்க வேண்டியதுதானே என்று எதிர்க்கேள்வியையும் அவர் எழுப்பி இருந்தார்.
ஆனால், செப்டம்பர் 22ஆம் திகதி முதல் தி.மு.க. அணி எம்.பி.க்கள் இலங்கை சென்று திரும்பிய நாளான ஒக்டோபர் 14ஆம் திகதி வரை வெளியிடப்படாத ஒரு தகவலை முதன்முறையாக, அந்தக் குழுவினரை விமான நிலையத்திலேயே சென்று வரவேற்று, அக்குழுவின் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் தெரிவிக்கையில், இலங்கை ஜனாதிபதி தூதுக்குழுவொன்றை அனுப்பி இலங்கை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் நானே செயற்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசின் கவனத்துக்கு அந்தச் செய்தியைத் தாங்கி இருந்த கடிதத்தை அனுப்பி வைத்தேன் என்று தொடங்கி, டில்லிக்குச் சென்று பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து, ஒரு குழுவை அனுப்பக் கேட்டுக் கொண்டதையும், உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வந்து சந்தித்துக் கலந்து பேசி, 10 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்ததையும், இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்று அந்தக் குழு சென்று திரும்பியதையும், அப்போது விரிவாக எடுத்துக் கூறினார்.
அண்டை நாடு ஒன்றின் ஜனாதிபதி, தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் அதிகாரப்பூர்வமற்ற ஒன்றாக இருக்க முடியாது. அதன் மீது மாநில முதலமைச்சர் முடிவெடுப்பது முறையல்ல என்று உணர்ந்திருந்த தமிழக முதலமைச்சருக்கு, அந்தக் கடிதத்தில் கண்டிருந்த அழைப்பு தனது தலைமையிலான அணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு மட்டுமேயானது என்று எடுத்துக்கொள்வது மட்டும் முறையானதாகத் தெரிந்தது எப்படியோ அந்தக் கடிதம் இன்று வரை பகிரங்கப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளதும் ஏன் என்று தெரியவில்லை.
இது எவ்வாறாயினும், தி.மு.க. அணி எம்.பி.க்கள் இலங்கை சென்று அங்கு முகாம் வாழ் தமிழர்களின் நிலைமைகளைக் கண்டறிந்து வந்ததும், முகாமிலுள்ளவர்களை மீண்டும் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தும் பணி தொடங்கப்பெறும் என்பதும் குறைகாணப்பட வேண்டிய விடயங்களாகப் பார்க்கப்படுவது தமிழக அரசியலின் இன்றைய எதிர் எதிர் நிலைப்பாடுகளின் வெளிப்பாடே.
ஆனால், ஒரு குழுவாகச் சென்று திரும்பி, மாநில முதலமைச்சர் மூலமாக அறிக்கையொன்றை வெளியிட்டு முடித்ததுமே, அந்தக் குழுவில் இடம்பெற்ற ன்று கட்சிகளும் ஒருமித்த செயற்பாட்டைத் தொடர முடியவில்லையே? கலைஞருக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்து மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒருபுறம், தொல். திருமாவளவன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்துக்கு அறைகூவல் விடுவது மறுபுறம், மத்திய அரசின் சார்பில் ப.சிதம்பரத்தைத் தவிர குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட வேறு யாரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் வாய் திறக்காது மௌனம் சாதிப்பது மூன்றாவது புறம் என்று நவக்கிரகப் பார்வை வெளிப்படுகின்றதே.
யுத்தகளத்தில் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்துவிட்டு வந்து, தற்போது முள்கம்பிச் சிறைக்குள் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத துயரத்தை அனுபவிக்கிற முகாம்களிலுள்ள மக்களை உடனடியாகச் சொந்த இடங்களில் குடியமர்த்தி, சிதைந்த தேசத்தை அபிவிருத்தி செய்து, இழந்த வாழ்வைக் கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள் என்றும், நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வுரிமையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள் என்றும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் துயரந் தோய்ந்த மன்றாட்டங்களை மத்திய அரசின் செவிகளுக்கு எட்டச் செய்து, அதிகாரபூர்வமான செயற்பாடுகளில் இறங்குவதற்கான நிர்பந்தத்தை உருவாக்க வேண்டிய தருணம் இது.
தமிழக அரசியலின் கட்சி விளையாட்டுக்களைத் தாண்டி இந்த நிர்பந்தத்தை உருவாக்க முற்படுவோமா!
Dinamani
0 விமர்சனங்கள்:
Post a Comment